Published : 16 Oct 2017 10:35 AM
Last Updated : 16 Oct 2017 10:35 AM
நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழக பொருளியல் பேராசிரியர் ரிச்சர்ட் தேலருக்குக் கிடைத்துள்ளது. பிகேவியரல் எகனாமிக்ஸ் (Behavioural Economics) அதாவது போக்குசார் பொருளாதாரம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை சம்பந்தமான அவரின் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
போக்குசார் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், உலகம் முழுவதும் பரவலாக போதிக்கப்படும் நவ செவ்வியல் பொருளியலில் (neo classical economics) உள்ள சில அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனி மனிதர்கள் எவ்வாறு பற்றாக்குறை வாய்ந்த வளங்களை பயன்படுத்தி, தங்களது மிதமிஞ்சிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பது குறித்த பகுப்பாய்வே பொருளியல் ஆகும். இந்த பகுப்பாய்வு சில முக்கிய அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். சந்தை பொருளாதாரத்தில், மனிதன் ஒரு பகுத்தறிவுவாதியாக (rational man) செயல்படுகிறான் என்பது இதன் முக்கியமான காரணியாகும்.
உற்பத்தி, நுகர்வு மற்றும் முதலீடு சார்ந்த முடிவுகள் எடுப்பதில் மனிதன் சிறந்த அறிவாளியாக செயல்படுகிறான். அவனுடைய மூளை ஒரு கம்ப்யூட்டரை போல துல்லியமாக செயல்படுவதுடன், முடிவு எடுக்கும் பட்சத்தில் அனைத்து விதமான தகவல்களையும் தன்னுடைய கம்ப்யூட்டர் மூளையால் ஆராய்கிறான். அப்படி எடுக்கப்படும் முடிவுக்கு நிகர் வேறு முடிவே இல்லை என்று தீர்மானிக்கிறான். முடிவெடுப்பதில் தவறு செய்தால், சந்தை நடவடிக்கை அவனுக்கு நஷ்டத்தை தரலாம். அதாவது ஒரு பகுத்தறிவு மனிதன் தனது பொருளாதார நடவடிக்கைகளில் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை.
நஷ்டம் ஏற்படுவதாக இருந்தால் தவறை உடனடியாக திருத்திக் கொள்வான். தொடர்ந்து செய்யும் தவறுகளினால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகையில், அவனைக்காட்டிலும் அறிவாளிகள் எடுக்கும் முடிவுகளை நாடுகிறான். இதனால் அவனது இழப்புகள் ஈடு செய்யப்படும். அப்படியே தொடர்ந்து தவறு செய்வானாயின், அவன் பகுத்தறிவற்றவன் (irrational) என்று முடிவு செய்யலாம். எனவே பொருளியல் பகுத்தறிவு அற்ற மனிதனது அனுபவத்தை படிப்பது தேவையற்றது.
ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் தன்னுடைய நலனை பெரும்பாலும் தானே உயர்த்திக்கொள்வான். அவ்வாறு உயர்த்துவதற்கு சந்தை பொருளாதார அமைப்பு முறையே சிறந்தது என்றும், அதனால் தனி மனித நடவடிக்கையில் அரசாங்கத்தின் தலையீடு மிக மிக குறைவாகவே இருக்கவேண்டும் எனவும் நவ செவ்வியல் பொருளியல் பரிந்துரைக்கிறது.
மேற்கண்ட வகையில் ஒரு மனிதனது நடவடிக்கைகளை ஆராய்கையில், போக்குசார் பொருளாதார அறிஞர்கள் சில முக்கியமான கேள்விகளை முன்வைக்கின்றனர்.
நடைமுறையில் மனிதன் முடிவெடுப்பதில் மிக்க திறமைசாலி என்றால், எதற்கு அவனுடைய சில முக்கிய முடிவுகள் அவனுக்கே கேடாக அமைகின்றன? உதாரணமாக, ஏன் சில திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன? ஏன் சிலர் தங்களுடைய பொன்னான வாழ்வை சிறையில் கழிக்கின்றனர்? ஏன் சிலர் விபத்தில் இறக்கின்றனர்? ஏன் சிலர் தங்கள் தொழிலில் கோடிகளை இழக்கின்றனர்? ஏன் சிலர் ஏமாற்றத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர்? ஏன் கணிசமான மனிதர்கள் வறுமையில் உழல்கின்றனர்? மனிதனின் மூளை உண்மையிலேயே அபார கம்ப்யூட்டராக இருந்தால் ஏன் அவனால் தன்னுடைய முடிவுகளை துல்லியமாக எடுக்க முடிவதில்லை?
பண்புகள்
உண்மையில், மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும்போது அவர்களது மூளை சூப்பர் கம்ப்யூட்டர் இல்லை என்பதும், அவர்களுக்கு முடிவெடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளது என்பதும் தெரிய வருகிறது. அவர்கள் சில சமூக விதிமுறைகளை கடைபிடித்து முக்கியமான முடிவுகள் எடுப்பதாகவும், அவ்வாறான முடிவுகளில் சில நன்மையிலும் சில வேறு பாதகமாகவும் நிகழ்கிறது.
இந்த இடத்தில்தான் போக்குசார் பொருளியல் (behavioural economics) ஆய்வு தேவையாக உள்ளது. குறிப்பாக மனிதர்களின் நடைமுறை பொருளாதார நடவடிக்கையை புரிந்து கொள்வது, முறையான பொருளாதார கொள்கைகளை வகுப்பதற்கும் அவன் எந்தெந்த சூழலில் எத்தகைய முடிவை எடுக்கிறான், தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள எவ்வாறான வரைமுறைகளை கடை பிடிக்கிறான் என்பதையும் விளக்குகிறது. மேலும் எங்கெங்கெல்லாம் அரசாங்கத்தின் தலையீடு அவசியம், என்ன விதமான தலையீடு அவசியம், இந்த நடவடிக்கைகள் மூலம் சந்தை பொருளாதாரத்தை எவ்வாறு செம்மை படுத்தலாம் போன்ற முக்கியமான கருத்துக்களை முன்னிறுத்துவதுதான் இந்த போக்குசார் பொருளாதார ஆய்வு. இந்த போக்குசார் பொருளியல் ஆய்வு முறைக்கு குறிப்பிடத்தக்க ஆக்கமும் ஊக்கமும் சேர்த்ததில், பேராசிரியர் தேலர் பங்கு இன்றியமையாதது!
வித்தியாசம்
நவ செவ்வியல் பொருளியலுக்கும், போக்குசார் பொருளியலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு வாஷிங் மெஷின் வாங்க முடிவெடுப்பதாக வைத்துக்கொள்வோம். சந்தையில், ஏராளமான நிறுவனங்களின் பிராண்டுகள் உள்ளன. ஒரே நிறுவனத்தின் வாஷிங்மெஷினில்கூட ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. நவ செவ்வியல் பொருளாதாரத்தின்படி, இயந்திரம் வாங்குபவர் ஒரு பகுத்தறிவு மனிதன் ( rational man) என்பதால் இயந்திரம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் திரட்டியிருப்பார். அவற்றை தனது கம்ப்யூட்டர் மூளைக்கு அனுப்பி ஒரு மிகச் சிறந்த வாஷிங்மெஷினை வாங்குவார் என கூறலாம்.
அனால், நடைமுறையில் இந்த மாதிரியான முடிவு எடுக்கப்படுவதில்லை. `பக்கத்து வீட்டுக்காரர் சொன்னால் சரியாக இருக்கும்' என்ற ஒரு எளிதான கட்டை விரல் விதியை (rule of thumb) பயன்படுத்தி இயந்திரம் வாங்கப்படுகிறது. அனைத்து தகவல்களையும் சேகரித்து அதை அலசி ஆராய போதிய நேரமும் திறமையும் இல்லை என்பதால் மனிதர்கள் பெரும்பாலும் கட்டை விரல் விதியையே பயன்படுத்துகின்றனர்! அதாவது ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு மனிதர்களுக்கு உதவி கிடைக்காத பட்சத்தில் சமூகமும், அரசாங்கமும் எவ்வாறு உதவும் என்பதை போக்குசார் பொருளியல் கண்டுபிடித்தது.
பேராசிரியர் தேலர், போக்குசார் பொருளியலுக்கு மூன்று முக்கியமான பங்கை அளித்துள்ளார். அவற்றில் ஒன்று, வரையறைக்குட்பட்ட பகுத்தறிவு (limited rationality).
புற்று நோய்க்கு அரசு புதிதாக ஒரு திட்டத்தை தயாரித்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இத்திட்டத்தின் மூலம் 1000 புற்று நோயாளிகளில் 900 பேரை காப்பாற்ற முடியும். ‘இந்த திட்டத்தை நீங்கள் வரவேற்பீர்களா’ என்று கேட்ட பட்சத்தில் பெருவாரியான பேர் வரவேற்றனர். இப்போது கேள்வியை மாற்றியமைத்து, புற்று நோய்க்கான அரசின் திட்டத்தில் 1000 புற்று நோயாளிகளில் 100 பேர் இறப்பார்கள், ‘இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா’ என கேட்கப்படுகிறது. இதற்கு பெருவாரியானவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.! இரண்டு கேள்விகளிலும், காப்பற்றப்படும் நோயாளிகள் 900 ஆகவும் இறக்கும் நோயாளிகள் 100 ஆகவும்தான் உள்ளனர். ஒரு பகுத்தறிவு மனிதன் (rational man) கேள்வியை எவ்வாறு மாற்றிக் கேட்டாலும் விடையை சரியாகத்தான் சொல்லுவான். ஆனால் நடைமுறையில் விடை மாறுபடுகிறது. இதைத்தான் வரையறுக்கப்பட்ட பகுத்தறிவு என்று அறியப்படுகிறது.
இன்னொன்றையும் கவனியுங்கள். கேள்வியை கேட்ட விதம் மாறுபடுவதால் பதிலும் மாறுபடுகிறது. இது மக்கள் ‘சட்டக விளைவு’ (framing effect) என்ற பிம்பத்தால் பாதிக்கப்படுபடுகிறார்கள் என்று பொருள். இந்த பிம்பத்தை பயன்படுத்தி மக்களின் நடவடிக்கைகளில் விரும்பிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது போக்குச்சார் பொருளியலின் வாதம். உதாரணமாக, சிகரெட் பாக்கெட்களில் புற்றுநோய் பாதித்தவர்களின் சிறிய படத்தை போடுவதற்கு பதிலாக, பெரிய அளவு படத்தை போடுவதன் மூலம் மக்களிடம் சிகரெட்டின் கேடுகளை எளிதாக கொண்டு செல்ல முடியும். படத்திலுள்ள செய்தி ஒன்றுதான், இருப்பினும் பெரிய படத்தை மக்கள் கொஞ்சம் கடுமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் சட்டக விளைவு சொல்வது.
தேலரின் அடுத்த பங்களிப்பு மனிதனின் சுய கட்டுப்பாடின்மை (self-control problem) பற்றியது. நம்மில் பெரும்பாலானவர்கள், மறுநாள் காலை 4 மணிக்கு எழ அலாரம் வைத்து 8 மணிக்குத்தான் எழுவோம்! அதேபோல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றை கடைசி நாளோ அல்லது அதற்கு பிறகு அபராதத்தோடுதான் செலுத்திக்கொண்டிருக்கிறோம்! மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள காலம் தாழ்த்துகிறோம். டெங்கு வந்த சிலர் உடனே மருத்துவரிடம் செல்லாமல் இறப்பில்கூட முடிகிறது. இவையெல்லாம் சுய கட்டுப்பாடு இல்லாததால் வரும் பிரச்சினைகள்!
அதுபோல், சேமிப்பு என்பது எதிர்காலத்தில் நம்மை காப்பாற்றுவது. ஆனால், நம்மில் பலர் சம்பளம் வாங்கியவுடன் செலவு செய்து விட்டு, சேமிப்பை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று அலட்சியமாக உள்ளோம். இது hyperbolic discounting னால் வருவது – அதாவது, செலவின் தற்போதைய பயனை அதிகமாகவும், சேமிப்பின் வருங்கால பயனை குறைவாகவும் மதிப்பிடுவது. ஆனால், அடுத்த மாதம் வரும்போது மறுபடியும் முழு சம்பளத்தையும் செலவு செய்து விடுகிறோம். சேமிப்பே நடப்பதில்லை! இதற்கு preference reversal என்று பெயர். சுய கட்டுப்பாடின்மை hyperbolic discounting மற்றும் preference reversal ஆல் ஏற்படுவது. இதை தூண்டுதல் (nudging) மூலம் சரி செய்ய வேண்டும்.
பெருவாரியான மக்கள் செலவு செய்த பின் சேமிப்பதால், அவர்களால் சேமிக்க முடிவதில்லை. நாம் முன்னரே பார்த்தது போல், மக்கள் சட்டக விளைவால் பாதிக்கப் படுவதால், அவர்களிடம் `சேமித்த பின் செலவு செய்யுங்கள் ' என்று சொல்வதன் மூலம் சேமிக்கும் பழக்கத்தை தூண்ட முடியும். மேலும், மாத வருமானம் வாங்குபவர்களுக்கு கட்டாய சேமிப்பு திட்டம் என்பது அவர்களின் சுய கட்டுப்பாடு சம்பந்தமான பிரச்சினையை தீர்க்க உருவாக்கப்பட்டதே. மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய அரசு கொண்டு வந்த ஜன் தன் யோஜனா திட்டத்தை இங்கு குறிப்பிடலாம்.
மூன்றாவது பங்களிப்பு, மன கணக்கியல் (mental accounting) பற்றியது! சுயகட்டுப்பாடு சார்ந்த பண பிரச்சினைகளை சரி செய்ய, மனிதர்கள் சில நடவடிக்கைகள் எடுக்கின்றனர். உதாரணமாக, வரும் வருவாயில் ஒரு பகுதியை குடும்ப செலவுக்காகவும் மற்றொரு பகுதியை மகளின் திருமணத்திற்காகவும் பிரிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு சில மாதங்களில் குடும்ப செலவு அதிகமாக ஆகும் பொழுது மகள் திருமணதிற்கான பணத்தில் கை வைக்க வேண்டி வரும். இது திருமணத்தையே பாதிக்கலாம். இதை தவிர்க்க, திருமணத்திற்கான பணத்தை வங்கியில் தொடர் வைப்பு நிதியாக சேமித்து விடுவது. இவ்வாறாக மக்களின் மனக்கணக்கியலை அறிவதன் மூலம், அதற்கு தக்க கொள்கைகளை உருவாக்கி அதன்மூலம் அவர்களை அநாவசிய செலவிலிருந்து காப்பாற்ற முடியும்.
நவ செவ்வியல் பொருளியல், மனிதன் எவ்வாறு மூளை மற்றும் அறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கிறான் என்பதை ஆராய்கிறது. போக்குசார் பொருளியலோ, மூளை மற்றும் உளவியல் சார்ந்த முடிவுகளை எவ்வாறு எடுக்கிறான் என்பது பற்றியது. போக்குசார் பொருளியலை அறிவதன் மூலம் சாதாரண குடும்ப பிரச்சினை முதல் நாட்டின் வளர்ச்சி சார்ந்த கடினமான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வு காண முடியும் என்பதை பேராசிரியர் தேலரின் கருத்துகள் எடுத்துரைக்கின்றன.!
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT