Published : 14 Oct 2017 10:32 AM
Last Updated : 14 Oct 2017 10:32 AM
கு
ழிநரி (Antlion) என்ற விநோதமான பெயரைக் கொண்ட பூச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது குழியைப் பறித்து இரையைப் பிடிக்கும் என்பது மட்டும் தெரியும். மற்றபடி, அதன் ஆதியும் அந்தமும் நான் அறிந்திலேன்.
இந்நிலையில் ஒரு நாள் எங்கள் வீட்டுக் கொடிகம்பியில் ஈசலைப் போன்ற, அதேநேரம் நீண்ட இறக்கைகளுடன் ஏதோ ஒரு பூச்சி ஒட்டியிருந்தது. அது சட்டென்று நகர்ந்து பறக்கவில்லை, நீண்ட நேரத்துக்கு கம்பியிலேயே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அது ஏதோ ஒரு பூச்சி என்று நானும் விட்டுவிட்டேன். அதுதான் குழிநரிப் பூச்சியின் முதிர்ந்த வடிவம் என்பது பின்னால்தான் தெரிந்தது.
லார்வா எனும் தோற்றுவளரிப் பருவமே பொதுவாகக் குழிநரி எனப்படுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் இந்த லார்வா, தனியாக வாழும் இரைகொல்லிப் பூச்சி. எறும்பு, சிலந்தியைப் போன்று ஊர்ந்துவரும் உயிரினங்களைப் பிடித்து உண்ணும். இவற்றைப் பிடிப்பதற்காக தோட்டங்கள், திறந்தவெளிப் பகுதிகளில், குறிப்பாக மணல் பகுதிகளில் கூம்புவடிவத்தில் சரிவான குழிகளை உருவாக்குகிறது. இந்தக் குழியின் எந்தப் பாகத்தில் ஒரு பூச்சி கால் வைத்தாலும் சரி, அப்புறம் நேராகக் குழியின் மையப் பகுதிக்குள் விழுந்து குழிநரிக்கு உணவாக வேண்டியதுதான்.
இப்படிக் குழிகளில் எறும்புகளை அதிகமாக விழவைத்து உண்பதால், இப்பூச்சிக்கு Antlion என்கிற ஆங்கிலப் பெயர் வந்தது. தமிழில் நரியைப் போல புத்திசாலித்தனமாக இரையைப் பிடிப்பதால் குழிநரி என்ற பெயர் வந்திருக்கலாம். இந்த பண்டை காலப் பூச்சி முழுமையான உருமாற்றத்துக்கு (Transformation) உட்படாத வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டது. வறண்ட, மணற்பாங்கான இடங்களில் பொதுவாகக் காணப்படும்.
நான் பார்த்தது குழிநரிப் பூச்சியின் லார்வா வடிவமல்ல, முதிர்ச்சியடைந்த நிலை. பொதுவாக இரவில்தான் முதிர்ந்த குழிநரி வரும் என்கிறார்கள். நான் பார்த்தது ஒரு காலை நேரம். ஒல்லியான வயிறைச் சுற்றி இரண்டு ஜோடி இறக்கைகள் காணப்பட்டன. பார்ப்பதற்கு ஊசித்தட்டான் போலிருந்தாலும், இறக்கைகள் வழக்கத்தைவிட நீண்டிருந்தன. தலைப் பாகமும் வேறுபட்டிருந்தது. இதற்குள்ள வளைந்த உணர்கொம்புகள், ஊசித்தட்டானுக்குக் கிடையாது.
நாடெங்கும் இந்தப் பூச்சி தென்பட்டாலும், வளர்ந்த குழிநரிப் பூச்சிகளைப் பார்ப்பது அரிது என்கிறார்கள். அரிதான பூச்சி ஒன்றை என் வீட்டிலேயே பார்க்கக் கொடுத்து வைத்திருந்தது அரியதொரு அனுபவம்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT