Last Updated : 07 May, 2016 11:31 AM

 

Published : 07 May 2016 11:31 AM
Last Updated : 07 May 2016 11:31 AM

பி.எச்டி. ஆராய்ச்சியாளரின் சம்பங்கிப் பூ சாகுபடி

பி.எச்டி. ஆராய்ச்சியாளரின் சம்பங்கிப் பூ சாகுபடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் முதுகலை பட்டதாரி வி. சிதம்பரராஜன். தனது 70 சென்ட் நிலத்தில் சம்பங்கிப் பூ சாகுபடி செய்து, அதிக வருவாய் ஈட்டிவருகிறார். அத்துடன் சம்பங்கிச் சாகுபடியை மேம்படுத்துவது குறித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக மற்ற விவசாயிகளையும் இவர் ஊக்கப்படுத்திவருகிறார்.

நாள்தோறும் ரூ. 3 ஆயிரம்

சம்பங்கிச் சாகுபடி குறித்து அவர் பகிர்ந்துகொண்டது எம்.எஸ்சி. விவசாயமும் கல்விப் பயிற்சியில் முதுகலையும் படித்துவிட்டு, தற்போது தானிய உற்பத்தி குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன். படித்து முடித்த உடன் எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் சோர்ந்து போகவில்லை. படித்த விவசாயப் படிப்பைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

எனது குடும்பம், விவசாயக் குடும்பம். எனது பெற்றோர் 70 சென்ட் நிலத்தில் தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைக் கடந்த காலத்தில் சாகுபடி செய்துவந்தனர். சில நேரம் விலை வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறோம்.

அப்போதுதான் காய்கறிச் சாகுபடிக்கு மாற்றாக யோசித்துக்கொண்டிருந்தபோது, சொட்டுநீர்ப் பாசன உதவியுடன் கடந்த ஆண்டு சம்பங்கிச் சாகுபடி செய்தேன். என் பெற்றோர் அதற்கு என்னை உற்சாகப்படுத்தினர். கடந்த நான்கு மாதங்களாக நாள்தோறும் ரூபாய் மூன்று ஆயிரம் வருவாய் கிடைத்துவருகிறது. எங்களைப் பார்த்துச் சுற்றுவட்டார விவசாயிகள் சிலரும் சம்பங்கிச் சாகுபடியில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி நாங்கள் ஊக்கமளித்துவருகிறோம்.

படம்: ஆர். சௌந்தர்

சாகுபடி முறை

சம்பங்கிச் சாகுபடிக்கு எல்லா மண் வகைகளும் ஏற்றவை. கரம்பை, செம்மண் கலந்தால் நல்ல விளைச்சல் இருக்கும். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆன தரமான சம்பங்கிக் கிழங்கைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். நாள்தோறும் எந்தத் தண்ணீரை வேண்டுமானாலும் பாய்ச்சலாம். சம்பங்கிக்குக் கூடுதல் தண்ணீர் தேவைப் படுவதால், சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

நோய்த் தாக்குதல் குறைவு, இயற்கை உரம் இட்டால் பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும். கோடைக் காலத்தில் சாகுபடி செய்யாமல் வைகாசி மாத இறுதியில் சாகுபடி செய்தால் நல்லது. மழை பெய்தால் பூ அதிகம் பிடிக்கும். தினமும் களை எடுத்துவிட்டால் பூக்கள் உற்பத்தி மேலும் கூடும்.

ஆண்டுக்கு ரூ. 8 லட்சம்

ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.1.50 லட்சம்வரை செலவாகும். ஏழாவது மாதத்தில் இருந்து நாள்தோறும் பூக்களைப் பறிக்கத் தொடங்கலாம். இது ஐந்து ஆண்டுகள்வரை பலன் தரும். ஒரு ஏக்கருக்குச் சராசரியாகத் தினமும் 40 கிலோவரை பூக்கள் பூக்கும்.

முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள், பண்டிகைக் காலங்களில் பூ விலை உயரும். எப்படிப் பார்த்தாலும் சராசரியாக ஒரு கிலோ ரூ.80 வரை விலை போகிறது. பறிப்பு கூலி, வாகனச் செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவுகள் போக ஆண்டுக்கு ரூ.8 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்ட முடியும்.

விவசாயி வி. சிதம்பரராஜன் தொடர்புக்கு: 90956 25680

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x