Published : 28 May 2016 11:48 AM
Last Updated : 28 May 2016 11:48 AM

மேற்குத் தொடர்ச்சி மலை நாயகன்

நாம் கண் முன்னே ஓர் உயிர் மடிவதைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அது மனித உயிரோ, விலங்கு உயிரோ... அப்படியிருக்கும்போது நம் கண் முன்னே செழித்து வாழ்ந்த ஓர் உயிரினம் நம் வாழ்நாள் காலத்திலேயே உலகத்திலிருந்து முற்றிலும் அற்றுப்போவதைப் பார்ப்பதென்பது எளிதில் துடைத்துவிட முடியாத துயரம்தானே.

ஒவ்வொரு அரிய உயிரினத்தைப் பார்க்கும்போதும், திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சு. பாரதிதாசனுக்கு அப்படித்தான் இருந்தது. இயற்கை குறித்த பேரார்வத்துடன் தாவரவியலை எடுத்துப் படித்தவர், அழிந்து வரும் நம் மண்ணின் அரிய தாவர நாற்றுகளைப் பரப்புவதில் முதலில் ஆர்வம் கொண்டார். இப்போது அவர் வந்து நின்றிருப்பது தமிழக மண்ணில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் எஞ்சியிருக்கும் பிணந்தின்னிக் கழுகுகள், முற்றிலும் அற்றுப்போகாமல் பாதுகாக்கும் முயற்சியில்.

பிணந்தின்னிக் கழுகுகள் என்று பெயரிலேயே அவதூறு செய்வதைப்போல அழைப்பதைத் திருத்துகிறார். “அவற்றை ‘பாறு’ என்றே சங்கத் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. நாங்களும் ‘பாறு’ என்றுதான் சொல்கிறோம்” என்கிறார்.

இந்தியாவுக்கான விருது

தமிழகத்தில் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் எஞ்சியுள்ள பாறுகளைப் பாதுகாக்கவும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பலனைத் தர ஆரம்பித்துள்ளன.

இதுபோன்று உலகப் பொதுமையான வளங்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள், நம் நாட்டில் பெரிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால், உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் அக்கறையான இயற்கை பாதுகாப்பு முயற்சிகளை மேலை நாடுகள் அங்கீகரிக்கின்றன.

அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் முழுவதும் நடைபெற்று வரும் இயற்கை பாதுகாப்புப் பணிகளின் நாயகனாக ‘ஹாட்ஸ்பாட் ஹீரோ’ என்ற விருதுக்கு சு. பாரதிதாசனை, சி.இ.பி.எஃப். (Critical Ecosystem Partnership Fund) என்ற சர்வதேச அமைப்பு தேர்ந்தெடுத்திருக்கிறது. உலகில் உள்ள பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த 15 மையங்களுக்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் ஹீரோ இவர். இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

ஹவாய் தீவில் உள்ள ஹோனுலூலூவில் ஐ.யு.சி.என்னின் (சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்) உலகப் பாதுகாப்பு மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. மேற்கண்ட விருது மட்டுமில்லாமல், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளையும் சி.இ.பி.எஃப். செய்துள்ளது.

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். சி.இ.பி.எஃப். என்பது ஐரோப்பிய யூனியன், ஜப்பானிய அரசு, கன்சர்வேஷன் இண்டர்நேஷனல், உலகச் சுற்றுச்சூழல் அமைப்பு, மெக்ஆர்தர் அறக்கட்டளை, ஃபிரான்ஸ் வளர்ச்சி நிறுவனம், உலக வங்கி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய தாவரங்களின் மையம்

“எனக்கு உத்வேகமாகத் திகழ்ந்த கல்லூரி நண்பர் அருள் திடீரென மறைந்துவிட்டார். அதன் பிறகு இயற்கையை மையமாகக் கொண்ட என்னுடைய பல்வேறு பணிகளை ‘அருளகம்’ என்ற அமைப்பின் கீழ் பலரையும் இணைத்து மேற்கொண்டு வருகிறேன்.

அந்த அமைப்பின் அடிப்படை நோக்கமே அழிந்துவரும் தாவரங்கள், பறவைகள், உயிரினங்களைப் பாதுகாப்பதுதான். தொடர்ச்சியான 10 ஆண்டு விழிப்புணர்வுப் பணிகள், அரிய தாவரங்கள் பாதுகாக்கும் - பரவலாக்கும் பணிகளுக்குப் பிறகு, உயிரினங்களை நேரடியாகப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தோம்” என்கிறார்.

கோவை எல்லப்பாளையத்தில் உள்ள இவருடைய பண்ணையில் தமிழ் மண்ணின் அரிய தாவர நாற்றுகள் பலவும் கிடைக்கின்றன. ஒரு நிலத்தில் வளர வாய்ப்புள்ள பல்வேறு இயல் தாவரங்களே பல்லுயிர் சூழலைக் காக்கும். அதுவே மண்ணையும் மண்ணுக்கான உயிர்களையும் பேணும் என்ற புரிதலுடன் நாற்றுப்பண்ணையை இவர் நடத்தி வருகிறார்.

ஆழிப் பேரலைக்குப் பிறகு தமிழகத்தின் கடைக்கோடியில் பாதிக்கப்பட்ட இடிந்தகரையில் பனை மரங்களையும் வேறு பல தாவரங்களையும் வளர்த்து பசுமை தடுப்பரண்களை உருவாக்கிக் கடற்கரையைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தாவரங்கள் சார்ந்து நீண்டகாலமாக இயங்கி வந்தாலும், உயிரினங்களைப் பாதுகாப்பதில்தான் அவருடைய ஆர்வம் மேலோங்கி இருந்தது.

தொற்றுநோய் தடுப்பு

சென்னையில் 1950-களில் காகத்தின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் பாறுக் கழுகுகள் இருந்தன என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் நீலகண்டன். அதேபோல சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோயிலுக்கு ஒரு ஜோடி பாறுக் கழுகு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கிறது. ஆனால், இப்போது வருவதில்லை.

திருக்கழுகுக்குன்றக் கழுகுகள் மட்டுமல்ல பட்டிதொட்டியெங்கும் பாறுக் கழுகுகளை மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. இறந்த சடலங்கள் கிடந்தால், அவற்றுக்கு எப்படித்தான் தெரியுமோ. சட்டென்று கூட்டமாகப் பறந்துவந்து, சடலம் இருந்த இடம் தெரியாமல் தின்று துப்புரவு செய்வது அவற்றினுடைய அடிப்படைப் பண்பு.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையைச் சேர்த்துக் கொட்டி ஊரை நாற்றக்காடாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் பாறுக் கழுகுகள் இயற்கையில் மடியும் எல்லா உயிரினங்களையும் உணவாகக்கொண்டு காட்டையும் நாட்டையும் துப்புரவு செய்துவருகின்றன. இப்படி அவை சடலங்களை உண்பதால், காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கின்றன.

திடீர் வீழ்ச்சி

மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோமாரி உள்ளிட்ட பயங்கரமான நோயில் வீழ்ந்த கால்நடைகளை உண்டபோதுகூட, பாறுக் கழுகுகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை. ஆனால், இன்றைக்குத் தமிழகத்தின் ஒரேயொரு பகுதியில்தான் பாறுக் கழுகுகளைப் பார்க்க முடிகிறது. இந்த மோசமான அழிவு 90-களுக்குப் பிறகு நிகழ்ந்த அதிவேக மாற்றம்.

இப்படி அவை வீழ்ந்து போனதற்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி. மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வலிநிவாரணி செலுத்தப்பட்ட கால்நடை இறக்கும்போது, அவற்றின் உடலெங்கும் இந்த வலிநிவாரணி எச்சமாகத் தேங்கிக் கிடக்கிறது.

சடலத்தை உண்ணும் பாறுக் கழுகுகளை டைக்ளோஃபினாக் கொல்கிறது. 1960-களில் டி.டி.டி. பூச்சிக்கொல்லியால் அமெரிக்காவில் மொட்டைக் கழுகுகள் வேகமாக அழிந்ததைப்போல, பாறுக் கழுகுகளும் கூட்டம்கூட்டமாக இறக்க ஆரம்பித்தன. இன்றைக்கு நாடு முழுவதுமே பாறுக் கழுகுகள் அருகிவிட்டன.

மீட்கும் முயற்சி

தமிழகத்தின் நீலகிரி சுற்றுவட்டாரத்தில் மட்டும் சில பாறுக் கழுகுகள் எஞ்சியுள்ளன. பழங்குடி மக்கள், மருந்து விற்பனையாளர்கள், கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து இப்பறவையை அழிவிலிருந்து மீட்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார் சு. பாரதிதாசன்.

“கால்நடைகளுக்கான டைக்ளோஃபினாக் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த மருந்தை முற்றிலும் புறக்கணிக்கப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்காமலும் எரிக்காமலும் கழுகுகளுக்கு இரையாக விடச் சொல்கிறோம்.

இறந்த சடலங்களின் மேல் விஷம் தடவுவது தண்டனைக்குரியது என்பது ஒரு பக்கம், அவற்றை உண்டு கழுகு மட்டுமில்லாமல் வேறு பல காட்டு உயிரினங்களும் மடிந்துவிடுவதைத் தடுக்க முயற்சிக்கிறோம்” என்று தங்களுடைய முயற்சிகளை விவரிக்கிறார்.

கோயில் திருவிழாக்கள், மாட்டுச் சந்தைகள், கால்நடை முகாம்கள் என மக்கள் கூடுமிடங்களில் இந்த விஷயங்களை விளக்கிக் கண்காட்சிகளை நடத்தி இருக்கிறார். இருசக்கர வாகனப் பேரணி, மனிதச் சங்கிலி, தெருமுனைப் பிரசாரம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், பரமபத விளையாட்டு, குழந்தைகளுக்கு ஜிப்ஸ் கார்னிவல் ஓவியப் போட்டி எனப் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுப் பணியை பாரதிதாசன் மேற்கொண்டு வருகிறார்.

இவரைப் போன்று அக்கறையுள்ளோரின் முயற்சியால் பாறுக் கழுகுகள் கூடமைத்துள்ள இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தமிழக வனத்துறை காவலர்களை நியமித்துள்ளது; ஐந்தாண்டுகளாகப் பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது; பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காகப் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக வனத்துறை உருவாக்கி வருகிறது.

இது போன்ற நம்பிக்கை தரும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றாலும், மீண்டும் பாறுக் கழுகுகள் வானில் வட்டமிடும் என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே துளிர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x