Published : 16 Apr 2016 12:54 PM
Last Updated : 16 Apr 2016 12:54 PM
பி.பி.சி. நிறுவனம், தேசிய அளவில் புகழ்பெற்ற ‘சாங்சுவரி’ நிறுவனம் உள்ளிட்டவற்றின் சிறந்த ஒளிப்படக் கலைஞர் விருதைப் பெற்றவர், இந்தியாவின் முக்கியமான காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா. அதேநேரம், தனது ஒளிப்படங்களை ‘பொதுவுடைமை’ ஆக்கியதற்காக புகழ்பெற்றவர். சென்னைக்கு வந்திருந்த கல்யாண் வர்மாவை சந்தித்துப் பேசியதிலிருந்து…
யாஹூ நிறுவனத்தில் சிறந்த பணியாளராக இருந்த நீங்கள் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக ஆனது எப்படி?
சின்ன வயதிலிருந்து எனக்கு இயற்கை மீதும் காட்டுயிர் மீதும் ஈடுபாடு உண்டு. ஆனால், இன்ஜினீயராகவோ டாக்டராகவோதான் நான் ஆக வேண்டும் என்பது குடும்பத்தின் விருப்பம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு யாஹூவில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அங்கே ரொம்பவும் நேசித்து வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் என்ற எண்ணத்தில், அந்த வேலையை விட்டேன்.
வேறு வேலைக்குப் போவதற்கு முன் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஏதாவது காட்டுக்குப் போய், இயற்கைச் சூழலுடன் நன்றாகப் பழக நினைத்து கர்நாடகத்தின் பிலிகிரிரங்கா மலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அதிலிருந்து ஆறு மாதத்தில் திரும்ப வந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், வேலையை விட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நான் காட்டைவிட்டு வெளியேறவில்லை.
பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களின் வேலை போன்றவையெல்லாம் இந்தச் சமூகம் நமக்கென்று கட்டமைத்த போலிக் கனவுகள்! திடீரென்று நாம் இறக்கப்போகிறோம் என்றால் ‘நாம் நல்ல வாழ்க்கையை, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்’ என்ற உணர்வு இருக்க வேண்டுமில்லையா! அந்த சந்தோஷத்தை இயற்கையுடன் இருக்கும்போதுதான் நான் பெறுகிறேன்.
நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதைவிட ரத்தம் உறிஞ்சும் 10 அட்டைகள் என்மேல் ஊர்வது நல்லது என்றுதான் சொல்வேன். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சொகுசு, வேறு எந்த வாழ்க்கையிலும் எனக்குக் கிடைக்காது. நாகரிக வாழ்க்கை தரும் சொகுசைவிட, இயற்கையோடு வாழ்வதுதான் எனக்கு சொகுசு.
நெறிமுறைகளைப் பின்பற்றி ஒளிப்படம் எடுக்கும் மிகச் சிலரில் நீங்களும் ஒருவர். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் வழக்கமாகச் செய்யும் தவறுகள் என்னென்ன? பின்பற்ற வேண்டிய நெறிகள் என்ன?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு காட்டுயிர் ஒளிப்படக்காரர்கள் பலரும் பறவைகளின் கூடுகளைப் ஒளிப்படம் எடுக்கப் போகும்போது, நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காகக் கூடுகளைச் சுற்றியுள்ள கிளைகளை வெட்டிவிடுவார்கள். மற்ற ஒளிப்படக்காரர்கள் யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, தாங்கள் படம் எடுத்த பிறகு கூடுகளை அழித்துவிடுவதுதான் உச்சம்.
ஆந்தைகளை இரவில்தான் படம் எடுக்க முடியும். அதற்கு ஃபிளாஷ் தேவை. ஆனால், ஆந்தைகளின் கண்களோ மிகவும் மென்மையானவை. அதிக முறை ஃபிளாஷ் விழுந்தால் அதற்குப் பிறகு பல மணி நேரத்துக்கு ஆந்தைகளுக்குக் பார்வை இருக்காது; வேட்டையாட முடியாது; உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை இரண்டு தடவைக்கு மேல் ஓர் இரவில் ஓர் ஆந்தையைப் படமெடுக்க ஃபிளாஷ் பயன்படுத்த மாட்டேன். அதற்குள் நான் விரும்பிய படம் கிடைக்கவில்லையென்றால், அந்த முயற்சியைக் கைவிட்டு வேறு விஷயத்தை நாடிச் செல்வேன். இப்படி ஒரு எல்லையை நான் பின்பற்றுகிறேன். ஒளிப்படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இயற்கையைச் சிதைத்துத்தான் ஒளிப்படம் எடுக்க வேண்டுமா?
ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துவதிலும் பலரும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. பிரகாசம், நிற அடர்த்தி போன்றவற்றை மெருகூட்ட மட்டுமே நான் ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துகிறேன். எடுத்துக்காட்டாக, பருந்து போன்ற பறவைகளை ஒளிப்படம் எடுப்பதற்காக தூண்டில் நரம்பில் பாம்பைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். அந்தப் பாம்பைத் தூக்கிக்கொண்டு பறக்கும் பருந்தை ஒளிப்படம் எடுப்பார்கள். ஃபோட்டோஷாப் மூலமாக தூண்டில் நரம்பை அழித்துவிடுவார்கள். பார்க்க அட்டகாசமாகத்தான் இருக்கும். ஆனால், எவ்வளவு பெரிய மோசடி!
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நானும் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால், அவற்றை உணர்ந்து என்னை மாற்றிக்கொண்டுவிட்டேன். நெறிமுறைகளைப் பொறுத்தவரை எழுதப்பட்ட விதிகள் என்று ஏதும் இல்லை. அவரவர் தங்கள் உள்ளத்தால் உணர்ந்து பின்பற்ற வேண்டியவை அவை.
நமக்கு உண்மையாக இல்லாமல், ஒரு நல்ல ஒளிப்படத்தை எடுக்க முடியாது. நாம் படம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் போன்றவற்றின் மீது மதிப்பு இல்லாமல் எடுக்கப்படும் ஒளிப்படம், நல்ல காட்டுயிர்ப் ஒளிப்படமாக இருக்கவே முடியாது.
உயிர்ப்பன்மையைக் காப்பதில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களின் பங்கு என்ன?
நிறைய இடங்களுக்குப் பயணம் செய்வதால் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு பிரதேசத்தின் பூர்வகுடி மக்களிடம் இயற்கையைக் குறித்த இயல்பான அறிவு இருக்கும். அந்த அறிவு தற்போது வேகமாக மறைந்துவருகிறது. கர்நாடகத்தின் பிலிகிரிரங்கா மலைப் பகுதியில் வசிக்கும் சோளகர் இன மக்கள் கருங்கழுகை (Black Eagle) ‘கான கத்தலே’ என்று அழைக்கிறார்கள். ‘காட்டின் இருட்டு’ என்று அதற்கு அர்த்தம். எவ்வளவு அழகான பெயர்! இதுபோல் 70-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்குத் தனித்துவமான, அழகான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயிரினங்களைப் பற்றிய உள்ளூர் ஞானம், கலாசார அறிவு போன்றவற்றையும் திரட்ட வேண்டும் என்று அதனால்தான் நினைக்கிறோம். ஒன்றைப் பற்றித் தெரிந்திருந்தால்தான், அதன்மீது உண்மையான அக்கறை ஏற்படும்.
உங்கள் ஒளிப்பட வாழ்க்கைப் பயணத்தில் கவித்துவமான தருணங்கள் எவை?
அது 2007-ம் ஆண்டு. கேரளத்தின் எரவிக்குளம் தேசியப் பூங்காவின் ஓர் இடத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தேன். மிகமிகத் தனிமையான இடம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு அம்மா வந்து சமைத்துக்கொடுத்துவிட்டுப் போவார்கள். மற்றபடி சுற்றிலும் 20 கிலோமீட்டருக்கு ஒரு மனித உயிர்கூட கிடையாது. டி.வி., செல்போன், மின்சாரம், வாகனங்கள் எதுவும் கிடையாது.
எனது கேமரா பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக மட்டும் சோலார் சார்ஜர் ஒன்று வைத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு இந்த உலகத்துடன் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு இருந்தேன். நான் தங்கியிருந்த சிறு குடிலிலிருந்து ஆடைகளின்றி மலையேறச் செல்வேன். புல்வெளிகளில் நடப்பேன். சோலைப் புல்வெளிகள் விரிந்து கிடக்கும். அந்தக் காட்சிக்குள் நடந்துசெல்வது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.
இப்படி எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு இருக்கும்போது தனிமையுணர்வு வாட்டி வதைக்கும் இல்லையா? எனக்கோ அங்கே ஒருவித ஆன்மிக உணர்வு கிடைத்தது. அதைச் செய், இதைச் செய் என்று இந்தச் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. உள்ளுணர்வு வழிநடத்த நம் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட இயற்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்தத் தருணத்தில் இந்த உலகில் எதுவுமே எனக்குத் தேவையாக இருக்கவில்லை. உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாக அப்போது உணர்ந்தேன்.இயற்கை மட்டுமே அப்படிப்பட்ட உணர்வைத் தர முடியும்.
உங்களுக்குக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்கள்…
அங்கீகாரங்களைவிட எனக்கு முக்கியமான விஷயம் மனதிருப்திதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், செயல்பாடுகள் பலவற்றுக்கு என் ஒளிப்படங்களைக் கொடுத்திருக்கிறேன். வால்பாறையில் வாகனங்களில் அடிபட்டு சோலை மந்திகள் (சிங்கவால் குரங்கு) தொடர்ந்து இறப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் எத்தனையோ தடவை முறையிட்டும், கண்டுகொள்ளப்படவில்லை.
சோலை மந்திகள் அடிபட்டுக் கிடப்பது குறித்து நான் எடுத்த ஒளிப்படங்களை நெடுஞ்சாலைத் துறை பொறியாளரிடம் காட்டியபோது, அவர் அதிர்ந்துபோனார். விளைவாக நிறைய வேகத்தடைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார். இதுபோன்ற மாற்றங்கள்தான் அங்கீகாரங்களைவிட அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன.
உங்கள் ஒளிப்படங்களை எல்லோரும் இலவசமாகப் பயன்படுத்தும் விதத்தில் ‘பொதுப்பயன்பாட்டுக்கான படைப்பு’களாக (Creative Commons) ஆக்கியிருக்கிறீர்கள் அல்லவா?
அப்போது, நான் காட்டுயிர் ஒளிப்படத் துறையில் நுழைந்து ஒரு சில வருடங்கள் ஆகியிருக்கும். ‘அற்புதமான இயற்கைக் காட்சிகள்’ என்று ஒருமுறை எனக்கு வந்த மின்னஞ்சலைப் பார்த்தால், அதிலுள்ள ஒளிப்படங்களில் மூன்று நான் எடுத்தவை! அன்று அழுதேவிட்டேன். நம் ஒளிப்படங்கள் நன்றாக இருப்பதால்தானே, இத்தனை பேர் பகிர்ந்துகொண்டு ரசிக்கிறார்கள்!
‘ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்துக்கான டி.வி.டி. அட்டைக்காக இணையத்தில் பாம்பின் ஒளிப்படங்களைத் தேடியிருக்கிறார்கள். நான் எடுத்த ஒளிப்படமொன்று நல்ல துல்லியத்துடன் கிடைத்ததால், அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிறகு அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதமும் காசோலையும் வந்திருந்தது. ‘உங்கள் படத்துக்குப் பணம் கொடுக்கத் தேவை இல்லைதான். எனினும், இப்படி இலவசமாகப் பகிர்ந்துகொள்ளும் உங்கள் குணத்துக்காக சன்மானம் அனுப்ப விரும்பினோம். 400 டாலருக்கான காசோலையைப் பெற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது.
எல்லாவற்றிலும் உச்சம் பி.பி.சி.யிடமிருந்து வந்த அழைப்புதான். 2007-ல் பி.பி.சி.யில் தவளைகளைப் பற்றிய ஆவணப்படத்துக்காக ‘கருநீலத் தவளை’யின் படத்தை இணையத்தில் தேடியிருக்கிறார்கள். கிடைத்த ஒரே ஒரு படம் வால்பாறையில் நான் எடுத்தது. அதைப் பார்த்துவிட்டு, ‘கருநீலத் தவளைக்கென்று இணையத்தில் கிடைக்கும் ஒரே ஒளிப்படத்தை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
இந்தத் தவளையை எங்கே பார்க்கலாம் என்று எங்களுக்கு உதவ முடியுமா?’ என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். இப்படித்தான் பி.பி.சி.க்காக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் எனது ஒளிப்படங்களையெல்லாம் இலவசமாகப் பகிர்ந்துகொண்டதால்தான், இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன.
இறுதியாக ஒரு கேள்வி. இயற்கையுடன் இருக்கும்போது கேமரா ஒரு இடையூறுதானே!
உங்களுடன் 100 சதவீதம் நான் உடன்படுகிறேன். பெரும்பாலான நேரம் கேமராவை மறந்து இயற்கையில் திளைத்துக்கொண்டுதான் இருப்பேன். தவறவிடக் கூடாத தருணங்களில் மட்டும்தான், கேமராவைக் கையில் எடுப்பேன். காட்டுயிர் ஒளிப்படக்காரராக இருப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் இடையே ஒரு சமரசத்தை மேற்கொண்டாக வேண்டும்.
- ‘தி இந்து’ 2016 சித்திரை மலரில் வெளியான நேர்காணலின் சுருக்கமான வடிவம்
கல்யாண் வர்மா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT