Last Updated : 05 Nov, 2016 12:03 PM

 

Published : 05 Nov 2016 12:03 PM
Last Updated : 05 Nov 2016 12:03 PM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 08: மறக்கக் கூடாத அடிப்படைகள்

இந்தப் பூமிப்பந்தில் அனைத்து உயிர்களும் வாழ்ந்து மடிந்து, மீண்டும் பிறந்து வாழ உரிமை பெற்றவை. இயற்கை அவற்றுக்கான இடத்தையும் காலத்தையும் உறுதிசெய்துள்ளது. அது அனைத்து உயிர்களின் பெருக்கத்தையும் சமநிலையில் வைத்துள்ளது. அதனாலேயே இயற்கை சிக்கலின்றி இயங்குகிறது. ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது, ஏதாவது ஒரு வகையில் இயற்கை அதைக் கட்டுப்படுத்துகிறது. அது நோயாக இருக்கலாம், இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். அதன் மூலம் சமநிலை மாறாமல் இயற்கை பார்த்துக்கொள்கிறது.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல' இயற்கை இயங்கிவருகிறது.

இந்த நிலையில் ‘பேராற்றல்' மிக்க மனிதன், தனது இனத்தை மட்டும் பெருக்கிக்கொண்டே செல்கிறான். 1800-களில் 100 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2015-ம் ஆண்டில் 740 கோடியாக ‘வளர்ந்துள்ளது'. இன்றைக்குத் தனது பேராசைக்காக யானையின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, அது நீர் குடிக்க வரும்போது, ‘யானை அட்டூழியம் செய்கிறது' என்று கூறுகிறோம்.

கழிவுப் பெருக்கம்

மனிதர்களில் சம பாதி வாழும் பெண்களின் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டு பெண்கள் மென்மையானவர்கள் என்று கூறுகிறோம். உடலுழைப்பு செய்யும் பெரும்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பறித்துக்கொண்டு, அவர்கள் திறமையற்றவர்கள் (unskilled) என்று கூறுகிறோம். பழங்குடிகள் வாழும் காட்டைக் கைப்பற்றிப் பேராசைக்காகச் சுரங்கம் தோண்டிக்கொண்டு, இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடிகளைத் தீவிரவாதிகள் என்று சொல்கிறோம்.

செவ்விந்திய மக்களின் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டு ஐரோப்பிய வெள்ளை மனிதர்கள் தங்களுடைய பேராசைக்காக ‘செவ்விந்தியன்' அநாகரிகமானவன் (காட்டுமிராண்டி) என்றார்கள். இப்படிப்பட்ட சூழலியல் நீதிக்குப் புறம்பான வளர்ச்சி, உலக மக்களை மட்டுமல்லாது, உலகின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிவருகிறது. இதற்குத்தான் மேம்பாடு, வளர்ச்சி என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர். ‘இன்றைய பொருளாதாரத்தின் முக்கிய விளைபொருள் கழிவுகளே' (the primary product of the economy is waste) என்று இவான் இலியீச் சொல்கிறார்.

மறக்கக்கூடாதவை

இயல்பாக இயற்கை மீண்டும் மீண்டும் தன்னைச் சமன் செய்துகொண்டேவரும். யாரும் தப்ப முடியாது. இந்த வரம்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஒரு பண்ணை நீடித்தும் உயிர்ப்புடனும் தனது விளைச்சலைத் தர வேண்டுமென்றால், அதன் நுகர்வைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், மீதமாவதை மறுபகிர்வு செய்ய வேண்டும். இதற்கான உறுதிப்பாட்டைப் பண்ணையாளர் செய்தாக வேண்டும்.

எனவே, இரண்டு அடிப்படையான அறக்கோட்பாடுகளைப் பண்ணை வடிவமைப்பில் பின்பற்றியாக வேண்டும்.

ஒன்று மண், நீர் ஆகிய முதன்மை ஆதாரங்களையும், மரம் முதல் நுண்ணுயிர் முதலிய துணை ஆதாரங்களையும் ஓம்புதல் (பராமரித்தல்)

இரண்டு, நுகர்வைக் கட்டுப்படுத்தி, மீதமாவதை வழங்குகிற பகிர்வும் பகுத்துண்ணலும்.

(அடுத்த வாரம்: பண்ணை வடிவமைப்பின் விதிகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x