Published : 25 Dec 2017 03:47 PM
Last Updated : 25 Dec 2017 03:47 PM
பு
த்தாண்டில் தனது 23-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது டபிள்யூ டி ஓ எனப்படும் உலக வர்த்தக அமைப்பு. அமெரிக்காவில் தலைமையிடம் இல்லாத ஓரிரு சர்வதேச அமைப்புகளில் இதுவும் ஒன்று என்ற சிறப்பும் இதற்கு உண்டு. சர்வதேச அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வதற்கான கொள்கைகளை வகுக்கும் டபிள்யூ டி ஓ-வின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இந்த அமைப்பு தேவையா என்ற கேள்வியோடு தனது அதிகாரத்தையும் இழந்து வருகிறது.
தங்கள் நாட்டில் தலைமையகம் இல்லை என்ற ஒரு காரணத்துக்காகவே டபிள்யூ டி ஓ அமைப்பை புறந்தள்ளும் போக்கைக் கையாண்டு வருகிறது அமெரிக்கா. வல்லரசான அமெரிக்காவின் ஒத்துழையாமை இந்த அமைப்பின் அதிகார வரம்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. டபிள்யூ டி ஓ-வின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சமும் வளரும் நாடுகளிடையே உருவாகி வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போரில்லா உலகம் படைப்போம் என்ற சூளுரையோடு, நாடுகளிடையே வர்த்தகத்தை மேற்கொள்ள ஒரு சர்வதேச அமைப்பு தேவைப்பட்டது. அப்போது 23 நாடுகள் இணைந்து பொதுவான வர்த்தக பரிவர்த்தனை ஒப்பந்தம் (காட்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.1948-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1995-ம் ஆண்டில் `காட்’ பெயர் மாற்றப்பட்டு டபிள்யூ டி ஓ- வானது. 123 நாடுகள் இதன் அங்கத்தினர்களாயினர்.
`காட்’ அமலில் இருந்தபோது நாடுகளிடையிலான சரக்குகளுக்கான வரி விகிதம் 22 சதவீத அளவுக்கு இருந்தது. வரி விதிப்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகளை முடக்குகிறது என்ற கோரிக்கை வலுக்கவே வரி விகிதம் படிப்படியாகக் குறைந்து தற்போது 5 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பு நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடி நாடுகளிடையிலான வர்த்தகத்தின் போக்கு, எந்தெந்த வகைகளில் பிரச்சினைகள் உருவாகின்றன,அவற்றைத் தீர்ப்பது எப்படி என்று விவாதிப்பார்கள். குறிப்பாக டபிள்யூடிஓ-வின் கொள்கைகளை வகுப்பார்கள். நாடுகளிடையிலான தாராள வர்த்தகத்தை பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் இம்மாத தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கூட்டங்களை விட இரண்டு வகையில் வேறுபட்டிருந்தது இந்தக் கூட்டம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன் தனக்கான விதிகளை அதாவது பன்முக வர்த்தகத்துக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டது. மற்றொருபுறம் டபிள்யூ டி ஓ அமைப்பின் பன்முக வர்த்தகத்தால் தங்கள் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால் அமெரிக்காவின் வாதங்கள் இதில் முன்னிலை பெறாமல் போனது. இதனால் இந்தக்கூட்டத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு முற்றிலும் இல்லாத சூழல் உருவானது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் எட்டப்பட்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற டபிள்யூடிஓ கூட்டங்கள் அனைத்துமே முந்தைய கூட்டங்களைக் காட்டிலும் ஓரளவு முன்னேற்றத்தை எட்டி அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது. மானியங்கள் அளிப்பது, உணவு பாதுகாப்பு, வேளாண் மானியம் ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் டபிள்யூடிஓ கூட்டங்கள் ஓரளவு அர்த்தமுள்ளதாக இருந்தன.
ஆனால் நாடுகள் இப்போது வெளிப்படையாகவே வர்த்தக பேரம் பேசத் தொடங்கிவிட்டன. தங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்க, அதேசமயம் அதற்கு இடையூறாக இருக்கும் டபிள்யூடிஓ விதிகளை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டன. இதுவே சர்வதேச வர்த்தகத்துக்கு விதிகளை வகுக்கும் அமைப்பாக விளங்கிய டபிள்யூடிஓ-வுக்கு பெரும் சரிவாக அமைந்துவிட்டது.
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு மானிய உதவி அளிப்பதை தடுக்கும் சட்டத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை என்று ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டதிலிருந்தே டபிள்யூடிஓ-வின் பலவீனம் புலனாகும்.
மேலும் டபிள்யூடிஓ அமைப்பின் விதிமுறைகள் மிகவும் சிக்கலாக இருப்பதும் பிரச்சினையை பெரிதாக்கி வருகிறது. வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதிகள் 1995-ம் ஆண்டிலிருந்தே டபிள்யூ டி ஓ-வில் இருந்தாலும், இந்த தளர்வு விதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதான குற்றச்சாட்டும் எழுந்துவிட்டது.
தங்கள் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகள் டபிள்யூடிஓ விதிமுறைகளுக்கு எதிரானது என்று சிறிய நாடுகளான பார்படாஸ், ஆன்டிகுவா ஆகியன வெகுண்டெழுந்து தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இதற்கு டபிள்யூடிஓ தீர்வு காணும் முயற்சியில் இறங்கியதால் ஓரளவு டபிள்யூடிஓ மீதான நம்பிக்கை துளிர்த்தது.
இந்த சமரச தீர்வானது பரஸ்பர ஆலோசனை, உயர்நிலைக் குழுவின் ஆய்வு, மேல் முறையீட்டு ஆணையத்தின் விதிமுறைகள் என நீண்டு அதை அமல்படுத்துவது என்ற நிலையை எட்டுவதற்கு நீண்ட காலம் பிடித்தது.
வர்த்தகம் தொடர்பான முறையீடு இருந்தால் அதை மேல் முறையீட்டு அமைப்பு ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை அளிக்கும். இதை சமரச தீர்வு அமைப்பு (டிஎஸ்பி) அப்படியே ஏற்கும். இதை ஏற்றால் டபிள்யூடிஓ விதிமுறைகள் மீறப்பட்டதாக டபிள்யூடிஓ அமைப்பு அறிவிக்கும். அதேபோல தீர்வு அமைப்பு பரிந்துரைத்த விதிமுறைகளை பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட நாடுகளை டபிள்யூடிஓ வலியுறுத்தும்.
தீர்வு அமைப்பு அளித்த பரிந்துரை, அதை அமல்படுத்த டபிள்யூடிஓ வெளியிட்ட வலியுறுத்தல் இவை எதையுமே அமெரிக்கா கண்டு கொள்வதில்லை. உதாரணத்துக்கு காட் ஒப்பந்தத்துக்கு எதிரான அமெரிக்காவின் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, டபிள்யூடிஓ 20 கோடி டாலர் அபராதத்தை ஆன்டிகுவா, பார்படாஸுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அமெரிக்கா இதுவரை 20 லட்சம் டாலரை மட்டுமே அளித்துள்ளது.
டபிள்யூடிஓ விதிகளை அமெரிக்கா மதிப்பதேயில்லை என்பதாக தென்கொரியாவின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை. தென்கொரிய தயாரிப்புகளான சலவை இயந்திரங்கள் மீதான டபிள்யூடிஓ விதிமுறையை 15 மாதங்களாகியும் அமெரிக்கா நிறைவேற்றவில்லை.
இதேபோல மூன்றாம் தரப்பு நாடுகளிடையிலான சமரசம் தொடர்பாகவும் அமெரிக்காவின் நிலைப்பாடு டபிள்யூடிஓ விதிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு எதிராக கத்தார் தொடுத்த வர்த்தக விதிமீறல் சர்ச்சை புகாரில், டபிள்யூடிஓ விதிகளை பின்பற்ற முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல டபிள்யூடிஓ சமரச தீர்ப்பாய நீதிபதிகள் நியமன விஷயத்தில் பங்கேற்க முடியாது என்று அமெரிக்கா கூறியது டபிள்யூடிஓ-வுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகோபித்த கருத்தொற்றுமை அடிப்படையில்தான் டபிள்யூடிஓ உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் போக்கு, உறுப்பினர் நியமனத்தையே கேள்விக்குறியாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளரும் நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிக்கப்படும்போது அவை நாடுவது சமரச தீர்ப்பாயத்தைத்தான். ஆனால் பொதுவாக இந்த விதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவால், வளரும் நாடுகள் கடுமையாக பதிக்கப்படுகின்றன.
`அமெரிக்காதான் பிரதானம்’ என்ற அதிபர் ட்ரம்பின் நிலைப்பாடு முதலில் காவு வாங்கியது டிரான்ஸ் பசிபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தைதான். இப்போது டபிள்யூடிஓ-வின் விதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி மலினப்படுத்தி வருகிறது. இந்த போக்கானது சர்வதேச வர்த்தகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாகியுள்ளது.
டபிள்யூடிஓ-வின் வீழ்ச்சி சர்வதேச வர்த்தகத்துக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கும். எல்லை தாண்டிய வர்த்தகம் சாத்தியமாகாமல் போகும். வலைதளம் பரந்து விரிந்தாலும் வர்த்தகம் சுருங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT