Published : 13 Nov 2017 11:08 AM
Last Updated : 13 Nov 2017 11:08 AM
நா
ன் வங்கியில் பணியாற்றிய பொழுது ஓர் உயரதிகாரியின் மகளுக்குச் சென்னையின் மிகப் பெரிய மண்டபத்தில் திருமணம். அவரே மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அத்துடன் நேர்மையானவர். மேலதிகாரிகள் பலரும் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து சொந்த வீட்டு விசேஷம் போல மாங்கு மாங்கென்று வேலை செய்து கொண்டிருந்தனர்!
முதல் நாள் மாலை வரவேற்பிற்கு சூட் கோட்டில் ஆஜராகியிருந்தோம்! பதவி உயர்வோ, இடமாற்றமோ, வெளிநாட்டுப் பயிற்சியோ எதுவாக இருந்தாலும் உடனே சம்மதம் கிடைத்து விடும் போலத் தோன்றியது! மொய் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? காதைக் கொடுங்கள்!
விருந்து ஏற்பாடு தடபுடலாக இருந்தது. அந்த சப்போட்டா கேசரியும், பேபிகார்ன் பஜ்ஜியும், இளநீர்ப் பாயாசமும் இன்னும் ஞாபகத்தில் சுவைக்கின்றன! மறுநாள் திருமணத்தில் கருவேப்பிலைக் குழம்பையும், அன்னாசிப்பழ ரசத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க என்றார்கள் அனுபவசாலிகள்!
சரி, நாளைக்கு ஒரு பிடி பிடிப்போம் என நினைத்துக் கொண்டு தங்குமிடத்திற்குத் திரும்பினோம். வழியெல்லாம் மறுநாள் எந்த உடை அணிவது, எந்த உயரதிகாரியைப் பார்த்து என்ன கோரிக்கை வைப்பது என்பது பற்றியே பேச்சு! பின்னே என்னங்க, பல பேரை ஒரே இடத்தில் பார்த்து விடலாமே? சந்தர்ப்பத்தை நழுவ விட முடியுமா?
அப்பொழுது தான் அந்தச் செய்தி வந்தது! எங்களுடன் கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவரான முனியாண்டி எனும் மேலாளர் தொலைபேசியில் கூப்பிட்டார். அவரின் 80 வயது தந்தை சென்னையில் திடீரென்று மாரடைப்பினால் இறந்து விட்டார் என்றும், அதனால் தனக்கு அந்தக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்டிருந்த பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னார்! குரல் தழுதழுத்தது!
இரவு மணி பத்து. ஒன்றும் புரியவில்லலை. ஜாலியாக இருக்க வந்த இடத்தில் இப்படியா? அது சமயம் எனது மற்றொரு நண்பர் ஜோஷி, `நடந்தது நடந்துவிட்டது. நாம் இருவரும் கல்யாணத்திலிருந்து கழண்டு கொண்டு விடுவோம். நாளை மண்டபத்திற்குப் போகவே வேண்டாம். அத்துடன் இந்தச் செய்தியைக் கல்யாணத்திற்கு வந்திருப்பவர்கள் யாரிடமும் சொல்லவும் வேண்டாம். அவசர வேலையாகப் போவதாகச் சொல்லி விடுவோம்' என்றார்.
இரவே மற்ற நண்பர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டு அவ்வாறே சொல்லி விட்டோம்! மறுநாள் காலை நேரே முனியாண்டி வீட்டிற்குச் சென்ற பொழுது ஆட்கள் மிகக்குறைவு. முகூர்த்த நாள் என்பதால் உறவினர்கள் கூட அதிகமில்லை. ஈமச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்தோம். ஆனால் சலித்துக் கொள்ளவே இல்லை! ஐயா, நம்புங்கள்.
கல்யாண வைபவங்களையும், தடபுடல் விருந்தையும், மேலதிகாரிகளையும் மிஸ் பண்ணியது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!ஆத்ம திருப்தி எனும் வார்த்தைக்குப் பொருள் புரிந்தது! எல்லாப் புகழும் ஜோஷிக்கே!
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் இது போல அனுபவப்பட்டு இருப்பீர்கள். பிரதிபலன் எதிர்பாராமல், நாமாகச் செய்யும் உதவிகள் மனத்திற்கு விவரிக்க முடியாத இதம் அளிப்பவை அல்லவா?
சமீபத்திய பேட்டி ஒன்று படித்திருப்பீர்கள். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு பெண் அதிகாரி, தன் பணிநிறைவுப் பணத்திலிருந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்!
எவ்வளவு கருணை பாருங்கள்! `நாம் மற்றவர்களுக்கு பணத்தைக் கொடுத்து உதவுவதில் மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடாது. பணம் மட்டும் போதாது, பணத்தைக் கொடுக்க பலர் தயாராக இருக்கலாம். ஆனால் உண்மையில் அரிதானது அன்பும் ஆதரவும்தான். எனவே அதையும் கொடுங்கள்' எனும் அன்னை தெரசாவின் கூற்றும் சிந்திக்க வேண்டியது!
உதவி செய்வதற்கு நல்ல மனமும் அல்லவா வேண்டும்? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே 30 பேர் அடங்கிய இரத்த தானம் வழங்கும் குழு நடத்தி வந்தார். அவசரத்திற்குக் கூப்பிட்டால், எந்த குரூப் இரத்தமும் உடனே ஏற்பாடு செய்து விடுவார்!
கண் தானத்தையே எடுத்துக்குங்க. இந்த உலகை விட்டுப் போன பின்பும் நம்மால் ஒருவருக்கு உதவ வழி செய்கிறதே! அது சரி, இந்த மனித நேயம் திடீரென்று வராதே? குழந்தைகளை சிறு வயது முதலே தண்ணீர்ப் பந்தல், அன்னதானம் என்று பழக்கப்படுத்தினால் தானே வளர்ந்த பின் பிறர்க்கு உதவும் மனப்பான்மை இருக்கும்!
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர். சமூக அக்கறை அதிகம் உள்ளவர். தன் மகனுக்குப் பிறந்த நாள் என்றால், கேக்கும், சாக்லெட்டும் அருகில் உள்ள அனாதை இல்லத்திற்கும் தவறாமல் கொடுப்பார்! அது மட்டுமில்லைங்க. மாதம் ஒரு முறை முதியோர் இல்லங்களுக்கு, மருத்துவ மனைகளுக்குச் சென்று ஆறுதலாகப் பேசுவார்!
`நறுமலர்களின் வாசம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே செல்லும். ஆனால் நல்மனம் கொண்டவர்களின் செயல்கள் அனைவருக்கும் பயனளிக்கும்’ எனும் சாணக்கியர் கூற்று பிரதிபலனை எதிர்பாராமல் உதவுபவர்களுக்குப் பொருந்துகிறதல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT