Published : 09 Sep 2017 09:53 AM
Last Updated : 09 Sep 2017 09:53 AM
உயிர் இயங்குவதற்கு சக்தி தேவை. வேதிம சக்தியை வெப்ப சக்தியாக்கி, பிறகு அதை உழைப்புச் சக்தியாக விநியோகிப்பதுதான் வளர்சிதைமாற்றம் என்கிறது உயிரியல். வெப்பம்தான் உயிரியக்கத்தின் மூல ஆதாரம். வெப்பத்தை இழந்துவிட்டால் உடல் வெறும் சடம். வெப்பம் மிதமிஞ்சிப் போனால் பஸ்மாசுரனுக்கு நேர்ந்த முடிவுதான் எல்லா உயிருக்கும் நேரிடும். உயிரினங்கள் எவ்வாறு இச்சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன என்பது இயற்கை நிகழ்த்தும் அற்புதம்.
உயிர் வேதிமங்களிலிருந்து எலக்ட்ரான் அயனிகள் விலகி வெளியேறும்போது அதனுடன் அளவில்லா வெப்பச் சக்தி உண்டாகிறது. உடலைப் பஸ்மமாக்கும் அளவு வெம்மை! ஆனால் எலக்ட்ரான் அயனிகளின் விலகல் ஒற்றைப் பாய்ச்சலில் நிகழ்ந்து முடிந்துவிடுவதில்லை. பாதுகாப்பான விதத்தில், படிப்படியாக பல்வேறு கட்டங்களினூடாக நிகழ்கிறது. எலக்ட்ரான் அயனியின் சினம் நெறிப்படுத்தப்படுவதுதான் உயிரியலின் சூட்சுமம்.
மிதிவண்டி மீன்கள்
நாகர்கோவிலுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் இறச்சகுளம் என்னும் புலம்பெயர்ந்த மீனவர் குடியிருப்பு ஒன்று உண்டு. இங்குள்ள மீனவர்களின் வேலை மிதிவண்டியில் கடற்கரைக்குப் போய்ப் பிரம்புக் கூடைகளில் மீனைக் கொணர்ந்து உள்ளுர்ச் சந்தைகளில் விற்பனை செய்வது. சந்தைகளில் மட்டுமல்லாது தெருக்களிலும் கொண்டு சென்று இவர்கள் மீன் விற்பது உண்டு. இந்துப் பரவர் இனத்தைச் சார்ந்த இந்த தலித்துகளில் கோம்பை என்னும் மீனவர் திறமையானவர். பல ஊர்களிலும் சந்தைகளிலும் மீன் விற்றுப் பிழைப்பு நடத்துபவர்.
அவ்வாறு மீன் விற்பனைக்குப் போகிறபோது நிலவுடமைச் சமூகத்தைச் சார்ந்த திமிர் பிடித்த நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி மீன் கேட்கிறாள். ஏற்கெனவே வாங்கிய மீனுக்குப் பணம் தருமாறு கேட்கும் கோம்பை, மீன் தர மறுத்துவிடுகிறார். அந்தப் பெண் இவருடைய கூடையில் கைவிட்டு மீனை எடுக்க, முதலில் வாங்கிய மீனுக்குப் பணம் தரவேண்டும், இல்லையென்றால் இப்போது எடுத்த மீனைப் போட்டுவிடவேண்டும் எனக் கண்டிப்புடன் கோம்பை சொல்லிவிடுகிறார்.
அம்மேட்டுக்குடி வாயாடிப் பெண்ணோ கோம்பையின் கன்னத்தில் பளாரென அறைந்துவிடுகிறாள். அடிவாங்கிய கோம்பை அமைதியாகிவிடுகிறார். மீன் கூடையோடு மிதிவண்டியை உருட்டியபடி வீட்டுக்குத் திரும்புகிறார். அவ்வளவுதான் அதற்குமேல் அம்மனிதர் அந்த ஊருக்குப் போவதே இல்லை. கதை அதோடு முடிகிறது. நாஞ்சில் நாடன் எழுதிய இந்தச் சிறுகதையின் பெயர் ‘கோம்பை’.
அணையாத ரௌத்ரம்
யதார்த்தம் அத்துடன் முடிந்துவிடவில்லை. கோம்பையின் பிள்ளைகளில் ஒருவர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார்; மற்றொருவர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். கோம்பையின் கோபம் உடனடி எதிர்வினையாய் நிகழ்ந்து முடிந்துவிட வில்லை. தீர்க்கமான நீண்டகாலப் பிரதிவினை தன் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைக் கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு சென்ற கோம்பை என்கிற கதாப்பாத்திரம் உண்மை. பெயர் மட்டுமே புனைவு. நாற்பது ஆண்டுகளாக கோம்பை (சின்னக்கண்ணு சுடலையாண்டி) ரெளத்ரம் பழகியிருக்கிறார். அந்த ரெளத்ரமே அவரது தலைமுறையின் விதியைத் திருத்தி எழுதியது.
(அடுத்த வாரம்: சமூக மாற்றத்தின் உயிர்நாடி)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT