Published : 29 Jul 2014 03:25 PM
Last Updated : 29 Jul 2014 03:25 PM
உலகில் அழகான உயிரினங்கள் என்று புகழ்பெற்ற பாலூட்டிகளில் ஒன்று வேங்கைப் புலி (Tiger - Panthera tigris).அந்தக் காலப் புராணங்கள், நாட்டுப்புற வழக்காறுகள் முதல் சினிமா, நவீன இலக்கியம்வரை பல வடிவங்களில் வேங்கை இடம்பிடித்திருக்கிறது. காலங்காலமாக கொடி, சின்னங்கள், முத்திரைகள் போன்றவற்றிலும் வேங்கைக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது.
இன்றைக்கு, உலகில் உள்ள வேங்கைப் புலி உள்ளினங்களில் இந்தியப் புலி அல்லது வங்கப் புலி மட்டுமே அதிக எண்ணிக்கையில் (1,700) இருக்கிறது. நம் நாட்டைத் தவிர வங்கதேசம், நேபாளம், பூட்டானில் சில நூறு இருக்கலாம்.
அழிவின் விளிம்பில்
இந்தியாவின் தேசிய அடையாளமான புலிகளின் எண்ணிக்கை அதிவேகமாகச் சரிந்துவருவது, பெரும் கவலைக்குரிய விஷயம். அதற்கான எச்சரிக்கை மணிகள் ஏற்கெனவே அடிக்கப்பட்டுவிட்டன. உயிரினங்களின் அழிவைப் பற்றி எச்சரிக்கும் ஐ.யு.சி.என். சர்வதேச அமைப்பு, அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் வேங்கைப் புலியை 2010-ம் ஆண்டில் சேர்த்துவிட்டது.
முன்னதாக 1970-களில் வேங்கைகளின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்தபோது, புலி பாதுகாப்பு செயல்திட்டம் (Project Tiger) உருவானது. உலகமயமும் தாராளமயமும் ஆட்சி செலுத்துகிற இந்தக் காலத்தில் அதிவேகத் தொழில் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளால், காட்டின் முதன்மை உயிரினங்களில் ஒன்றான வேங்கை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கணிப்புகளின்படி, நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 80 புலிகளும், இந்த ஆண்டில் இதுவரை 41 புலிகளும் மடிந்திருக்கின்றன.
காரணம் என்ன?
நிதிப் பற்றாக்குறை, நவீனக் கருவிகள் இல்லாமை, இதற்கெல்லாம் மேலாக அரசியல் உறுதிப்பாடின்மை போன்றவைதான் காட்டில் விலங்குகளை வேட்டையாடும் கள்ள வேட்டைக்காரர்கள் செழிப்பாக இருக்க உதவுகிறது. அத்துடன் கனிமச் சுரங்கங்கள், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றால் இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் காப்புக் காடுகள் சூறையாடப்படுவதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றுடன் ஆக்கப்பூர்வமான சட்டங் களை இயற்றுவதும், அவற்றைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் இப்போதைய அவசரத் தேவை.
புலிகளைப் பாதுகாக்க எனத் தனிச் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது நல்லதுதான். ஆனால், இந்தச் சரணாலயங்களில் ஒன்றுகூட, 250 வளர்ந்த புலிகள் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் போதுமான வகையில் பெரிய அளவுடன் இல்லை. வாழிடம் சுருக்கப்பட்டதும் வேங்கைப் புலிகளின் அழிவுக்கு முக்கியக் காரணம்.
நமது காடுகளில் எஞ்சி யிருக்கும் 1,706 வேங்கைப் புலிகளைப் பாதுகாக்கச் சிறப்பு பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் ஆராய்ச்சி யாளர்கள், ஆர்வலர்களின் நீண்ட காலக் கோரிக்கை. இந்த நடவடிக்கைகளில் ஒரு சிலவாவது நிறைவேற்றப் படும் பட்சத்தில், வேங்கைகள் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்.
இதுதான் புலி
பெரும்பூனை விலங்குக் குடும்பத்தில் நமது வங்கப் புலிதான் பெரிது. நிலத்தில் வாழும் மூன்றாவது மிகப் பெரிய ஊனுண்ணி. அதிகபட்ச நீளம் 11 அடி (மூக்கு முதல் வால் நுனி வரை), அதிகபட்ச எடை 300 கிலோ. ஒரு காலத்தில் மேற்கில் துருக்கி முதல் கிழக்கில் ரஷ்யக் கடற்கரைவரை ஆசியா முழுவதும் வாழ்ந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இந்தப் பரப்பின் 93 சதவிகிதப் பகுதிகளில், வேங்கைகள் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டன. வாழிட அழிப்பு, வாழிடம் துண்டாதல், கள்ள வேட்டைதான் புலிகளின் அழிவுக்கு முக்கியக் காரணம். பாரம்பரியச் சீன மருத்துவத்தில் புலிகளின் எலும்புகள் பயன்படுத்தப்படுவது புலி வேட்டைக்கு அடிப்படையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT