Published : 28 Oct 2017 11:53 AM
Last Updated : 28 Oct 2017 11:53 AM
வ
ட துருவத்திலிருந்து திரும்பும் நீரோட்டத்தை ‘வளைகுடா நீரோட்டம்’ என்கிறார்கள். தென் துருவத்திலிருந்து திரும்பும் நீரோட்டத்துக்கு ‘பிரசீல் நீரோட்டம்’ என்று பெயர்.
சூரியனிலிருந்து பூமிப்பரப்பை வந்தடையும் வெப்பம், கடலின் மேற்பரப்பை வெம்மையாக்குகிறது. ஒப்பீட்டளவில் நில நடுக்கோட்டுப் பகுதி, சூரியனுக்கு நெருக்கமாக இருப்பதால் சூரியனின் வெப்ப வீ்ச்சு இங்கு அதிகம். ஆம்பூர் பிரியாணிக்கு தம் போடுகிற மாதிரி!
நிலநடுக்கோட்டுப் பகுதியில் இப்படி வெப்பமடையும் கடல்நீரானது அடர்வு குறைந்து இலேசாகி, துருவங்களை நோக்கிப் பயணிக்கிறது. துருவப் பகுதியிலுள்ள குளிர்ந்த, அடர்வு மிகுந்த கடல்நீர் இடம்பெயர்க்கப்பட்டு, கடலின் கீழ்மட்டத்தில் நிலநடுக்கோட்டை நோக்கிய நீரோட்டமாகிறது.
இதே சூரியவெப்பம் காற்று மண்டலத்தையும் விட்டு வைப்பதில்லை. நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் விரிவடையும் காற்று, பருவக் காற்றாய் வலுப்பெற்று, கடலின் மேற்பரப்பில் பெரும் சலனங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவுகளில் ஒன்றுதான் அலைகள்!
சூறாவளிகளும் புயல்களும் உயர்ந்த கட்டிடங்களையும் வயது முதிர்ந்த பெரிய மரங்களையும் சாய்த்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். தனுஷ்கோடி, பாராதீப் பகுதிகளில் பனை உயரத்துக்கு எழுந்த பேரலைகள், திருவாளர் காற்று அவர்களின் குறும்புதான்.
நகர்வதே உயிர்ப்பு
பூமியின் சுழல்விசை, சூரிய வெப்ப நீரோட்ட விசை, காற்று விசை – இவற்றுடன் சூரிய – சந்திர ஈர்ப்பு விசை இணைந்து ஏற்படுத்தும் கடல் ஓதங்கள் (ஏற்ற – வற்றம்) எல்லாம் இணைந்து கடலை இயக்கிக்கொண்டிருக்கின்றன. சில வேளைகளில் இந்த விசைகள் மாறுபட்ட சேர்மானங்களில் இணைந்து செயல்படுகின்றன. வேறு சில வேளைகளில் எதிரும் புதிருமாக இயங்குகின்றன. திசையெட்டும் பரவும் இந்த நீரோட்டங்கள் உலகப் பெருங்கடல்களைக் கலக்கச்செய்கின்றன. இவ்வாறு அடர்வு, உவர்ப்பு, வெம்மை அனைத்தும் சமநிலைப்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமா? கடலடியில் படிந்துகிடக்கும் உயிர்ச்சத்துகள், உயிரினங்கள் எல்லாம் கடலின் மேல்மட்டத்துக்கும் பெருந்தொலைவுக்கும் நகர்த்தப்படுகின்றன. உலக வெப்பத்தைத் தேக்கி, திரட்டி, பரவலாக்கி உலகப் பருவநிலையைப் பராமரிப்பது கடல்தான். தேங்கிக் கிடக்கும் நீர்த்திரளைப் பொறுத்தவரை இவையெதுவும் சாத்தியமில்லை.
கடல் ஒரு நிலைகொள்ளா நீர்த்திரள். நகர்ந்து கொண்டிருப்பதில்தான் அதன் உயிர்ப்பு அடங்கியிருக்கிறது. நகர்வு மட்டும் இல்லையென்றால் உலகப் பெருங்கடல்கள் ஒட்டுமொத்தமாக சாக்கடலாகியிருக்கும். மெரினா மணல்வெளியை உருவாக்கியது இந்த நகர்வுதான். கிழக்காசியக் கடற்பரப்பிலிருந்து பல மில்லியன் டன் டைட்டானியத்தை 2004 சுனாமியின்போது மன்னார்குடாப் பகுதியில் கொண்டுவந்து குவித்ததும் இந்த நகர்வுதான்.
மண்பானையில் சோறு சமைக்கும் அம்மா அகப்பையைப் போட்டுக் கிளறி கீழே படிந்திருப்பதை மேலே கொண்டுவருவது போல கடலைக் கிளறுவது சாத்தியமா? ‘அப்வெல்லிங்’ (Upwelling) என்கிற மேலெழுச்சியால் இது சாத்தியம்தான்.
எழுச்சி கொண்ட கடல்
பெருங்கடல் நீரோட்டங்களால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு இணை நீரோட்டங்கள் உருவாகின்றன. இதன் விளைவுதான் மேலெழுச்சி. கீழே படிந்துகிடக்கும் உயிர்ச்சத்துகளை மேலே கொணர்ந்து மீன் வளம் பெருக வழிவகுப்பது இம்மேலெழுச்சியால் மட்டுமே சாத்தியம்.
65,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ரஷ்யப் பகுதியிலுள்ள ஏரல் கடல் வற்றிப்போனதை அறிந்திருக்கலாம். கண்டக் கடல்களிலிருந்து தனித்து நிற்பது என்றாலும் அமு தாரியா, சீய்ர் தாரியா என்கிற இரண்டு ஆறுகள் ஏரல் கடலில் கலந்துகொண்டிருந்தன. பருத்தி விவசாயத்தை முன்னிட்டு இந்த ஆறுகள் திசைமாறியதால் நேர்ந்த விபரீதம். மனித இனம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் உலகின் மற்ற கடல்களும் ஏரல் கடலின் வரிசையில் இணைந்துவிடும் ஆபத்து உண்டு.
உற்றுக் கவனியுங்கள், எத்தனை பிரம்மாண்டமான சக்தி நம் காலடியில் கிடக்கிறது! மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியுடன் சேர்ந்து நானும் பெருங்கடல்களின் முன்னால் மண்டியிட்டுச் சொல்கிறேன்:
பெருங்கடல்களைத் தழுவிக்கிடக்கிறது நம் இருப்பு!
(அடுத்த வாரம்: பேராழம்... பாதாளம்! )
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT