Last Updated : 18 Dec, 2017 10:00 AM

 

Published : 18 Dec 2017 10:00 AM
Last Updated : 18 Dec 2017 10:00 AM

சபாஷ் சாணக்கியா: எப்படித்தான் நம்புவதோ...?

முத்துக்குளித்தல் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பியை எடுத்துக் கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.விஞ்ஞான உபகரணங்களின் துணையின்றி பண்டைக் காலத்தில் தென்தமிழ் நாட்டில் நடந்த இந்தத் தேடுதல் வியப்பானது!

ஒரே மூச்சில் 100அடி வரை நீந்தி ஆழமான கடல்படுகையில் சிப்பிகளைச் சேகரிப்பார்களாம்! தண்ணீரில் குதிப்பவர் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மறு முனையை நீர்ப்பரப்பில் தோணியில் இருக்கும் ஒருவர் கையில் பிடித்திருப்பார்.இருவரும் கயிற்றை ஆட்டி சமிஞ்ஞையில் பேசிக் கொள்வார்கள்!

நீரில் மூழ்குபவர் சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக்களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போட்டுக்கொள்வார். சுறா போன்றவற்றால் ஆபத்து என்றாலோ, மூச்சு விடுவதில் சிக்கல் என்றாலோ கயிற்றை ஆட்டுவார். உடனே குறிப்பறிந்து படகில் இருப்பவர் தண்ணீரில் குதித்தவரை வேகமாக மேலே இழுத்து விடுவார்.தாமதித்தால் உயிருக்கே ஆபத்து!

பல சமயங்களில் கயிற்றை, கடலினுள் குதிப்பவரின் மைத்துனரிடம் கொடுத்து விடுவர். அவர் தன் சகோதரியின் தாலிக் கயிற்றைக் விட்டு விட மாட்டார் அல்லவா? தண்ணீரில் குதிப்பவர் மேலே இருப்பவரை நம்பித் தானே தன் உயிரையே பணயம் வைக்கிறார்? அன்றாட வாழ்வில் இதற்கு எதிர்மாறான நிகழ்வுகளும் உண்டு!

பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் சென்னையில் ஒரு வங்கிக் கிளையின் மேலாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். பழைய கட்டிடம். பல இடங்களில் கீறல் விழுந்து இருந்தது. இடத்தை மாற்றுவது தாமதமாகிக் கொண்டே இருந்தது.

ஒரு சனிக்கிழமை மாலை திடீரென்று பின்புற கேட்டில் தடால் எனப் பெரிய சத்தம். எல்லோரும் பதறியபடி என்னவென்று பார்க்க ஓடியிருக்கிறார்கள். அங்கே கட்டிடத்தின் பின்புறம் பால்கனி இடிந்து விழுந்து கிடந்தது! நல்ல வேளை யாருக்கும் காயமில்லை. நண்பருக்கு தலைகால் புரியவில்லை. வங்கியின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டு, மற்ற பணியாளர்களைக் கூப்பிட்டு இன்னென்ன செய்வோம் எனத் திட்டமிட்டார். ஆனால் இருவரது நடவடிக்கைகள் அவருக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது!

ஒருவர், `எனக்குத் திடீரென்று தலைவலியாக இருக்கிறது. காய்ச்சல் வருமென்று நினைக்கிறேன். ஒரு வாரம் விடுப்பில் போகிறேன்’ என்றார். மற்றவரோ, 'காலையிலேயே சொல்ல மறந்து விட்டேன். என் மனைவிக்கு மருத்துவ ஆய்வுக்குச் செல்ல வேண்டும். ஏழு நாள் விடுப்பில் போக வேண்டும்’என்றார்!

அவர்கள் சொல்லாமல் சொல்லியது இதுதான். `வங்கியின் சம்பளம், மற்ற சௌகரியங்களை அனுபவிப்போம். ஆனால் ஏதேனும் சிரமம் வந்தால் எங்களை எதிர்பார்க்காதீர்கள், அது உங்கள் பாடு. `இல்லை, எல்லோருமாகச் சேர்ந்து இந்த இக்கட்டிலிருந்து வெளிவர வேண்டும், விடுப்பு வேண்டாம்’ என நண்பர் மறுத்தும், பிரச்சினைகள் தீர்ந்த பின்னே தான் அவர்கள் பணிக்குத் திரும்பினார்கள்!

`இருட்டினில் நண்பனுடன் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதைக் காட்டிலும் இதமானது ' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர்! நண்பருக்கு நேர்ந்தது போன்ற அனுபவம் நம்மில் பலருக்கும் பல சமயங்களில் நடந்திருக்கும். நம்பகத்தன்மை இல்லாத மனிதர்களை என்னவென்று சொல்வது? `நான் இருக்கிறேன் உன்னுடன். என்ன சிரமம் வந்தாலும் பரவாயில்லை. அஞ்ச வேண்டாம்' எனும் அணுகுமுறை வேண்டுமல்லவா?

நீர் வற்றிய குளத்தை விட்டுப் பறந்து போகும் பறவைகள் போல, சிரம காலம் வந்தவுடன் காணாமல் போகிறவர்கள் மனிதர்களா? இந்தக் கணவன் மனைவி உறவையே எடுத்துக் கொள்ளுங்கள். குறை சொல்லும், நச்சரிக்கும், பேசியே கொல்லாமல் கொல் லும் மனைவி இருந்தால் என்ன சாதிக்க முடியும்? அதேசமயம் கணவனுக்கு உண்மையான நண்பனாக உற்ற துணையாக இருக்கும் மனைவி அமை ந்து விட்டால், வேறென்ன வேண்டும்?

சில சமயங்களில் கணவர் தொழிலில் தொடர்ந்து நஷ்டப்படலாம். அது அவரது முட்டாள்தனத்தால் அல்ல, போதாத நேரத்தால் எனும் பொழுது, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, தன் நகைகளை, ஏன் தாலியைக் கூடக் கழட்டிக் கொடுத்து அவரை மீண்டும் முன்னுக்கு வரச் செய்த பெண்கள் பலர் இருக்கிறார்கள்!

உலக வாழ்க்கை இனிமையாக அமைய தனி மனித உறவுகள் சரியாக இருக்க வேண்டும். சற்றே சிந்தித்தால் நமது மனித உறவுகள் அனைத்தையுமே பணியாளர்கள், சொந்தங்கள், நண்பர்கள், மனைவி எனும் நான்கு வகைகளுக்குள் அடக்கி விடலாம்! இந்த உறவுகள் அனைத்திற்குமே நம்பகத்தன்மை ஓர் அடிப்படைத் தகுதி! இந்த நால் வகையானவர்களையும் சரியாக அடையாளம் தெரிந்து கொள்ள சாணக்கியர் காட்டும் வழியைப் பாருங்கள்!

பணியாளருடைய சுயரூபத்தை அவர் பணிசெய்யும் பொழுதும், உறவினரை நாம் சிரமப்படும் பொழுதும், நண்பனை நமது கஷ்ட காலத்தின் பொழுதும், மனைவியை நமது துரதிர்ஷ்ட சூழ்நிலையின் பொழுதும் தெரிந்து கொள்ளலாம்!

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x