Published : 22 Jan 2018 11:28 AM
Last Updated : 22 Jan 2018 11:28 AM
60,
65 வயதிற்கு மேற்பட்டோருக்குள்ள முக்கியக் கவலைகளில் மூன்றைச் சொல்லுங்கள் என்று உங்களைக் கேட்டால், என்ன சொல்வீர்கள்? பிள்ளைகள் செட்டிலாகி விட்டாலும் கூட, முதியோரின் பிரச்சினைகள் வித்தியாசமானவை அல்லவா? அது இந்த சின்ன வயசுக்காரர்களுக்கு எங்கே புரியப் போகுது?
முதலில் தேவைப்படுவது பணம் என்கிறீர்களா? சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்ட செய்தி. தனது ஒரே மகனைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து, அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்பினார் ஒரு பெண்மணி. மகன் அங்கேயே தங்கி விட்டான். இங்கே பூர்வீகச் சொத்துகளைப் பார்த்துக் கொண்டு அவற்றின் வருமானத்தில் காலம் தள்ளிக் கொண்டிருந்தாள் அம்மா.
10 ஆண்டுகள் கழித்துத் திடீரென மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. `அங்கே தனியாகச் சிரமப் படாமல் இங்கே வந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்’ எனச் சொல்லக் கேட்டாள். மனதில் பல எண்ண ஓட்டங்கள்.`மருமகளுக்கு ஆயா வேலை செய்யத் தான் கூப்பிடுகிறானோ? இருக்கட்டுமே! கணவன் இறந்து விட்டார். தனிமைச் சிறை போல வாழ்க்கை இங்கே. கடைசிக் காலத்தை அனாதை போல் கழிப்பதை விட, அங்கே போய் இருந்தால், இறந்தால் அவன் கையால் கொள்ளியாவது போடுவானே’ என நினைத்து சரியென்றார்!
இந்தியாவிற்கு 15 நாட்கள் வந்து தங்கிய மகனின் உதவியுடன் எல்லா சொத்துகளையும் விற்று டாலர்களாக மாற்றினார்கள்.இரண்டு விமான டிக்கெட்டும் வாங்கி விமான நிலையத்திற்குச் சென்றார்கள். மகனின் பரிவிலும் பாசத்திலும் உருகினாள் அன்னை. இரவு 11 மணி. `அமெரிக்கா செல்லும் நாம், இனி திரும்ப மாட்டோம்.வீடு, தோட்டம் , நிலபுலன்கள் எல்லாம் பணமாக்கி மகனிடம் கொடுத்தாச்சு. பிறந்த மண்ணை இனியொரு முறை பிறந்தால் தான் பார்க்க முடியும்’ என்கிற கனத்த மனத்துடன் காத்திருந்த அன்னையை உட்கார வைத்து விட்டு `5 நிமிஷத்தில் வருகிறேன்’ என்று கழிவறை சென்ற மகன் திரும்பவே இல்லை! விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த பொழுது மகன் மட்டும் விமானத்தில் சென்று விட்டது தெரிந்தது!
ஏமாற்றப்படுவது என்பது யாருக்கும் வருத்தமளிப்பது. முதிய வயதிலோ, அதிக வேதனை அளிப்பது. அதுவும் தன் சொந்தப் பிள்ளையிடமே ஏமாந்தால் எப்படி இருக்கும்? `நன்றியில்லாத பிள்ளைகள் விஷப் பாம்பைக் காட்டிலும் கொடியவர்கள்’ என ஷேக்ஸ்பியர், கிங் லியர் நாடகத்தில் சொல்வது உண்மை தானே?
தனக்கு மிஞ்சித் தானேங்க தானமும் தர்மமும்? தாயும் பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு அல்லவா? கடைசிக் காலத்துக்கு வேண்டியதைப் பாதுகாப்பாக எச்சரிக்கையாக வைத்துக் கொள்ளணும்ல? சரி, முதியோருக்கு அடுத்து முக்கியமானது உடல் ஆரோக்கியம் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்காது.
வயதான காலத்தில் வேளா வேளைக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைக்கணும். எல்லோருக்கும் மகன் வீட்டில், மருமகளின் பாசம் கிடைப்பதில்லையே! பசித்தவுடன் சாப்பாடு கிடைக்கப் புண்ணியம் செய்து இருக்கணும்! ஆனால், பலரோ அப்பளத்தைக் கிழித்துச் சாப்பிடும் எடுப்புச் சாப்பாட்டின் நிலையிலேயே இருக்கிறார்கள் !
வயதானவர்களின் மூன்றாவது தேவை என்ன? எழுத்தாளர் சிவசங்கரியின் வீடியோ ஒன்று தற்பொழுது வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு அவர் அமெரிக்காவிற்கு, அந்த அரசின் விருந்தினராகச் சென்றிருந்தாராம். அவருக்கு ஊர் சுற்றிக் காண்பிக்க ஒரு பெண் வழிகாட்டியை ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்களாம். காலையில் புறப்படத் தயாரான பொழுது வந்து சேர்ந்தவரைப் பார்த்ததும் அவர் அசந்துவிட்டாராம்!
காரணம், வந்தது ஓர் 82 வயதுப் பெண்மணி! ஆனால் குடுகுடு கிழவியாக இல்லை! மாறாக, துறுதுறு சிறுமியைப் போல், போட்டிக்குக் கிளம்பும் விளையாட்டு வீராங்கனையைப் போல் சுறுசுறுப்பாய் இருந்தாராம்! தினமும் சளைக்காமல் சுற்றிக் காண்பித்த அந்தப் பெண்மணி, சிவசங்கரி அவ்வப்போது கேட்ட சந்தேகங்களில் சிலவற்றைத் தீர்க்க முடியாததால், அவர் இந்தியா திரும்பிய பின், தான் மீண்டும் தீவிரமாகப் படிக்கப் போவதாகச் சொன்னாராம்!
அந்த வீடியோவில் சிவசங்கரி சொல்வது போல முதியோரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உடலளவில், மனதளவில் இயங்கிக் கொண்டிருப்பது. அதாவது வயதானாலும் ஆணோ, பெண்ணோ ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.வெறுமை கூடாது!யார் கையையும் எதிர்பார்க்காமல் இருப்பது தானே நிம்மதி?
`வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகியவை மிகவும் கொடுமையானவை ' என்கிறார் சாணக்கியர்! வாழ்க்கைத் துணைவியை, துணைவரை, பணத்தை, உடல்நலத்தைப் பத்திரமாகப் பாத்துக்குவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT