Published : 02 Sep 2017 10:38 AM
Last Updated : 02 Sep 2017 10:38 AM
“நா
ன் பிட்ஸ்பர்க் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். பாரிஸ் மக்களுக்காக அல்ல!” - தன் பேச்சால் தினசரி பல முத்துகளை வாரியிறைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜூன் 1-ம் தேதி உதிர்த்த ஒரு முத்து இது.
சரியாக இரண்டு மாதம் கழித்து, ‘பருவநிலை மாற்றம் உண்மைதான் ஐயா’ என்று ட்ரம்பின் மண்டையில் அடித்துச் சொல்லியிருக்கின்றன ‘ஹார்வி’ புயலும் ஹூஸ்டன் நகரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளமும்.
அப்படியே கொஞ்சம் இந்தியா பக்கம் வாருங்கள். வெள்ளத்தில் தத்தளிக்கிறது இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை. தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் காட்சிகள், 2015-ம் ஆண்டில் சென்னையில் நிகழ்ந்ததை நினைவுபடுத்துகின்றன. மும்பைக்கு முன்பு அசாம், மேற்கு வங்கம், பிஹார் எனப் பல மாநிலங்களிலும் புயலும் மழையும் வெள்ளமும் மக்களைப் பந்தாடியிருக்கின்றன.
மேற்கண்ட நகரங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கி வெள்ளமாக ஓடுகிறது. இந்த வெள்ளத்துக்கு, நம் அரசுகள் தினமும் பல நூறு முறை உச்சரிக்கும் வளர்ச்சி-திட்டமிடப்படாத வளர்ச்சிதான் காரணம். அதேநேரம் புயலுடன் பெய்கிற மழைக்கு, பருவநிலை மாற்றமே காரணம்.
மனிதச் செயல்பாடுகளால் பூமி கூடுதல் வெப்பமடைந்து, அதனால் வெளியேறும் கூடுதல் கரியமில வாயுவைக் கடல் உள்ளிழுக்கிறது. இதன் காரணமாகக் கடல் நீரோட்டம் மாற, அது புயலையும் சூறாவளியையும் ஏற்படுத்துகிறது. அந்தப் புயலும் சூறாவளியும் பெருமழையைக் கொண்டுவருகின்றன. அந்த மழைநீர் தங்குதடையின்றி ஓடி கடலில் கலப்பதற்கான முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் பெருமளவு பிரச்சினையில்லை. ஆனால், அப்படிச் செய்யத் தவறுகிறோம், பிறகு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறோம். நமது அறிவியல்பூர்வமற்ற வாழ்க்கை, சிந்தனைமுறைக்கு இதுவே பலனாகக் கிடைக்கும்.
இந்தச் சங்கிலித் தொடர் நிகழ்வுகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒற்றை உண்மை புலப்படும். அது பருவநிலை மாற்றத்துக்கு முதலும் கடைசியுமான காரணம் மனிதர்கள் மட்டுமே என்பதுதான். இது கொஞ்சம் அசவுகரியமான உண்மைதான். இந்த உண்மையை அரசு-அதிகார மட்டத்துக்குக் கொண்டு செல்வது எப்படி? அதற்கான பதிலை ‘ஆன் இன்கன்வீனியண்ட் ஸீக்குவெல்: ட்ரூத் டு பவர்’ எனும் ஆவணப்படம் மூலம் தருகிறார் அல் கோர்.
தகிக்கும் உண்மை
பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்னிலையில் இருப்பவர் அல் கோர். அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான இவர், புவி வெப்பமாதல் பற்றி 2006-ம் ஆண்டு ‘ஆன் இன்கன்வீனியண்ட் ட்ரூத்’ எனும் ஆவணப்படத்தை எடுத்தார்.
கரியமில வாயுவை (கார்பன் டைஆக்ஸைடு) அளப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி உலகிலேயே முதன்முறையாகப் பேசியவர் பேராசிரியர் ரோஜர் ரெவெல். அவருடைய மாணவர்தான் அல் கோர். 1981-ம் ஆண்டு, இதுதொடர்பான ஒரு கூட்டத்தை அமெரிக்க செனட்டில் அல் கோர் ஏற்பாடு செய்தார். அப்போதிலிருந்து புவி வெப்பமயமாதல் குறித்து அவர் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். அதனுடைய தொடர்ச்சிதான் இந்த ஆவணப்படம்.
டேவிஸ் குக்கன்ஹீம் இயக்கத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் பூமி ஏன் வெப்பமடைகிறது, அதில் கரியமில வாயுவின் பங்கு என்ன, அதனால் வளிமண்டலத்தில் உண்டாகும் பாதிப்பு, பூமி சூடாவதால் ஏற்படும் பாதிப்பு என்று அடிப்படையான பல அம்சங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ‘பவர் பாயிண்ட்’ ஸ்லைடுகள் மூலம் கூறியிருந்தார்.
ஒரு விஷயத்தை பவர் பாயிண்ட் ஸ்லைடுகள் மூலம் விளக்கும் உத்தியே, ஆவணப்பட உலகில் புதுமையாகக் கருதப்பட்டது. தவிர, அறிவியல் தகவல்களை மிகத் துல்லியமாகவும் இந்தப் படத்தில் அல் கோர் பதிவுசெய்திருந்தார். இந்தக் காரணங்களால், சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை இது வென்றதோடு, அல் கோர் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அனைத்து நாடுகளின் குழுவுக்கு (ஐ.பி.சி.சி.) 2007-ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசையும் பெற்றுத் தந்தது.
அந்தப் படம் வெளியான பிறகே, உலகம் முழுவதுமே பருவநிலை மாற்றம் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. ஆய்வுகள் விரைவுபடுத்தப்பட்டன. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் தொடர்ச்சியாக போன்னி கோஹென், ஜான் ஷென்க் இயக்கத்தில் ‘ஆன் இன்கன்வீனியண்ட் ஸீக்குவெல்’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
புறக்கணிக்கும் அதிகாரம்
தனது முதல் படத்திலும், தற்போது வெளியாகியிருக்கும் படத்திலும் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் ஒளிப்படங்களை முன்வைத்துத்தான் படத்தைத் தொடங்குகிறார் அல் கோர்.
முதல் படத்தில் 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘எர்த்ரைஸ்’ எனும் பூமியின் படத்தைக் காட்டியவர், இந்தப் படத்தில் 1972-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘தி புளூ மார்பிள்’ எனும் பூமியின் படத்தைக் காட்டுகிறார். ‘தி புளூ மார்பிள்’ படத்தையும் சமீபமாக எடுக்கப்பட்ட பூமியின் படத்தையும் ஒப்பிடுகிறார் அல் கோர். அதன் மூலம், இத்தனை ஆண்டுகளில் பூமியின் அமைப்பு, பருவநிலை மாற்றத்தால் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாகப் புரியவைக்கிறார்.
முதல் படத்தில் கரியமில வாயுவின் பாதிப்புகள் பற்றிப் பேசியவர், இந்தப் படத்தில் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார். அப்படியான எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கிறார். இந்த இடத்தில் இந்தியாவை மையப்படுத்துகிறார் அல் கோர்.
2015-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர், ‘சுமார் 30 கோடி இந்தியர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கான வசதியில்லாமல் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் மரபுரீதியான எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டும் அல் கோர், ‘இந்தப் பிரச்சினைக்கு, சூரிய ஒளி ஆற்றல் மூலம் இந்தியா தீர்வு காணலாம்’ என்கிறார்.
அப்படிச் சொன்னதோடு நிற்காமல், அமெரிக்காவில் உள்ள ‘சோலார் சிட்டி’ எனும் நிறுவனத்திடம் பேசி, இந்தியாவுக்குச் சூரிய ஒளி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறும் அல் கோர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இதுவரை, இந்தியா அந்த நிறுவனத்துடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.
இன்னொரு பக்கம் வளரும் நாடுகளில் ஒன்றான சிலி, எவ்வாறு சூரியஒளி ஆற்றலை அதிகப்படுத்தி மின்சாரத்தில் தற்சார்பு பெற்றிருக்கிறது என்பதை அல் கோர் காட்டியுள்ளார் . அப்படிச் செய்வதன் மூலம் அவர் எழுப்பும் கேள்வி இதுதான்: இதர நாடுகளால் ஏன் இது முடிவதில்லை?
இந்த உண்மைகள் எல்லாம் செவிடர் காதில் ஊதிய சங்காக இருந்தாலும், ‘பருவநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று படத்தின் முடிவில் சொல்கிறார் அல் கோர். அவருடன் கைகோப்பது நம் பூமியைக் காப்பாற்றுவதற்கான முதல்படி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT