Published : 21 Oct 2017 10:28 AM
Last Updated : 21 Oct 2017 10:28 AM
தொ
ல் அமெரிக்கப் பழங்குடிகளின் பரிதியாட்டம் மிகவும் புகழ்பெற்றது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் ‘குன்றக் குரவை’போலவே, அதுவும் விளக்கப்படுவது வியப்புக்குரியது. இதில் சிலப்பதிகாரச் சிறப்பு என்னவென்றால், ஒரு செவ்வியல் இசையை நடத்திக் காட்டுவதற்காக இந்த வடிவம் உருவாக்கப்படுகிறது. தொல் அமெரிக்கப் பழங்குடிகள் மருத்துவத்துக்காக அதை நடத்துகின்றனர். ஒரு மரக்கழியை நட்டு, அதைச் சுற்றிவந்து ஆடுகின்றனர்.
அனசடாசி இந்தியர்கள் என்று அழைக்கப்படும் வடஅமெரிக்கப் பழங்குடிகளின் பாறை ஓவியங்கள் பெரிதும் புகழ்பெற்றவை. கதிரவன், நிலா இரண்டின் சுற்றோட்டம் குறித்த ஓவியங்களை அவர்கள் பாங்கமைப்பாகத் தீட்டிவைத்துள்ளனர். இதேபோல பல எழுத்து முறைகள், குறிப்பாக சீன எழுத்து முறை, சுமேரிய எழுத்து முறை, தமிழின் முந்தைய ஆப்பு எழுத்து முறை போன்றவை பாங்கமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்.
நீரில் மிதக்கும் படகின் வடிவம் நல்லதொரு பாங்கமைப்பாகும். அதன் வடிவமைப்பே அவ்வளவு பெரிய எடை நீரில் மூழ்கிவிடாமல் இருக்க உதவுகிறது. பறவையின் உடலமைப்பு, வானூர்தியின் வடிவமைப்பு ஆகிய அனைத்தும் செப்பமான பாங்கமைப்பு என்றால் அது மிகையல்ல.
எதுவும் புதிது இல்லை
ஒரு மரத்தையும் ஆற்றையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மரம் முதலில் அடிக்கிளையை உருவாக்கி, பின்னர் பல பக்கக் கிளைகளை உருவாக்குகிறது. அதேபோல ஒரு ஆறு தோன்ற முதலில் சிறுசிறு ஓடைகள் உருவாகி, அது காட்டாறுகளாகிப் பின்னர் பேராறாக மாறுகிறது. ஒரு மரத்தைத் தலைகீழாகத் திருப்பி வைத்தால் எப்படி இருக்குமோ, ஒரு ஆற்றின் தோற்றம் அப்படியே இருக்கும். இவையும் இயற்கையின் பாங்கமைப்பில் சில வகைகள் ஆகின்றன.
தேனீக்கள் தேன் இருக்கும் இடத்தைத் தங்களது நடனத்தின் மூலமே மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றன. அந்த நடனமும் ஒரு வகையான பாங்கமைப்பு வடிவமே. அதை வைத்தே எத்தனை தொலைவில், எந்தத் திசையில் தேன் இருக்கிறது என்பதை மற்ற தேனீக்கள் உணர்கின்றன.
ஆகவே, எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு குறிப்பிட்ட முறையில் மட்டுமே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. புதிதாக ஒன்றும் இல்லை. அவை எப்படி நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிவதுதான் நமது திறமை. அதேபோல ஒவ்வொரு நிகழ்வும் ஒரு முடிவைத் தருகின்றன. ஒவ்வொரு முடிவும் ஒரு நிகழ்வுக்குத் தூண்டுதலாகவும் அமையும்.
(அடுத்த வாரம்: விடாது தொடரும் பரவல்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT