Published : 14 May 2016 12:23 PM
Last Updated : 14 May 2016 12:23 PM
இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சியம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் குதித்தவர்களின் வரலாற்றைப் போல உள்ளதைக் காண முடிகிறது. அதிலும் பிச்சைமுருகன் போன்ற உழவர்களின் ஈடுபாடு வியப்படைய வைக்கிறது.
குடும்பத்தோடு உழவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் அச்சங்குளம். இங்கு வேளாண்மையே அடிப்படையான தொழில். பெரிய ஆற்றுப் பாசனம் ஏதும் இல்லை. மழையையும் கிணறுகளையும் நம்பியே வேளாண்மை நடைபெறுகிறது.
இந்த ஊரைச் சேர்ந்த பிச்சைமுருகன் வணிகவியல் பட்டம் பெற்றவர். இவரது துணைவி பொறியியல் பட்டம் பெற்றவர். இருவரும் தங்களுடைய ஒன்பதாவது படிக்கும் ஒரே மகளுடன் கொளுத்தும் வெயிலில் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டும், ஆடுகளை மேய்த்துக்கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.
ஊருக்கு இழுத்த வேளாண்மை
வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த பிச்சைமுருகனுக்கு, இயல்பாகவே வேளாண்மைப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பச் சூழல் ஒத்துழைக்கவில்லை. அதன் பின்னரே வணிகம் படித்தார். எல்லோரது வீட்டிலும் கூறுவதைப்போலப் படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே அவரும் விரும்பினர். வேளாண்மையை இன்னும் யாரும் வேலையாக நினைக்க ஆரம்பிக்கவில்லையே.
சென்னை சென்று மூலிகை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். ஆனால், வேளாண்மையின் மீதான ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. இந்தச் சூழலில் இயற்கை வேளாண்மையைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துவிட்டு, அதை பற்றிய தேடலுடன் மீண்டும் ஊர் திரும்பி வந்து பருத்திச் சாகுபடியில் நுழைந்துள்ளார்.
- பிச்சை முருகன்
முன்னோடிகள் காட்டிய வழி
அப்போது முன்னோடி இயற்கை உழவர் புளியங்குடி கோமதி நாயகத்தின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலில் இயற்கை வேளாண்மையை முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். அவருடன், தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்கள் தஞ்சை கோ. சித்தரும், மதுரை கார்த்திகேயன் ஆகிய இருவரும்தான் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியில் இவர் நெருக்கடிக்கு உள்ளானபோதும், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கொடுத்து ஆதரித்ததுடன், தனது வெற்றிக்கு ஆதாரமாகவும் அவர்கள் இருந்ததாகக் கூறுகிறார் பிச்சைமுருகன்.
இவரது 26 ஏக்கர் பண்ணையில் நெல், பருத்தி, மிளகாய், மரவள்ளிக் கிழங்கு, வெங்காயம், தீவனப் பயிர்கள் என்று ஒரு முழுமையான பண்ணைக்குரிய சாகுபடி நடைபெறுகிறது. 15 மாடுகள், 20 ஆடுகள், 150 கோழிகள் என்று கால்நடைகளையும் வைத்துள்ளார். இவரது மாடுகளுக்கு அமைத்துள்ள கொட்டகையைவிட, இவரது குடும்பம் வாழும் வீடு வசதி குறைவாகவே உள்ளது.
கொடுத்து வாங்குவது
மாடுகளுக்கான தீவனத் தொட்டியை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். பழைய பிளாஸ்டிக் பீப்பாய்களை இரண்டாக அறுத்து, அதைக் கொண்டு மாட்டுக் காடிகளாக அமைத்துள்ளார். தீவனப் புற்களை வெட்டுவதற்குத் தழை வெட்டி (bush cutter) என்ற இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அதிலும் சிறிய மாற்றம் செய்து, மிக எளிதாகப் புல் அறுக்கும் வேலையைச் செய்துகொள்கிறார். இதன்மூலம் நெல் அறுப்பதையும் செய்து காட்டுகிறார்.
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தேவையான புல் மற்றும் மற்ற தீவனங்களைத் தனது பண்ணையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சமாளித்துக்கொள்கிறார். கூடியவரை வெளியிலிருந்து பொருட்களை வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்துக்கு வளமூட்டும் அமுதக் கரைசல், பூச்சி விரட்டி ஆகியவற்றைத் தயாரித்துக்கொள்கிறார். இப்படிக் கொள்வதும் கொடுப்பதுமாக இவருடைய சாகுபடி முறை அமைந்துள்ளது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
விவசாயி பிச்சைமுருகன் - தொடர்புக்கு: 93627 94206
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT