Last Updated : 12 Nov, 2016 01:31 PM

 

Published : 12 Nov 2016 01:31 PM
Last Updated : 12 Nov 2016 01:31 PM

அந்தமான் விவசாயம் 09: தென்னை விருத்தியும் கூட்டுத் தோட்டங்களும்

நிகோபார் தீவுகளில் தென்னை பராமரிப்பின் மற்றொரு சிறப்பு, தேவைக்கு ஏற்றாற்போல் தென்னை வளரும் பரப்பளவை அதிகரித்துக் கொள்வது. `டுலாங்’ பகுதியில் உள்ள காடுகள், சீர்கெட்ட நிலங்கள், பயனற்ற தென்னந்தோப்புகள் பழங்குடி நிபுணர்களால் கண்டறியப்பட்டு, மழைக்காலம் தொடங்கும் முன் கிராம மக்களால் கூட்டாகச் சுத்தம் செய்யப்படுகின்றன. தீவின் மையப் பகுதி மற்றும் பிற தென்னந்தோப்புகளிலிருந்து இயற்கையாக வளரும் தென்னை நாற்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பகுதியில் போதிய இடைவெளி விட்டு நடப்படுகின்றன.

பின்னர் நாற்புறமும் மரக்குச்சிகளால் வேலி அமைத்து, நடவுசெய்யும் இடத்தில் மட்டும் கைக்கொத்தால் நிலத்தை உழவு செய்து பாரம்பரியக் கிழங்கு, காய்கறி, பழங்களைப் பயிரிடுகிறார்கள். சில இடங்களில் சரிவுக்குக் குறுக்காகச் சிறிய நாழிகளை அமைக்கிறார்கள். நட்ட பின் மண்ணை அனைத்து இலைதழைகளால் மூடாக்கு செய்துவிடுகிறார்கள். இது இன்றைய உழவற்ற வேளாண்மைக்கு ஒப்பானது. மூன்று முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அல்லது தென்னை மரங்கள் வளர்ந்த பின் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

மழைநீர் சேகரிப்பு

இந்தத் தென்னந்தோப்புகள் கிராமத்தின் சொத்தாகிவிடும். இவ்வாறு புதிய தென்னந்தோப்புகள் அமைப்பதுடன், கூட்டுக் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் விளைவிக்கிறார்கள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு அரசுத் துறையினரின் உதவியுடன் பல கூட்டுக்குடும்பங்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்களுக்கிடையே வேலியமைத்து பாரம்பரியக் காய்கறி, கிழங்கு வகைகளை மானாவாரியாகப் பயிரிட்டுப் பயனடைகின்றனர். கூட்டுக்குடும்பங்கள் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிக்கப்படுவது இந்தத் தீவின் சிறப்பம்சம்.

கூட்டுப் பண்ணையம்

நிகோபார் பழங்குடியினர் நிகோபாரி கோழி, பன்றிகளை விரும்பி வளர்த்து வருகின்றனர். இவை அதிக நோய் எதிர்ப்பு, வெப்பம், மழையைத் தாங்கி வளரும் திறனுடையவை. தென்னந்தோப்புகளிலும் காடுகளிலும் நிகோபாரி பன்றிகள் மேய்கின்றன. ஆனால், மாலை நேரங்களில் நிகோபாரிகள் மூங்கிலால் குறிப்பிட்ட ஒலி எழுப்பி அடையாளம் இடப்பட்ட தங்களுடைய பன்றிகளை அழைத்து, கீழே விழுந்து முளைத்த மற்றும் எண்ணெய் எடுக்கப் பயனற்ற தேங்காய்களை உடைத்து உணவாகத் தருகின்றனர். உணவு உண்ட பின் பன்றிகள் மீண்டும் தென்னந்தோப்புகளுக்குள் சென்றுவிடுகின்றன.

நிகோபாரி இனக் கோழிகளை வீட்டின் சுற்றுப்புறங்களில் இறைச்சி, முட்டைக்காக வளர்க்கிறார்கள். இது ஒருவகையான இயற்கை முறை கூட்டுப் பண்ணையம். பொருளாதாரப் பயனைவிட, உணவுத் தேவைக்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது.

நில மேலாண்மையின் முக்கியத்துவம்

இப்படி நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ப நிகோபார் தீவு நிலப்பகுதியைப் பிரித்து மேலாண்மை செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், இது பல்லாண்டுகளாக இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தென்னை, மற்றப் பயிர்கள் மூலமாக மக்கள் பயனைப் பெறவும் உதவுகிறது. பல்லுயிர்ப் பாதுகாப்பு, தாவரங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் நிகோபாரிகள், இவற்றைப் பரம்பரைச் சொத்தாகவே நினைத்துப் பராமரித்துவருகின்றனர். இங்குள்ள பல அரிய வகைத் தாவரங்கள், தென்னையின் பன்முகத்தன்மை காரணமாக, அறிவியல் ஆராய்ச்சிக்கும் வீரிய ரகங்களை உருவாக்கவும் இவை பெரிதும் பயன்படுகின்றன.

- கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x