Published : 25 Dec 2023 06:10 AM
Last Updated : 25 Dec 2023 06:10 AM

Rewind 2023 - கவனம் ஈர்த்த இந்திய, சர்வதேச பொருளாதார நிகழ்வுகள்

இந்தியாவின் தலைமையில் ஜி20: சர்வதேச பொருளாதாரத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஜி20 கூட்டமைப்பில் 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பொருளதார பிரச்சனைகளுக்கும் தேவையான தீர்வுகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த கூட்டமைப்புக்கு தலைமையேற்று நடத்தும் ஓராண்டுக்கான (டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை) வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. டெல்லியில் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9-10 தேதிகளில் பிரதமர் மோடி தலைமையில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது.

சாட்ஜிபிடி சாம் ஆல்ட்மேன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) சாட்ஜிபிடி செயலி 2023-ல் வெளியாகி அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கல்வி, மருத்துவம், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் உடனடியாக தனது நிறுவனத்தில் இணையுமாறு ஆல்ட்மேனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், ஆல்ட்மேன் பதவி விலகலால் பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பாதகமான தாக்கங்களால் ஆல்ட்மேனை மீண்டும் பணிக்கு வருமாறு ஓப்பன் ஏஐ அழைப்பு விடுத்தது. இது அவரின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

அதானியை ஆட்டம் காணச் செய்த ஹிண்டன்பர்க்: 2023 ஜனவரி மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கார்ப்பரேட் உலகுக்கு பேரிடியாக அமைந்தது. அதானி குழுமம் நிர்வாக நடைமுறையிலும், பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. உடனடியாக அந்த குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்டு அர்னால்டு, எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை கவுதம் அதானி பிடித்திருந்தார். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதையடுத்து அதானி அந்தப் பட்டியலில் 25-வது இடத்துக்கு பின்தங்கினார். தற்போது அதானி பங்குகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டு வருகின்றன.

4 லட்சம் கோடி டாலரைத் தொட்ட பங்குச் சந்தை: இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு முதன் முறையாக நவம்பர் மாதத்தில் 4 லட்சம் கோடி டாலரை (சுமார் ரூ.333 லட்சம் கோடி) தொட்டது. இதையடுத்து, சர்வதேச அளவில் இந்திய பங்குச் சந்தை 5-வது இடம் பிடித்தது.கடந்த 2007-ம் ஆண்டு 1 லட்சம் கோடி டாலராக இருந்த இந்த மதிப்பு, 2017-ல் 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. ஒரு லட்சம் கோடி டாலர் அதிகரிக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆனால், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியால், அடுத்த 4 ஆண்டுகளில் (2021) 3 லட்சம் கோடி டாலரை எட்டியது. இதுபோல மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 2023-ல் (டிசம்பர் 22 வரையில்) 16.25% அதிகரித்து 71,107 புள்ளிகளை எட்டி உள்ளது. நிப்டி 17.32% அதிகரித்து 21,349 புள்ளிகளை எட்டி உள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்தது. இதனால், அந்த நாடு தங்களுக்கு தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள முடியாத சூழலில் உள்ளது. இந்த நிலையில், நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் அந்த நாடு உதவியை நாடி உள்ளது. தக்காளி, வெங்காயம், அரிசி, காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகினர். உணவுப் பொருட்களை வாங்க முண்டியடிக்கும் கூட்டங்களில் சிக்கி பலர் பலியானதும் நெருக்கடியின் கொடூரத்தை உணர்த்தின.

பென்டகனை விஞ்சிய சூரத் வைர மையம்: அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன்தான் உலகின் மிகப்பெரிய அலுவலகங்களைக் கொண்ட கட்டிடமாக இருந்து வந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் சூரத் வைர வர்த்தக மையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த 1943-ம் ஆண்டு திறக்கப்பட்ட பென்டகன் 65 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த வைர வர்த்தக மையம், 35.54 ஏக்கரில், 67 லட்சம் சதுர அடியைக் கொண்டது. இதில் தலா 15 மாடிகளைக் கொண்ட 9 பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, பென்டகனை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக அலுவலகங்களைக் கொண்ட மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது சூரத் வர்த்தக மையம்.
அமெரிக்காவின் எஸ்விபி வங்கி திவால்

அமெரிக்காவின் கலிபோர்னி: யாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மிகப்பெரிய சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) திவாலானது. இது உலக வங்கித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வங்கி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திடீரென தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதால் அந்த வங்கி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. இந்த வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவீதம் வரை சரிந்ததையடுத்து அதனை மூட அந்நாட்டு கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது. இதையடுத்து, திவால் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ரிசர்வ் வங்கி 2023 மே மாதத்தில் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நோட்டுகளை வங்கிகளில் எளிதாக மாற்றிக் கொள்ள போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. அதிக அளவில் கருப்பு பணமாக பதுக்கியவர்களுக்கு செக் வைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.2023 மார்ச் நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடி. இது மொத்தகரன்சிகளில் 10.8 சதவீதம் மட்டுமே. ஆனால், 2018, மார்ச் 31 அன்று இத்தகைய நோட்டுகளின் புழக்கம் அதிகபட்சமாக ரூ.6.73 லட்சம் கோடி என்ற அளவில் காணப்பட்டது.

அரிசி ஏற்றுமதியும் இந்தியாவின் தடையும்: உள்நாட்டில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், இருப்பை அதிகரிக்கும் வகையிலும் ஜூலை, ஆகஸ்ட் மாத வாக்கில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் மக்கள் பீதியடைந்து அங்குள்ள மளிகைக் கடைகளில் குவிந்தனர். பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது, கரோனா காலகட்டத்தை நினைவுபடுத்தியது. அரிசி ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்புடன் உலக சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவின் இந்த தடை ஏழை நாடுகளில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதை விலக்கி கொள்ள வேண்டும் என உலக உணவு அமைப்புகள் மட்டுமின்றி, பல நாடுகளும் கோரிக்கை விடுத்தன.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x