Published : 04 Dec 2017 11:18 AM
Last Updated : 04 Dec 2017 11:18 AM

புதிய ஓய்வூதிய திட்டம் லாபமா?

ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் சுய சார்பாகவே வாழ நம்பிக்கை அளித்தது ஒய்வூதியம். பணிஓய்வுக்கு பின்னர் கவுரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தரவாதம் அளித்தது. அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் தனது வாழ்வில் முதுமை காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்புகளிலிருந்து மீளவும், வறுமையை எதிர்த்து போராடவும் வழங்கப்படுவதுதான் ஓய்வூதியம். 1995-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசே அளித்து வந்தது. ஓய்வுக்கு முன்னரான ஐந்து ஆண்டு சம்பள சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. பின்னர் பணியாளரின் ஓய்வூதியத்தை பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டமாக மத்திய அரசு மாற்றியமைத்தது.

1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சட்டத் திருத்தத்தின்படி பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1999,2004 எல பல்வேறு கட்டங்களாக புதிய ஓய்வூதிய திட்ட பலன்களை அளிப்பதில் பல நடைமுறைகளை அரசு கொண்டு வந்தது.

குறிப்பாக 2004 ம் ஆண்டுக்கு பின்னர் மத்திய அரசுப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும்.

இப்படி கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி , தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து இதற்கான பங்களிப்பு பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது தொழிலாளர்களுக்கான நிறுவனத்தின் பங்களிப்பு தொகையிலிருந்து 8.33 சதவீதம் (அடிப்படைஊதியம் + இதர அலவன்சுகள்)பிடிக்க இந்த சட்டம் வகை செய்தது. அதே நேரத்தில் ஓய்வூதிய நிதிக்கான அதிகபட்ச பங்களிப்பு ரூ.1,250 தான் என்றும் வரையறுத்தது. மேலும் தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதிய பிடித்த தொகையை 20 ஆண்டுகள் கழித்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனை எதிர்த்து தொழிலாளர்கள், தொழில்சங்க அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் சென்றன. பணிஓய்வு பெற்ற பிறகு அளிக்கும் ஓய்வூதியத்தை கருணைத் தொகையாக பார்க்க வேண்டாம். அது சட்டரீதியானது. ஓய்வூதியம் என்பது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட செலவினம் என்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அரசு தங்களது நிதிச் சுமையிலிருந்து விலக புதிய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. இது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. அதை வழங்கவேண்டியது கடமை என்பது இவர்களது கோரிக்கை.

இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்திய டாக்டர் காயத்ரி குழு, ஓய்வூதிய திட்ட ஒதுக்கீட்டில் 54.75 சதவீத தொகை பாதுகாப்பு துறைக்கு செலவு செய்யப்படுகிறது என்றும் சொல்லியது.

பங்குச் சந்தையில் முதலீடு

இந்த புதிய திட்டத்தின்படி பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் ஆணையம் திட்டமிட்டது. இதற்கான நிதியை கையாள தனியாக குழுவும் அமைத்தது. இப்படியாக கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தினையும், தொழிலாளர்களின் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் தொழிலாளர்களின் ஒரு சார்பினர் தொடர்ச்சியாக எதிர்த்தே வந்தனர்.

ஆனால் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு கிடைக்கும் ஓய்வூதிய தொகையை விட, சந்தை முதலீடுகளின் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். இது தொழிலாளர்களின் ஓய்வு காலத்தை சிறப்பாக்கும் என்றும் வைப்பு நிதி அணையம் கூறியது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்த முயற்சிகளின் மூலம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகை சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 வது சம்பள கமிஷன் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த அளவுக்கு ஓய்வூதியம் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு உதாரணம்

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி தனது ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும் என்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்படி வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த பிரவீண் கோலியின் ஓய்வூதியம் தற்போது 1200 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர் ஹரியாணா மாநில சுற்றுலாத்துறையில் பொது மேலாளராக இருந்துள்ளார். அவரது பென்ஷன் தொகை ரூ.2,372 ஆக இருந்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்ட கணக்கின்படி இனி அவருக்கு ரு.30,592 கிடைக்கும் என்கிறார். தனது பென்ஷன் திட்டத்தை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என கோலி உச்ச நீதிமன்றத்தை நாடியதையடுத்து, இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இந்த தீர்ப்பினால், தொழிலாளர்களின் ஓய்வூதிய பிடித்தத்தை அதிகரிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. தவிர ஓய்வுபெற்ற ஊழியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இப்படி வழக்கு தொடுத்த அனைவருக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை அளித்துவிடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எப்படி கணக்கிடப்படுகிறது

இபிஎப் விதிகளின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனம் 12 சதவீத பங்களிப்பை செய்கிறது. இதில் 8.33 சதவீத தொகை ஓய்வூதியத்துக்கு செல்கிறது. தற்போது 15,000 மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர் அனைவரும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய தகுதி உடையவர்கள். முன்பு இந்த அளவு ரூ.6,500 ஆக இருந்தது. தவிர இபிஎப்ஓ விதிகளின்படி இதற்கு முன்னர் இந்த சம்பளத்திலிருந்து ஓய்வூதியம் பிடிக்கப்பட்டவில்லை. ஆனால் 1995-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி ஓய்வூதியத்துக்கான பிடித்தம் நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து 8.33 சதவீதமாக (அடிப்படைஊதியம் + இதர அலவன்சுகள்)பிடிக்க வகை செய்தது. அதே நேரத்தில் ஓய்வூதிய நிதிக்கான அதிகபட்ச பங்களிப்பு ரூ.1,250 தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமானால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பங்களிப்பு ஓய்வூதிய முறையின் உச்ச வரம்பு தொழிலாளர்களை ஈர்க்கவில்லை. இது சிறந்த வாய்ப்பை அளிக்கவில்லை என்றும் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் 1996-ம் ஆண்டில் ஒருவர் சேர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதைய அவரது அடிப்படை சம்பளம் ரூ.6,000 ஆக இருக்கிறது. ஆண்டுக்கு 8 சதவீத சம்பள உயர்வு என்றால் 33 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் ஓய்வு பெறுகையில் அவரது பங்களிப்பு ஓய்வூதியம் 12.93 லட்சமாக இருக்கும். இந்த கணக்கு வருங்கால வைப்பு நிதி 1996-ம் ஆண்டிலிருந்து வழங்கிய 8.5 சதவீத வட்டியுடன் கணக்கிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவர் தனது ஓய்வு காலத்தில் மாதம் ரூ.5,182 ஓய்வூதியம் பெறுவார்.

ஓய்வூதியம் அதிகரிக்குமா

ஆனால் மாற்றப்பட்ட விதிகளின்படி இந்த ஓய்வூதிய தொகையை சந்தைகளில் கடன் திட்டங்களில் ஆணையம் முதலீடு செய்யும் .இதன் மூலம் அவருக்கு சந்தை வருமானத்துக்கு ஏற்ப சிறந்த ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு சிலர் மட்டுமே இது குறித்து அறிந்திருந்தனர். ரூ.2,000 அல்லது ரூ.3,000 மட்டுமே பெற்று வருபவர்களும் இந்த சீர்திருத்ததை அச்சத்துடனேயே கவனித்து வருகின்றனர். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் தங்களது ஓய்வூதிய பலன்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே நிறுவனங்களின் பங்களிப்பை நிறுவனங்களே கையாளுவதற்கு ஏற்ப விலக்கு அளிப்பது மற்றும் இபிஎப்ஓ பிடித்தத்தை முழுமையாக வழங்கவும் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது. இதிலும் 40 சதவீத தொகையை எடுத்துக் கொள்வதற்கு காலக்கெடு, வட்டி வருமானத்துக்கான வரி என பல நடைமுறைகளை வைத்துள்ளது. தவிர வைப்பு நிதியில் 85 சதவீதம் வரை மட்டுமே தொழிலாளர் ஓய்வுக்கு பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். 15 சதவீத தொகை சந்தையில் முதலீடாகவும் இருக்கும்.இந்த கணக்கை தொழிலாளர்களே நேரடியாக நிர்வகிக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்குப் பின்னர், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பிடித்தம் செய்யும் தொகையை அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் விரும்புவர். இதற்கான விண்ணப்பம் அதிக அளவில் வரும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. இதற்கான நடைமுறைகளையும் வேகப்படுத்தியுள்ளது. எனினும் புதிய திருத்தங்கள் என்கிற பெயரில் உரிமைகள், கடமைகளிலிருந்து விலகக்கூடாது. அல்லது மாற்றங்களை பாதுகாப்பதற்கே என்பதை உணர்த்த வேண்டிய பொறுப்பும் ஆணையத்துக்கு உள்ளது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x