Last Updated : 26 Nov, 2016 10:03 AM

 

Published : 26 Nov 2016 10:03 AM
Last Updated : 26 Nov 2016 10:03 AM

உயிர்நாடிகள் இனியாவது காப்பாற்றப்படுமா?

சென்னை பெருவெள்ளம் ஓராண்டு

சென்னை, கடலூர் போன்ற கடலோர நகரங்களைப் புரட்டிப்போட்டு, எண்ணற்ற மனித உயிர்கள் பலியாகக் காரணமாயிருந்த பெருவெள்ளம் கடந்து இன்னும் ஓராண்டுகூட முடியவில்லை. சென்னைப் பெருவெள்ளத்தின்போது அடையாற்றின் கரையில் இருந்த தென்சென்னை நீரில் மூழ்கியது. நகரத்தின் சீரான நீரோட்டத்துக்கும், வெள்ளம், ஆழிப் பேரலை போன்ற பேரிடர்களிலிருந்து மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதற்குப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் போன்ற பெரிய நீர்நிலைகள் ஆற்றும் பங்கு அந்தத் துயரத் தருணத்தில்தான் மக்களின் கவனத்துக்கு வந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 8,000 ஹெக்டேருக்குப் பரந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பெரும்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக, கட்டிடங்களாக, சாலைகளாக மாற்றப்பட்டு, இன்றைக்கு வெறும் 600 ஹெக்டேர் மட்டுமே எஞ்சியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கொட்டித் தீர்த்த மழையால் நகரைச் சூழ்ந்த வெள்ளம் கடலை அடைய முடியாமல் சாலைகளிலும் வீடுகளிலும் சுரங்கங்களிலும் தேங்கியதற்கு முழு முதற் காரணம் பள்ளிக்கரணை போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சதுப்பு நிலம், ஏரி, கழிமுகம், ஆறுகள், நீர்நிலைகள் போன்ற இயற்கைச் செல்வங்கள் சிதைக்கப்பட்டு, பூமியை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை உணராமல் பொருளாதார வளர்ச்சி ஒன்றே இலக்கு என்று கண்மூடித்தனமாக நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே சென்னைப் பெருவெள்ளம் போன்ற பேரிடரிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இயலாமல் போகிறது.

வெள்ளத்தைத் தாங்கி, நீரைச் சேமித்து

நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள சதுப்பு நிலங்கள் மழைக்காலங்களில் அதிகமாக உள்ள நீரின் வடிகாலாகச் செயல்படுகின்றன. உபரி நீரைச் சீராகக் கடற்கரைக்கும், பின்னர்க் கடலுக்கும் கொண்டுசென்று, நிலப்பரப்பை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதேநேரம், மழை நீர் அனைத்தும் கடலில் வடிந்துவிடாமல், போதுமான அளவு நீரை நிலத்தில் சேமித்து உபரி நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புகின்றன.

நாம் செயற்கையாக உருவாக்கும் வெள்ளநீர் வடிகால்களால், கடலுக்கும் நிலத்துக்கும் இடையே இப்படிப்பட்ட சீரான, மிகவும் நுணுக்கமான நீரோட்டத்தைப் பராமரிக்க இயலாது. இயற்கை நீர்நிலைகள் இந்த நுணுக்கமான பணியைச் சிறப்பாகச் செய்கின்றன. சதுப்பு நிலங்களும் ஏனைய நீர்நிலைகளும் நிலத்தின் நீர்ச் சுழற்சி, நுண்ணுயிர்ச் சுழற்சி, கரியமில வாயுச் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சதுப்பு நிலங்களின் நுண்ணுயிர்ச் சுழற்சி நீரின் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. சதுப்பு நிலங்கள் மேற்கொள்ளும் சீரான கரி சுழற்சி தாவரப் பரப்பை மேம்படுத்துவதுடன், காற்று மண்டலத்தில் உள்ள கரியின் அளவை நிலத்திலும், தாவரங்கள் மூலமாகவும் சேகரித்துப் புவி வெப்பமடைவதைக் கட்டுக்குள் வைக்கப் பேருதவி புரிகிறது. மழை நீர் அறுவடை, உபரி நீர் வடிகால், நில மேற்பரப்பு நீர் ஆவியாதல் போன்றவற்றைச் சீராக வைத்திருக்கச் சதுப்பு நிலங்கள் மேற்கொள்ளும் நேர்த்தியான நீர்ச் சுழற்சி உதவுகிறது.

பூமியின் சிறுநீரகம்

சதுப்புநிலங்களும் இதர நீர்நிலைகளும், நீரோட்டப் பகுதிகளில் மண் படிவதைச் சீராக வைத்திருப்பதுடன் மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தைத் திடப்படுத்துகின்றன. கழிமுகங்களும் அலையாத்திக் காடுகளும் புது மண் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகின்றன. நிலத்தில் உள்ள ஆறுகள், முகத்துவாரங்கள், கழிமுகங்கள் சீராக இருந்தால் மட்டுமே கடற்கரை மண்டலத்தில் உப்புத்தன்மை சீரான அளவில் இருக்கும். அதன்மூலம் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள் செழிக்க வழி அமையும். கடலில் மீன், ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் சமீபகாலமாக மிகவும் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு நிலத்தில் உள்ள நீர்நிலைகளைச் சரியாகப் பாதுகாக்காததும், நிலத்துக்கும் கடலுக்கும் இடையே உள்ள நுணுக்கமான நீர்ச் சுழற்சியை சீர்குலைத்ததுமே முக்கியக் காரணம்.

பெரும்பாலான நீர்நிலைகளும் சதுப்பு நிலங்களும், நீர்த்தாவரம், நுண்ணுயிர்களின் களஞ்சியமாக விளங்குகின்றன. இயற்கை நீர்த்தாவரங்களான தாமரை, அல்லி, பாசி போன்றவை நீரில் மிகுந்திருக்கும் தழைச்சத்தை எடுத்துக்கொண்டு, நீர்நிலைகளில் களைத் தாவரங்கள் படர்வதைத் தவிர்த்து, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்குத் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கச் செய்கின்றன.

இந்த நீர்த்தாவரங்கள் நகரங்களிலிருந்து அடித்து வரப்படும் ரசாயன நச்சுப் பொருட்களையும், கடினமான கனிமங்களையும் கிரகித்துக்கொண்டு, நீர்வாழ் உயிரினங்களைக் காப்பதோடு, நீரைப் பயன்படுத்தும் மக்களையும் பாதுகாக்கின்றன. காடுகள் பூமியின் நுரையீரல்களாகச் செயல்படுவதைப் போல, சதுப்பு நிலங்களும் ஏனைய நீர்நிலைகளும் அளப்பரிய உயிர் சுழற்சியின் மூலம் நிலத்தின் சிறுநீரகமாக விளங்குகின்றன. எனவே, அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

உயிரினப் பன்மைக் களஞ்சியங்கள்

சதுப்பு நிலங்களும் நீர்நிலைகளும் பல்வேறு வகையான தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள் செழித்திருக்கும் உயிரினப் பண்மைக் களஞ்சியமாக விளங்குகின்றன. நீர்நிலைகளில் உள்ள தாவரங்கள் மக்கும்போது நீர்வாழ் உயிரினங்களான மீன்கள், நத்தை வகைகள், நண்டு இனங்களுக்கு முக்கிய உணவாதாரமாக மாறுகின்றன. நீர்வாழ் உயிரினங்களை உணவாக்கிக் கொள்வதற்கு நாடி வரும் புள்ளினங்கள் அவற்றை உண்டு, நீர்நிலைகளின் அருகில் உள்ள பயிர் நிலங்களுக்கு எருவளிக்கின்றன. இந்தக் காரணத்தாலேயே, நீர்நிலைகளை ஒட்டியுள்ள வயல்களில் விளைச்சல் அமோகமாக இருக்கிறது.

குளிர்காலத்தில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும் வடதுருவப் பகுதிகளான ஐரோப்பா, இமயமலை, திபெத், ரஷ்யா போன்ற பகுதிகளிலிருந்து பல வகையான புள்ளினங்கள் நம் நாட்டு நீர்நிலைகளுக்கு வலசை வருகின்றன. அவற்றின் வருகை பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு வளம் சேர்ப்பதுடன், பல்வேறு பகுதிகளுக்குச் சிறகடித்துப் பறந்து நாட்டையே வண்ணமயமாக்குகின்றன. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், நீர்நிலைகளை வேகமாக நாம் சிதைத்து வருவதால், வலசைக் காலத்தில் பல்வேறு புள்ளினங்கள் வாழ இடமின்றி மாண்டுபோகின்றன. அதனால் நாட்டின் மண் வளமும் வேகமாகக் குன்றி வருகிறது.

முன்னேற்றங்களும் சறுக்கல்களும்

நாட்டின் சதுப்புநிலங்கள், நீர்நிலைகள் வேகமாக அழிந்துவருவதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்ட மத்திய அரசு, 2011-ம் ஆண்டில் தேசிய அளவிலான நீர்நிலைகளின் வரைபடத்தையும், அது சார்ந்த அறிக்கையையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் நாட்டின் நில மேற்பரப்பில் இயற்கையாக அமைந்த நீர்நிலைகள் 66 இலட்சம் என்றும் கடல்சார் பகுதியில் 41 இலட்சம் நீர்நிலைகள் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு நீர்நிலைகள் பேணல் மற்றும் மேலாண்மை விதிகளை (Wetlands Conservation and Management Rules) வெளியிட்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் நீர்நிலைகளின் பட்டியலைத் தயார் செய்து, அவற்றின் பாதுகாப்புக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்று இந்த விதிமுறை வலியுறுத்துகிறது.

ஆனால், ஒடிசாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் இந்த அறிவிப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. 1986-ல் உருவாக்கப்பட்ட நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environmental Protection Act), நீர்நிலைகளை முக்கிய சூழலியல் மண்டலங்களாக அறிவித்து உரிய பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்தது. இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களையும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் உதாசீனப்படுத்திவருகின்றன. இப்படி உரிய சட்டங்களைத் தீட்டியும், விதிகளை விதித்தும்கூட நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க நாம் தொடர்ந்து தவறி வருகிறோம். நீர்நிலை மேலாண்மை, பேணல், உயிரினப்பன்மை பேணலில் பண்டைய தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதை இலக்கியங்கள் மூலம் உணர முடிகிறது.

நீர்நிலைகளைப் பேணுவது மனிதக் குலத்தின் சீரான வாழ்வுக்கு இன்றியமையாதது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இந்த நவநாகரிகக் காலத்தில் விழிப்புணர்வும் அரசியல் உறுதிப்பாடும் இருந்தால் மட்டுமே சதுப்புநிலங்களையும் நீர்நிலைகளையும் காக்க முடியும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது வரும் நாள், எந்நாள் என்பதும் தெரியவில்லை.

கட்டுரையாளர்,சூழலியல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: wildranga@rediffmail.com
தமிழில்: ந. இலட்சுமிநாராயணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x