Last Updated : 27 Nov, 2017 11:04 AM

 

Published : 27 Nov 2017 11:04 AM
Last Updated : 27 Nov 2017 11:04 AM

சபாஷ் சாணக்கியா: சிரித்து வாழ வேண்டும்!

சி

ல வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். மேலாளர் எனது நண்பர். நாங்கள் அவரது தனி அறையில் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, மேலாளர் திடீரென எழுந்து வெளியே சென்றார். அங்கே சேமிப்புக் கவுண்டரில் 65 வயது மதிக்கத்தக்கப் பெரியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைச்சுற்றி மூன்று பேர்!

பெரியவர் தயங்கினாலும் அவரை வற்புறுத்தி தன் அறைக்கு அழைத்து வந்து விட்டார் மேலாளர்.மிகவும் எளிமையாக இருந்த அவரை மேலாளர் அறிமுகமும் செய்து வைத்தார். அவர் அவர்கள் வங்கியின் தலைமையகத்தில் எழுத்தராகப் பணி செய்தவராம். ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அவருக்கு அங்கே நடந்த உபசரிப்பைப் பார்த்து அசந்து விட்டேன். ஒருவர் பணம் வாங்கிக் கொடுத்தார். வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்தார்.மேலாளரோ தனது குடுவையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார்!

`அடாடா, என்னவொரு மரியாதை, பணி நிறைவு செய்த ஒரு எழுத்தருக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார்களே' என்று எண்ணிக் கொண்டேன். அது சமயம் வேறு ஒரு பெரியவர் மேலாளரின் அறைக்குள் நுழைய கதவைத் தள்ளினார். அவருக்கும் 60,62 வயது மதிக்கலாம். கோட்டும் ஷூவும் அணிந்திருந்தார். நம்ம மேலாளர் அவரிடம் `வணக்கம் குமார் ஐயா, ஐந்து நிமிடங்கள் காத்திருக்க முடியுமா ?' எனக்கேட்டதும் முகம் வாடி வெளியே நாற்காலியில் போய் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து விட்டார் அவர்!

நான் கிளம்பட்டுமா என்றதற்கு, `நீங்கள் சும்மா உட்காருங்கள். உள்ளே வரப் பார்த்தவர், எங்கள் வங்கியில் தலைமையகத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர்தான். அவர் அப்பொழுது அங்கே போடாத ஆட்டமா? அதிகாரம் தூள் பறக்கும்.

நடு இரவில் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றால், அதற்கும் அலுவலகச் செயலாளரை கூப்பிடும் மமதை கொண்டவர். எப்பவும் சிடுசிடுப்புத்தான். நாம் அவரைப் பார்க்கச் சென்றால், பந்தாவுக்காகவே நம்மைக் காக்க வைப்பார். இப்பொழுது பதவி இல்லை, அதிகாரம் இல்லை. யாரும் அவருக்கு அலட்டிக் கொள்வதும் இல்லை' என்றார். தொடர்ந்து `இப்பொழுது உள்ளே அழைத்து வந்தேனே இவரும் தலைமையகத்தில் பணி புரிந்தவர்தான். ஆனால் எல்லோரையும் மரியாதையுடன் நடத்துவார். அவரால் முடிந்த வரை உதவுவார். அல்லது வழிகாட்டுவார். அவர் இருந்த காலம் ஒரு பொற்காலம். மறக்க முடியாது. எனவே இவருக்கு மகிழ்ச்சியாகச் சேவை செய்கிறோம் ' என்றார்!

`நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால், உயிர்கள் உன்னை வணங்கும்' என்றார் கண்ணதாசன்!

அண்ணே, உண்மையான, நிலையான மரியாதை என்பது நாம் நடந்து கொள்ளும் விதத்தினால் கிடைக்குமே தவிர பதவியினால் அல்லவே!

அப்புறம், பலருக்கு இந்த எரிச்சல் படும் குணம் வேறு. அல்வா திண்ணவும் அலுத்துக் கொள்பவர்கள். 'என்னத்தைக் கண்ணையா ' ரகம்!

அவர்களிடம் பேசுவதை, பொறுப்பைக் கொடுப்பதை மற்றவர்கள் தவிர்ப்பது இயற்கை தானே? ' நமது அன்றாட வேலைகளில் உற்சாகம் காட்டுவதால், முயற்சிகள் எளிதாகி, கடினமான பணிகளும் இனியதாகின்றன ' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின்! வயலில் நாற்று நடுபவர்கள் பாட்டுப் பாடுவது அதனால் தானே?

கோவைப் பகுதியில் ஒரு பெரும் கட்டிடத்தொழில் அதிபர். பல ஊர்களில் குடியிருப்புக்கள் கட்டுபவர். பல நூறு கோடிகள் புழங்கும். சில தவறுகளும் நடப்பதுண்டு! அப்படித் தவறு செய்பவர் ஒருவரைக் கண்டுபிடித்த பின் அந்தத் தொழிலதிபர் நடந்து கொண்ட விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மனுஷன் கத்தவில்லை. பதட்டப்படவில்லை. அவரைக் கூப்பிட்டுத் தோளில் கை போட்டார். அமைதியாக `தம்பி , நீ செய்தது பெருந்தவறு. ஒரு வாரத்திற்குள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டால் உன்னை இத்துடன் விட்டு விடுகிறேன் ' என நல்லவிதமாகவே பேசினார். அதைக் கேட்ட அந்த மோசடிப் பேர்வழி, பெரும்பகுதி பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்!

அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், அடங்காத தொழிலாளர்கள் என எவரிடமும் தனது இன்முகத்தாலும் இனிய பேச்சாலுமே எதையும் சாதித்துக் கொள்பவர் அவர்!

ஆங்கிலத்தில் affable person, good disposition என்பார்கள். தமிழில் இனிமையானவர் என்கிறோம். அத்தகையவர்களுடன் தான் ' வாங்க பழகலாம்' என்போம் இல்லையா? இதில் படிப்பு, பதவி, பணம் என்பவையெல்லாம் பின் தள்ளப்பட்டு விடுகின்றன!

அடிப்படையில் மனித நேயக் குணங்களான அன்பு,பண்பு, இன்சொல் ஆகியவையே முன் வருகின்றன அல்லவா? அங்கு அவர்களது உடையோ நகையோ ஒரு பொருட்டல்லவே!

இதைப் பற்றி சாணக்கியர் கூறும் மந்திரம் என்ன?

`இனிமையாய்ப் பழகுவது என்பது எவருக்கும் அவசியமான குணமாகும். நல்லவர் எனும் பெயரே நல்ல அணிகலன் ஆகும்! '

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x