Last Updated : 03 Dec, 2016 11:16 AM

 

Published : 03 Dec 2016 11:16 AM
Last Updated : 03 Dec 2016 11:16 AM

கியூபாவின் சுற்றுச்சூழல்: சொன்னதைச் செய்த காஸ்ட்ரோ

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது உலக நாடுகளும் அரசியல் தலைவர்களும் அக்கறை கொள்ள வேண்டிய அவசியத்தை விதைத்த மிக முக்கியத் திருப்புமுனை, 1992-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு. அந்த மாநாட்டில் மறைந்த கியூப முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒன்று.

“உலகில் காடுகள் நிர்மூலமாகி வருகின்றன. பாலைவனங்கள் பரவலாகி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான டன் வளம்மிக்க மேல்மண் வீணாகக் கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கணக்கற்ற காட்டுயிர்கள் இந்த உலகிலிருந்து அற்றுப்போய்விட்டன. மக்கள்தொகை அதிகரிப்பால் உருவாகும் நெருக்கடியும், வறுமையும் பிழைத்திருப்பதற்கான செயல்பாடுகளைத் தீவிரமடைய வைத்துள்ளன. அதேநேரம், சுற்றுச்சூழலை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே இவை பெரும்பாலும் முடிவடைகின்றன.

இந்தச் சீரழிவுக்கு மூன்றாம் உலக நாடுகளைக் குற்றஞ்சாட்ட முடியாது. சமமற்ற வர்த்தகம், பணக்கார நாடுகள் உள்நாட்டு வளங்களைப் பாதுகாத்துக்கொள்வது, மூன்றாம் உலக நாடுகள் வைத்துள்ள பெருமளவு கடன் போன்றவை சூழலியல் மீது தாக்குதல் தொடுக்கவும், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இந்தச் சுயஅழிப்பிலிருந்து மனிதக் குலத்தைக் காக்க வேண்டுமென்று நாம் விரும்பினால், உலகில் தற்போது கிடைக்கும் வளங்களையும் தொழில்நுட்பத்தையும் மேம்பட்ட வகையில் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது” என்பதே ரியோ பூமி மாநாட்டில் காஸ்ட்ரோ பேசியதன் சாரம்.

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் தொடர்பான பெரிய விவாதமோ, அறிவியல் ஆதாரமோ கண்டறியப்பட்டிருக்காத நிலையில், அவர் நிகழ்த்திய உரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு இல்லாத காலம்

புரட்சிக்குப் பிந்தைய கியூபா ஆரம்பக் காலத்தில் வளங்குன்றாத வளர்ச்சியை முழுமையாக முன்னெடுத்திருக்கவில்லை. இதைப் பற்றி பிற்காலத்தில் காஸ்ட்ரோவே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“30 ஆண்டுகளுக்கு முன் (1970-கள் வரை) பெரும்பாலோர் சூழலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருக்கவில்லை. இரண்டாவது உலகப் போர் முடிந்து 25 ஆண்டுகள்வரை சுற்றுச்சூழல் பற்றிய எந்த அக்கறையையும் உலகில் பார்க்க முடியவில்லை. அந்தக் காலத்தில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் இயற்கைக் கட்டுமானங்களைக் கண்மூடித்தனமாகவும் தயவு தாட்சண்யமில்லாமலும் அதிவேகமாகச் சீரழித்துவந்தோம்,” என்று ஐ.நா.வின் ‘பாலையாதல்- நிலம் தரிசாதல்’ குறித்து 2003-ம் ஆண்டில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஃபிடெல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.

வளங்குன்றாத வளர்ச்சிப் பாதை

1992-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, கியூபா உள்ளிட்ட சோஷலிச நாடுகள் சூழலியல் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்திருந்தன. அந்தக் காலத்தில்தான் ரசாயன வேளாண்மையை விடுத்து, இயற்கை வேளாண்மை-நகர்ப்புற வேளாண்மைப் பாதைக்குக் கியூபா திரும்ப ஆரம்பித்திருந்தது.

“இயற்கையை அழிக்காமலும், அடிப்படை மனித மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்காமலும் சமூகத்தின் தேவைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். இதைக் கியூபா நிரூபித்துக் காட்டியிருக்கிறது. வர்த்தகத்துக்காகவோ, நுகர்வு கலாசாரத்துக்காகவோ தன் சுற்றுச்சூழலை அழிப்பதற்கு இந்தத் தீவு நாடு அனுமதிக்காது. இந்தச் சவாலைச் சந்திப்பதற்குத் தொழில்முறை இயற்கைப் பாதுகாவலர்களுக்குத் தேவையான பயிற்சியை நாம் வழங்க வேண்டும். அது மட்டுமில்லாமல், மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் பரவலாக்க வேண்டும்” என்று புரட்சியைப் பாதுகாப்பதற்கான கியூப குழுக்கள் இடையே 2002-ம் ஆண்டில் அதிபராக இருந்த ஃபிடெல் காஸ்ட்ரோ பேசியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

“இயற்கையை அழிக்காமலும், அடிப்படை மனித மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்காமலும் சமூகத்தின் தேவைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். இதைக் கியூபா நிரூபித்துக் காட்டியிருக்கிறது. வர்த்தகத்துக்காகவோ, நுகர்வு கலாசாரத்துக்காகவோ தன் சுற்றுச்சூழலை அழிப்பதற்கு இந்தத் தீவு நாடு அனுமதிக்காது. இந்தச் சவாலைச் சந்திப்பதற்குத் தொழில்முறை இயற்கைப் பாதுகாவலர்களுக்குத் தேவையான பயிற்சியை நாம் வழங்க வேண்டும். அது மட்டுமில்லாமல், மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் பரவலாக்க வேண்டும்” என்று புரட்சியைப் பாதுகாப்பதற்கான கியூப குழுக்கள் இடையே 2002-ம் ஆண்டில் அதிபராக இருந்த ஃபிடெல் காஸ்ட்ரோ பேசியிருப்பதைக் கவனிக்க வேண்டும். +

கொள்கையும் நடைமுறையும்

அவரது பேச்சை நிரூபிக்கும் வகையில் கியூபாவில் இயற்கை பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் கீழ் 14 தேசியப் பூங்காக்கள், 30 இயற்கை-சூழலியல் காப்பிடங்கள், 11 காட்டுயிர் புகலிடங்கள், 2 இயற்கை நிலப்பகுதிகள், 11 தாவரக் காப்பிடங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இவற்றில் கியூபாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவானாஹகாபைப்ஸ் மண்டலம், ரொசாரியோ மலைப்பகுதி ஆகிய இரண்டும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கும் கியூப மக்களுக்கும் சூழலியல் அக்கறை என்பது வெறும் கொள்கை அளவிலானதாக மட்டுமல்லாமல், நடைமுறையில் கடைப்பிடித்துப் பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்துவந்துள்ளது.

சமீப ஆண்டுகளாகக் கியூபாவின் முக்கியத் தொழிலாகச் சுற்றுலா வளர்ந்துவரும் நிலையில் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் முன்னைப் போலவே பாதுகாப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கியூப சூழலியலைச் சுற்றுலாத் தொழில் சீர்கெடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கியூப கடற்கரைப் பகுதிகளில் உள்ள பவழத்திட்டுகள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்ப்பதால், அவற்றைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கியூபாவின் பவழத்திட்டுகள் மாசுபடுவதைத் தடுக்கவும், மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தவும், இதர சீரழிவு-ஆபத்து நடவடிக்கைகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் கியூப சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவிக்கிறது.

இரட்டை மனோபாவம்

கியூபாவைப் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் மேற்கத்திய நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், சுற்றுச்சூழல் மீதான மேற்கத்திய நாடுகளின் அக்கறை பாரபட்சமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் தொழிற்சாலைகளை அமைக்கும்போது நிலம், இயற்கை வளங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அழிக்கின்றன.

