Published : 27 Nov 2017 11:05 AM
Last Updated : 27 Nov 2017 11:05 AM
ஒவ்வொரு வகையான முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான கணக்கீட்டு முறை இருக்கிறது. சில கணக்கீட்டு முறைகளைப் பார்க்கும்போது அதிக வருமானம் கிடைப்பதாகத் தோன்றும். ஆனால் உண்மையாக வருமானத்தை பார்த்தால் பெரிதாக இருக்காது. இதுபோன்ற சில கணக்கீட்டு முறைகளை பார்ப்போம்.
முறையற்ற சிஏஜிஆர்
`பிக்ஸட் டெபாசிட்களுக்கு 8% வட்டி மட்டுமே. ஆண்டுக்கு 12% சிஏஜிஆர் (ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம்) இருக்கும்’ மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யவில்லையா என்னும் வாசகம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆனால் 12% சிஏஜிஆர் என்பதை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே உங்களை தற்காத்துக்கொள்ள முடியும். ஆண்டுக்கு 12% வளர்ச்சி என்பது ஒவ்வொரு ஆண்டும் 12% என்று புரிந்துகொள்ளக் கூடாது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், 12% வளர்ச்சி என்பது ரூ.17,623ஆக இருக்கும். ஆனால் இந்த வளர்ச்சி சீராக ஒவ்வொரு ஆண்டும் 12% என இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் ஆண்டில் 25 சதவீத வளர்ச்சி, இரண்டாம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சி, மூன்றால் ஆண்டில் 40 சதவீத வளர்ச்சி, நான்காம் ஆண்டில் 10 சதவீத சரிவு மற்றும் ஐந்தாம் ஆண்டில் 6 சதவீதம் உயர்வு இருந்தால் கூட ஐந்தாம் ஆண்டு முடிவில் 10,000 ரூபாய் முதல் ரூ.17,623 ஆக உயரும். சிஏஜிஆர் என்பது ஒவ்வொரு ஆண்டுக்குமான வட்டி விகிதம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 12 சதவீத சிஏஜிஆர் என்றாலும் எப்போது முதலீடு செய்கிறோம் எப்போது முதலீட்டை வெளியே எடுக்கிறோம் என்பது முக்கியம்.
குழப்பமான ஐஆர்ஆர்
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மொத்தமாக முதலீடு செய்யலாமா அல்லது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாமா என யோசித்து, இரண்டின் வருமானத்தை பற்றி ஒப்பிடுவார்கள். ஆனால் இந்த இரண்டு முறைகளின் வருமானங்களை ஒப்பிடுவதே தவறு. உதாரணத்துக்கு பிரபலமான மைக்ரோகேப் பண்டில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் 31% ஆண்டு வளர்ச்சி கிடைத்திருக்கும். ஆனால் எஸ்.ஐ.பி முறையில் ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் 33.3 சதவீத ஐஆர்ஆர் வருமானம் கிடைக்கும். சதவீத அடிப்படையில் பார்த்தால் 33.3% அதிகம் என்பது போல தோன்றும். ஆனால் தொகை அடிப்படையில் பார்த்தால் உண்மை புரியும்.
உதாரணத்துக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 முதலீடு செய்திருந்தால் தற்போது ரூ.2.31 லட்சம் கிடைக்கும். ஆனால் எஸ்ஐபி முறை மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.1.37 லட்சம் மட்டுமே கிடைக்கும். எஸ்.ஐ.பி முறையில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து, கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாக வைத்து ஒரே வருமான விகிதம் கணக்கிப்படுகிறது. அதனால் ஐஆர்ஆர் விகிதம் அதிகமாக இருப்பது போல தோன்றும்.
பிக்சட் டெபாசிட் விகிதம்
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கான விளம்பரங்களை பார்த்திருப்போம். அதில் ஒர் ஆண்டு டெபாசிட்டுக்கு 8%, இரு ஆண்டு டெபாசிட்டுக்கு 8.32% மற்றும் மூன்று ஆண்டு டெபாசிட்களுக்கு 8.65% என வட்டி விகிதம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதிக காலம் முதலீடு செய்தால் அதிக வட்டி என நினைக்க தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பிக்ஸட் டெபாசிட்டுக்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு ரூ.100 டெபாசிட் செய்தால் ஓர் ஆண்டு முடிவில் 108 ரூபாயாக இருக்கும். இரண்டாம் ஆண்டு முடிவில் 108 ரூபாய்க்கு 8% என்றால் ரூ.116.64, மூன்றாம் ஆண்டு முடிவில் ரூ.125.97 கிடைக்கும். அப்படி என்றால் மூன்று ஆண்டு முடிவில் லாபம் ரூ.25.97. ஆண்டு அடிப்படையில் பார்க்கும் போது 8.65% வட்டி இருக்கும். முதலீடுகளை கவர்வதற்காக இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
வேறு ஒரு உதாரணத்தை பார்ப்போம். வரி சேமிப்புக்காக ஐந்தாண்டு பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்கிறீர்கள். ரூ.10,000 ரூபாய்க்கு 8.5% வட்டி என வைத்துக்கொள்வோம். நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால் நேரடியாக ரூ.3,090 வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கிறீர்கள். அப்படியானால் உங்களின் முதலீடு ரூ.6,910 மட்டுமே. ஐந்தாண்டு முடிவில் ரூ.15,228 கிடைக்கும். நீங்கள் செய்த முதலீடு ரூ.10,000. ஆனால் வரி சேமிப்பை கழித்தால் முதலீடு என்பது ரூ.6,910 மட்டுமே. இந்த தொகையை அடிப்படையாக வைத்து வருமானத்தை கணக்கீட்டால் 17% வட்டி வரும். இது போன்ற கணக்குகளில் ஏமாற வேண்டாம். நீங்கள் கணக்குகளில் பார்க்கும் வருமானத்தை பெற முடியாது என்னும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT