Last Updated : 09 Oct, 2017 10:20 AM

 

Published : 09 Oct 2017 10:20 AM
Last Updated : 09 Oct 2017 10:20 AM

சபாஷ் சாணக்கியா: கனியிருப்பக் காய்...

சி

ல ஆண்டுகளுக்கு முன்பு `டும் டும் டும்' என்று ஒரு திரைப்படம் வந்ததே, ஞாபகம் இருக்கிறதா? மாதவனும் ஜோதிகாவும் நடித்தது. ஜோதிகாவின் தந்தை முரளி, மாதவனின் தந்தை டெல்லி குமாரிடம் தொழிலாளியாக வேலை பார்த்தவர். இவர்கள் இருவர் குடும்பத்தினரும் மாதவன்,ஜோதிகாவிற்குத் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.

கல்யாணத்திற்கு முன்தினம் சம்பந்திகள் இருவரும் சீட்டு ஆட நேரிடுகிறது. ஆனால் டெல்லி குமாரின் குடும்ப டாக்டர் சீட்டாட்டத்தில் செய்த தில்லுமுல்லுவை முரளி செய்ததாகத் தவறாகப் புரிந்து கொள்ளும் டெல்லி குமார், முரளியைத் தாறுமாறாகப் பேசி விடுவார்!

`முதலாளி, முதலாளி' என்று கூப்பிட்டவரையே `சம்பந்தி, சம்பந்தி ' எனக் கூப்பிடச் சொல்லி மகிழ்ந்த டெல்லி குமார், கோபத்தில் ஏதேதோ சொல்லி விட, பூகம்பம் வெடித்துக் கல்யாணமே நின்றுவிடும்!

அப்புறம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதெல்லாம் கண்டபடி திட்டிக் கொள்வார்கள். அதனால் பகை வளர்ந்து கொண்டே போகும். கடைசியில் எதேச்சையாக உண்மை தெரிய வர, முதலாளியே தொழிலாளியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கதறுவார்! யோசிக்காமல் அவசரத்தில் பேசும் கடுஞ்சொற்கள் எவ்வளவு ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டியது இப்படம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. நான் மேலாளராகப் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர் 12 லட்ச ரூபாய்க்கு சில உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்கு அவசரமாகக் கடன் கேட்டிருந்தார். எனது கோட்ட மேலாளருக்குத் தான் அதற்கான அதிகாரம் இருந்தது. நான் அவரிடம் விபரங்களைச் சொல்லி வைத்திருந்தேன். நானும் வாடிக்கையாளரும் பார்க்கச் சென்றதும் உடனே உள்ளே கூப்பிட்டார்.

வாடிக்கையாளர் ஏக டென்ஷனாக இருந்தார். அன்று பணம் கிடைக்காவிட்டால் பல லட்சங்கள் நஷ்டமாகிவிடும். கோட்ட மேலாளர் வாடிக்கையாளரிடம், `உங்கள் தேவையை இவர் விரிவாக எழுதி உள்ளார். அது இருக்கட்டும்.நீங்கள் இப்ப என்ன சாப்பிடுகிறீர்கள்? டீயா,காப்பியா?' எனக் கேட்டார்.

தன் கவலையில் மூழ்கியிருந்த வாடிக்கையாளரோ டக்கென்று `நான் ஒன்றும் இங்கே உங்க காப்பி டீயைக் குடிக்க வரவில்லை. என் கடன் என்னாச்சுன்னு சொல்லுங்க முதலில்’ என்றார்! அப்புறம் என்ன? கிடைக்கவிருந்த கடன் கிடைக்காமல் போனது!

கடினமான ஒரு வேலை, எளிதாக முடியவிருந்த தருணத்தில், வாடிக்கையாளர் தேவையில்லாமல் பேசிய பேச்சால் வீணானது!

அவ்வளவு ஏங்க? இரயில் பயணங்களையே எடுத்துக்குங்க. இரயிலில் ஏறியதும் சிலர் மென்மையாகப் பேச்சைத் தொடங்குவார்கள். `திருச்சி வரையிலுமா, சென்னையா?' என்று கேட்பார்கள்.

சிலரோ உள்ளே நுழைந்ததுமே `இது என் இருக்கை, கீழே உள்ள பெட்டியை உடனே அகற்றுங்கள்' எனும் ரீதியில் பரம்பரைப் பகையாளியிடம் பேசுவது போலக் கடுகடுப்பார்கள். அந்தப் பிரயாணம் முடியும் வரை வேண்டா வெறுப்பும் எரிச்சலும் தான்!

அண்ணே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.ஒருவர் மேல் மற்றவர் காட்டும் காழ்ப்புணர்ச்சியை,எதிர்ப்பை, வெறுப்பை பன்மடங்காக்குவது கடுஞ்சொற்கள் தான்! பேச்சு தொடரும் திசையைத் தீர்மானிப்பது அந்த ஆரம்ப வார்த்தைகள்தான்!

ஒரு கூடைக்கார அம்மாவிடம் கொய்யாப்பழம் வாங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள். `பழசைப் போடாதே, எடையில ஏமாற்றாதே, அநியாய விலை சொல்கிறாய்....' என வித விதமாக எரிச்சல் மூட்டலாம் அல்லது `இது எந்தத் தோப்புக் காய் அம்மா? உள்ளே சிவப்பா இருப்பதைக் கண்டு பிடிப்பது எப்படி? நாட்டுக்கொய்யா உடம்புக்கு மிக நல்லதாமே...'என நட்புப் பாராட்டலாம். அப்ப நிச்சயம் நல்ல காய்களை நமக்கு அந்த அம்மாவே பொறுக்கிக் கொடுத்து விடும்!கொசுறும் கிடைக்கும்!

எனது கோவை நண்பர் நடத்தும் நிறுவனத்தில் ஒருவர் சரிப்பட்டு வரமாட்டார் எனத் தெரிந்த பின், அவரிடம் நண்பர் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.

`இங்க பாருங்க தம்பி. நீங்க ரொம்பக் கெட்டிக்காரங்கதான். ஆனால் எங்க நிறுவனத்திற்கு சரிவரவில்லை. நாங்க உங்களை வெளியில் அனுப்பிச்சதாக இருக்க வேண்டாம். நீங்க வேலையை ராஜினாமா செய்ததா காண்பிச்சுக்குவோம். நீங்க பாட்டுக்கு வெளியில் போய் பிழைச்சுக்குங்க..'

வேலை போவது கசப்பான விஷயம்தான்.அதை மேலும் கசப்பாக்குவதும், ஆக்காததும் நம் கையில் தானே இருக்கிறது?அண்ணே , இனிமையாகப் பேசுவதென்பது ஒரு கலை! அத்துடன் அது சிலர்க்கு இயற்கையாய் அமைந்து விடும் ஓர் இயல்பு. மற்றவர் கற்றுக்கொண்டு பயன்பெறக்கூடிய,வேண்டிய அணுகுமுறை!

தொலைபேசியோ, கைபேசியோ, ஆட்டோ டிரைவரோ, வரிசையில் முன்னால் நிற்பவரோ, முதலாளியோ, பணியாளரோ எங்கும் யாரிடத்தும் இனிமையாய் பேசுங்கள். தேவையில்லாத எரிச்சலை, வெறுப்பைக் குறைக்கலாம்! நல்லெண்ணத்தை வளர்க்கலாம்!' இனிமையாகப் பேசுபவர்களுக்கு எதிரிகள் கிடையாது' என்பது சாணக்கியர் பொன்மொழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x