இந்த இரண்டு அம்சங்களையும் ஒப்பிட்டே வளங்குன்றாத வளர்ச்சி சார்ந்த கியூபாவின் அக்கறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காஸ்ட்ரோ சொல்வதைப்போல, சமமற்ற வர்த்தகம், தங்கள் நாட்டு வளங்களை மட்டும் பணக்கார நாடுகள் பாதுகாத்துக்கொள்வது, அதிக வெளிநாட்டு கடன் போன்றவை காரணமாக மூன்றாம் உலக நாடுகள் தங்கள் சொந்த நாட்டு சுற்றுச்சூழலை அழிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றன என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை.

அமெரிக்கா விதித்த பல்வேறு பொருளாதாரத் தடைகள், மூன்றாம் உலக நாடுகளுக்கு இயல்பாக உள்ள நெருக்கடிகள் ஆகியவற்றைத் தாண்டி தொடர்ச்சியாக வளங்குன்றாத வளர்ச்சியை முன்னெடுப்பதில் முன்னோடி நாடாகக் கியூபா திகழ்கிறது. அதேநேரம் காஸ்ட்ரோவும் அவர் காலத்தைச் சேர்ந்த மக்களும் பாதுகாத்துவந்த இயற்கைப் பொக்கிஷங்களும் சூழலியல் சார்ந்த அக்கறையும் எதிர்காலத்திலும் தொடருமா? இந்தக் கேள்விக்கான விடை எதிர்காலக் கியூப ஆட்சியாளர்கள், மக்களின் கைகளில்தான் உள்ளது.



காஸ்ட்ரோ வலியுறுத்திய சூழலியல் உரிமை

பூவுலகையும் அதில் வாழும் மக்களையும் ஒன்றாகப் பாதுகாக்க வேண்டும். இயற்கையை அழித்தல், சுற்றுச்சூழல் சீரழிவு, புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் மறைந்த கியூப முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோ தன் கருத்துகளைத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்துள்ளார். அவற்றிலிருந்து சில முக்கியமான மேற்கோள்கள்:

நம் காலத்தின் மிகப் பெரிய முரண் என்னவென்றால், மனிதக் குலம் தன்னையே அழித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. ஆனால், தன்னையே முறைப்படுத்திக் கொள்வதற்கு இயலாமலும் அது இருப்பதுதான். - ஏப்ரல், 2010

உலகின் மிக முக்கியமான ஓர் உயிரினம் அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கிறது. வாழ்வதற்கான இயற்கை சூழலை அதிவேகமாகவும் தீவிரமாகவும் அழிப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டுக்குமே காரணம் ஒன்றுதான்: அது மனிதகுலம். பூமி எதிர்கொண்டுள்ள ஆபத்து குறித்து இப்போது நாம் நன்கு அறிந்துள்ளோம். அது அழிவதைத் தடுத்துநிறுத்துவது தாமதமாகிவிட்டது என்றாலும்கூட. - 1992, ரியோ பூமி மாநாடு, உரையின் தொடக்கம்

இன்னும் சிறந்த, நியாயமான உலகத்தை உருவாக்குவதற்காக மக்கள் முன்பு போராடினார்கள், இப்போதும் கௌரவத்தை இழக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதோ, மனிதகுலம் பிழைத்திருப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது, இதிலிருந்து தப்பிப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை. இதை நாம் புறக்கணித்தால், எதிர்காலத்தில் எதுவும் எஞ்சியிருக்கப் போவதில்லை. - ஜனவரி, 2010

சுயநலம் அழியட்டும். ஆதிக்கம் அழியட்டும். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்மை, பொறுப்பற்ற தன்மை, வஞ்சகம் போன்றவை அழியட்டும். நாளை சரி செய்துகொள்ளலாம் என்று நாம் ஒத்தி வைப்பது மிகுந்த தாமதம் ஆகிவிடும். இந்த மாற்றத்தை நீண்ட காலத்துக்கு முன்பே நாம் தொடங்கியிருக்க வேண்டும். - 1992, ரியோ பூமி மாநாடு, உரையின் முடிவு

மனிதகுலம் உயிர் வாழ்வதற்கான உரிமையைத் தொடர்ந்து நாம் பாதுகாத்தே ஆக வேண்டும். உண்மை வழங்கும் மனவுறுதி மற்றும் வலிமையைக் கொண்டு தொடர்ந்து போராடுவது மட்டுமே உயிர் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி.

- டிசம்பர், 2009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x