Published : 29 Jan 2018 11:49 AM
Last Updated : 29 Jan 2018 11:49 AM
டிரைவர் தேவைப்படாத கார், டிரைவர் இல்லாத டிரக் என ஆட்டோமொபைல் துறையில் அடுத்த கட்ட வளர்ச்சி. அதிவேக பயணத்துக்கு ஹைப்பர் லூப், விண்வெளிச் சுற்றுலா என வியக்க வைக்க உள்ளன எதிர்கால பயணங்கள். செயற்கை நுண்ணறிவில் சொந்தமாக பேசும், சிரிக்கும், பதில் சொல்லும் சோபியா ரோபோ என நாளுக்கு நாள் புத்தம் புது முயற்சிகளில் உலகம் சென்று கொண்டிருக்கிறது. வர்த்தக உலகம் மட்டும் வாளாவிருக்குமா என்ன.... பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை திறந்து ஆச்சர்யத்தை அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.
வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்கெட்டுக்குள் வரலாம். பொருளை எடுக்கலாம், போய்க் கொண்டே இருக்கலாம். இப்படி ஒரு கற்பனை கடையை நினைத்து பார்க்க முடியுமா என இதுவரையில் கேட்ட கேள்விகளுக்கு அமேசான் கோ மூலம் முடிவு கட்டிவிட்டது அமேசான் நிறுவனம்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அமேசான் கோ சூப்பர் மார்க்கெட். இங்கு பணியாளர்கள் இருப்பதில்லை. வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான பில் போட தேவையில்லை, முக்கியமாக பில் போட வரிசையில் நிற்கவும் தேவையில்லை.
சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் அனுபவத்தை தொழில்நுட்பங்கள் மூலம் அமேசான் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் சில்லரை வர்த்தகத் துறையிலும் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
எப்படி இயங்குகிறது
அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் முழுவதும் சென்சார் தொழில்நுட்பங்களால் நிர்வகிக்கப்படுகிறது. மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு கொள்ளும். வாடிக்கையாளர்கள் எடுக்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்யும்.
இறுதியாக வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே போகும்போது, அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான தொகையை மட்டும் கணக்கிடும். இந்த பில் அவர்களது ஸ்மார்ட்போன் செயலிக்கு செல்லும். தவிர பொருட்களுக்கான தொகை செயலியில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.
முக்கியமாக வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு பில் போடுவதற்கான கவுண்டர்களே இந்த சூப்பர் மார்க்கெட்டில் இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போனில் அமேசான் கோ செயலி இருக்க வேண்டும். கடைக்குள் நுழையும்போது ஸ்மார்ட்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர் அனுபவம்
வாடிக்கையாளர்களை பின்தொடரும் பணியாளர்கள் தொந்தரவு இல்லை. முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் புதிய அனுபவத்தை வழங்குகிறது. கடைக்குள் எந்த இடத்திலும் எந்த பொருளையும் எடுக்கலாம். நீங்கள் ஒரு பொருளை எடுத்து ஷாப்பிங் பையில் வைத்தால் ஸ்மார்ட்போன் பில் பட்டியலில் சேரும். திடீர் மனமாற்றத்தில் அந்த பொருள் உங்களுக்கு தேவையில்லை என திரும்ப வைத்தால் விர்ச்சுவல் பட்டியலில் இருந்து நீங்கிவிடும்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் பில் போட அதிக நேரம் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதாலும், அதிவேகமாக பொருட்கள் வாங்கும் அனுபவத்தை தருவதாலும் அமேசான் கோ நல்ல வரவேற்பைப் பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சாத்தியமான கனவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் எதுவும் சாத்தியம் என நிரூபித்துள்ளது அமேசான். கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்கான தொழில்நுட்பங்களை அமேசான் உருவாக்கி வந்தது. சோதனை முயற்சியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி இந்த சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக தங்கள் நிறுவன ஊழியர்களை கொண்டு சோதனை முயற்சியை மேற்கொண்டு வந்தது.
2017-ம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த சூப்பர் மார்கெட்டை திறப்பதுதான் திட்டம். ஆனால் சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கான காலதாமதம் ஆனது என்கிறார் அமேசான் கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கியானா பெருனி
``சோதனை முயற்சியின்போது பல சிக்கல்களை சந்தித்தோம். குறிப்பாக ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்டவர்களை பிரித்தறிவதில் சென்சார் குழப்பம் இருந்தது. அதுபோல சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை கையாளும் வாடிக்கையாளர்கள் அதை திரும்ப இடம் மாற்றி வைத்து விடுவார்கள். அதுபோல குழந்தைகள் ஒரு இடத்தில் எடுக்கும் பொருளை வேறு இடத்தில் மாற்றி வைப்பதால் ஏற்படும் குழப்பங்கள் இருந்தன. அது போன்ற சிக்கல்களையும் சந்தித்தோம். இப்போது அவற்றுக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டன`` என்று குறிப்பிடுகிறார் பெருனி.
வேலைவாய்ப்பில் தாக்கம்
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பில் போடுவதற்கான காசாளர் கூட இல்லாத நிலையில் அமேசான் கோ தொழில்நுட்பம் மனித உழைப்பை அப்புறப்படுத்துகிறது என்கிற குரல்கள் இப்போதே எழத் தொடக்கியுள்ளன.
அமெரிக்க முழுவதும் சுமார் 35 லட்சம் காசாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர வால்மார்ட், காஸ்கோ நிறுவனங்களில் கோடிகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அமேசான் கோ நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இதர சில்லரை வர்த்தக நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கினால் இவர்கள் வேலைவாய்ப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாகும். அமேசான் ஏற்கெனவே தனது கிடங்குகளை முழுவதுமாக தானியங்கி தொழில்நுட்பத்தில்தான் இயக்கி வருகிறது.
நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வுகளை உருவாக்க விரும்புகிறோம் என்று குறிப்பிடும் பெருனி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொழிலாளர்களில் வேலைவாய்ப்பில் சிறிய மாற்றத்தைத்தான் உருவாக்கியுள்ளது, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும், வாடிக்கையாளர்கள் தேடும் பொருளை காட்டுவதற்கு உதவி செய்யவும் பணியாளர்கள் இருப்பார்கள். உணவுப் பொருட்களை தயார் செய்யவும், அவற்றை உரிய வரிசையில் வைக்கவும் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
ஆளே இல்லாத கடையில் பொருள் திருட்டு நடப்பதற்கான வாய்ப்புகளையும் முற்றிலும் தடுத்துள்ளது அமேசான் கோ. ஸ்மார்ட்போன் செயலி இல்லையென்றால் கடைக்குள் நுழைய முடியாது. பொருளை எப்படி மறைத்தாலும் நான்கு பக்கமிருந்தும் கேமரா உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்து கொண்டே இருக்கும்.
அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய உணவு அங்காடியான ஹோல் புட் மார்கெட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டமில்லை என்று கூறியுள்ளது. ஆனால் பிற சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை விற்கும் சாத்தியம் இருப்பதாக சொல்கின்றனர் வல்லுநர்கள். தொழில்நுட்பம் மனித உழைப்பை இரண்டாம்பட்சமாக்குகிறது. அதே தொழில்நுட்பம்தான் மனித வாழ்க்கையையும் இலகுவாக்குகிறது என்றால் மிகையில்லை.
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT