Published : 10 Dec 2016 09:43 AM
Last Updated : 10 Dec 2016 09:43 AM

பூச்சி சூழ் உலகு 13: இருப்புக்கொள்ளாத வண்ணத்துப்பூச்சி

கைகளில் ஒளிப்படக்கருவி இருந்தால், பூச்சிகளை எங்கு கண்டாலும் ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்துவிடுவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசத்துக்கு மேலே உள்ள களக்காடு காட்டுப் பயணத்தில் கண்ணில் தென்பட்ட பூச்சிகளைத் தொடர்ச்சியாகப் படம் எடுக்க ஆரம்பித்திருந்தேன். நீண்ட உணர்கொம்பு வெட்டுக்கிளி, மஞ்சள்தீற்று தயிர்க்கடை பூச்சி என அழகிய பூச்சிகளைத் தேடியலைந்து எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிரே இருந்த புதர்ச் செடியின் சிறியதொரு இலையின் மீது வெண் வளைய வண்ணத்துப்பூச்சி அழகுடன் அமர்ந்துகொண்டிருந்தது. மெல்ல நகர்ந்து சென்று ஒளிப்படம் எடுப்பதற்குள், பறந்து சென்று மற்றொரு இலையின் மீதமர்ந்தது. அந்த இலை இருந்த பகுதி ஒளிப்படம் எடுப்பதற்கு வாய்ப்பில்லாமல், சற்றுச் சரிவான பகுதியில் இருந்தது.

பொறுமையாகக் காத்திருக்கத் தொடங்கினேன். வெண் வளையன் தாவித் தாவிப் பறப்பது தொடர்ந்தது. பொருத்தமான இடத்தில் அது அமர்ந்தவுடன் எடுத்த ஒளிப்படம் மனதுக்கு நிறைவு தந்தது. மேல் இறகுகள் கரும்பழுப்பு நிறத்திலும், கீழ் இறகுகளின் மேற்புறம் கரும்பழுப்பு நிறத்திலும், கீழ்ப் பகுதி வெள்ளை நிறத்திலும் பார்ப்பதற்கு அழகுடன் காட்சியளித்தது. மேல் இறகுகளின் நடுப்பகுதியில் மஞ்சள் வளையமும், கீழ் இறகுகளில் மூன்று மஞ்சள் திட்டும் பார்ப்பதற்குக் கண்களைப் போல் தோற்றமளிப்பதே, இந்த வண்ணத்துப்பூச்சிக்கு வளையன் என்ற பெயர் வரக் காரணம்.

அடர்ந்த காடுகளில், காட்டுப் பாதைகளில் காணப்படும் வெண் வளையனை ஆண்டு முழுவதும் கண்டு ரசிக்கலாம். விட்டு விட்டுப் பறக்கும் இயல்பு கொண்ட வெண் வளையன் இலைகளின் மீது அமர்ந்து ஓய்வெடுக்கும் பண்பைக் கொண்டது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x