Published : 06 Nov 2017 11:25 AM
Last Updated : 06 Nov 2017 11:25 AM
பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட 2.11 லட்சம் கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனம் செய்யப்பட இருக்கிறது. வாராக்கடன் பிரச்சினையால் தவித்து வந்த பொதுத்துறை வங்கிகளுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான். எப்படி இந்த முதலீடு அளிக்கப்பட இருக்கிறது? இந்த முதலீட்டால் பொதுத்துறை வங்கிகள் மீளுமா? இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? என்பன குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியிருக் கிறது.
மறுமூலதனம் எப்படி?
பொதுவாக வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பது இரண்டு வகைகளில் நடைபெறும். ஒன்று, வங்கிகளின் பங்குகளை அரசு வாங்கிக் கொண்டு மூலதனத்தை அதிகப்படுத்தும். இந்த நடைமுறை இந்தியாவில் 1990-ம் ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்டது. மற்றொன்று வங்கிகளின் வாராக்கடன் சொத்துகளை அரசே வாங்கிக்கொண்டு வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்கும். இந்த இரண்டு நடவடிக்கை மூலமாக மட்டுமே வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்த முடியும்.
வாராக்கடன் பிரச்சினையால் சிக்கியுள்ள பொத்துறை வங்கிகளை மீட்பதற்காக மத்திய அரசு வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்த உள்ளது. இந்த மூலதனம் இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. 2.11 லட்சம் கோடி ரூபாயில் ரூ.76,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் வங்கிகளுக்கு உள்ள வளத்தை விற்பதன் மூலமாகவும் திரட்டப்பட இருக்கிறது. இந்த 76,000 கோடி ரூபாயில் ரூ. 18,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவும் மீதமுள்ள 58,000 கோடி ரூபாய் வங்கிகளின் பங்குகளை விற்பதன் மூலமாக திரட்டப்பட இருக்கிறது. மேலும் ரூ.1.35 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட இருக்கிறது. மத்திய அரசு கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு அளிப்பது மற்றும் வங்கிகள் கடன் பத்திரங்களை விற்பது என இரண்டு வகைகளில் இந்த நிதி திரட்டப்பட இருக்கிறது.
மூலதனத்தை அதிகரிப்பதால்
நன்மையா?
ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனை சரி செய்வதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் வங்கிகளின் லாபம் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.27,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்துவதால் வாராக்கடனை சரி செய்வதற்கு நிதியை தாராளமாக ஒதுக்க முடியும். மேலும் திவால் சட்டத்தின் மூலமாக வாராக் கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் சொத்து்களை எளிதாக கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்துவதை மற்றொரு விதமாகவும் பார்க்கமுடியும். வங்கிகளும் நிறுவனங்களுக்கு பெரிதாக கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் கடந்த ஓர் ஆண்டாக நிறுவனங்களின் முதலீடு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் தேவை குறைவு, மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு, ஜிஎஸ்டி முறைக்கு மாற்றம் என பல்வேறு பிரச்சினைகளும் முதலீடுகள் குறைந்ததற்கு காரணமாக இருந்தன. தற்போது வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுப்படுத்துவதால் கடன் வழங்கும் சூழல் மேம்படும். நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும் போது வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
தற்போது வங்கிகளில் மூல தனத்தை அதிகப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை என்பது போதுமானது. ஏனெனில் தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் அமைப்பு 2019-ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ₹1.4 லட்சம் கோடி முதல் ₹1.7 லட்சம் கோடி தேவைப்படும் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. மேலும் பேசல் 3 விதிமுறைகளின் படி வங்கிகளின் மூலதன விகிதத்தை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. தற்போது வங்கிகள் மூலதனத்தை அதிகப்படுத்தும் முடிவை எடுத்திருப்பது இந்த இரண்டையும் பூர்த்தி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வாராக்கடன் இனி அதிகரிக்காது
தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசிலின் படி, வங்கி அமைப்புகள் கிட்டத்தட்ட ₹11.5 லட்சம் கோடி வாராக்கடனில் சுழன்று வருகின்றன. எரிசக்தி, கட்டுமானம் மற்றும் ஸ்டீல் ஆகிய மூன்று துறைகள் நொடித்து போனதுதான் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்ததற்கு காரணம். 2018-ம் ஆண்டில் வங்கி அமைப்பில் நிகர வாராக்கடன் அளவு 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ம் ஆண்டில் நிகர வாராக்கடன் அளவு 9.4 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து வாராக்கடன் அளவு அதிகரிப்பது குறையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமான கமாடிட்டிகளின் விலை தொடர்ந்து நிலையாக இருப்பதன் காரணமாக தேவை அதிகரிக்கும். இதனால் நொடிவு நிலையில் உள்ள துறைகள் மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாமல் வங்கிகளின் வட்டி விகிதம் குறைவாக இருப்பது, மூலதனம் அதிகரிப்பது போன்ற காரணங்களால் வாராக்கடன் அதிகரிப்பது குறையும்.
பொருளாதாரம் பாதிக்கப்படுமா?
வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்துவதால் இந்திய பொருளாதாரத்தில் சில எதிர்மறை மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக மத்திய அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. இதனால் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரிக்கும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 0.4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வரியில்லாத வருமானம் ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்ட அளவை விட குறைய வாய்ப்பிருக்கிறது.
பொத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு சதவீதம் 51 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக்கூடாது. ஆனால் தற்போது வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு அதிகப்படுத்தும் போது வங்கிகளில் அரசின் பங்கு சதவீதம் அதிகரிக்கும். ஏற்கெனவே வங்கிகளில் அரசின் பங்குகளை குறைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் கூறி வரும் வேளையில் அதற்கு மாறாக தற்போது இந்த மூலதனம் அதிகப்படுத்தும் நிகழ்வு இருக்கிறது.
வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்தும் முடிவை எடுத்திருப்பது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதை போன்று என்று மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நடவடிக்கை வங்கிகளை மீட்கும் பிரம்மாஸ்திரமா? என்பதற்கு விரைவில் காலம் பதில் கூறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT