Published : 05 Mar 2022 11:21 AM
Last Updated : 05 Mar 2022 11:21 AM
பாம்பு என்கிற சொல் நம் காதில் விழுந்தாலே பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் பாம்புகளின் நஞ்சு. ஆனால், உண்மையில் பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை. அறிவியல் புரிதல் வளர்ந்துவிட்ட இக் காலத்தில் பாம்புகளைக் கண்டவுடன் மனிதர்கள் கொல்வதும், நஞ்சுடைய பாம்பு களால் மனிதர்கள் கடிபட்டு உயிராபத்தை எதிர்கொள்வதும் முடிவுக்கு வந்தபாடில்லை.
வீட்டிற்குள் நுழையும் பாம்பை அடிப்பதாலோ அல்லது பிடித்து வேறொரு இடத்தில் விடுவதாலோ மீண்டும் வீட்டிற்குப் பாம்பு வராது என்பது நிச்சயமில்லை. எனவே, மனிதர்களின் வாழ் விடங்களுக்குள் பாம்புகள் வராமல் இருப்பதற்கான வழிவகையைக் கண்டடைவதோடு, அவற்றை எதிர் கொள்வதற்கான அணுகுமுறையை அறிவதும் அவசியம்.
பாம்புகள் நம் அருகில் வசித்தாலும் நம் நடமாட்டங்களை நன்கு உணர்ந்தே செயல்படு கின்றன. அதிகாலை, அந்திப்பொழுது, இரவுப் பொழுதுகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிக மாக இருக்கிறது. மழைக்காலத்தில் அவற்றின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதாலும், வெயில் காலத்தில் உணவிற்காகவும், வேறு சில இடையூறுகளிலிருந்து தப்பிக்கவுமே மனிதக் குடியிருப்புக்குள் அவை நுழைகின்றன.
ஏன் வருகின்றன?
பொதுவாகப் பாம்புகள் தரைவாழ் பண்பை யும், சில பாம்புகள் மரவாழ் பண்பையும் பெற்றிருக்கின்றன. சில பாம்புகளைத் தவிர பெரும்பாலானவை சுவர்களில் ஏறுவதில்லை. ஆனால், ஏறுவதற்கு வாய்ப்பாக மரக்கிளையோ வேறு ஏதேனுமோ இருந்தால் அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றன. வீட்டின் கழிவுநீர்க் குழாய், கதவு இடுக்கு வழியாகவும் சில நேரம் பாம்புகள் நுழைந்துவிடுகின்றன. இதுபோன்ற பகுதிகளைக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் குடியிருப்பினுள் பாம்புகள் நுழைவதைத் தடுக்க முடியும்.
பாம்புகள் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. உணவு, நீர், பாதுகாப்பு இருக்கும் வரை ஓரிடத்தில் இருக்கும். இவை கிடைக்காதபொழுது அடுத்த இடம் தேடி நகர்கின்றன. வீடுகளில் அன்றாடம் மிஞ்சும் உணவை முறையாக அகற்றாமல் கழிவுகளோடு விடுவது, கழிவுநீர் தேங்கியிருப்பது போன்றவை எலி, தவளை எனப் பல உயிரினங்களை ஈர்க்கிறது. இவை பாம்புகளை ஈர்க்கின்றன.
ஓரிடத்தில் இருக்கும் எலிகளைப் பாம்புகள் உண்டு, பிறகு எலி வளையிலே தஞ்சமடையவும் செய்யலாம். கூடவே கற் குவியல், விறகுக் குவியல் போன்றவை அவற்றுக்கு வாழ்விடமாகின்றன. பாம்புகளிடம் இருந்து நாம் விலகியிருப்பதற்கான நிரந்தரத் தீர்வு நம் இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதோடு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான். இதையும் மீறி மனித இருப்பிடத்துக்குள் பாம்பு நுழைந்துவிட்டால் மறுநொடி அங்கிருந்து வெளியேறவே முயலும்.
எப்படித் தவிர்க்க வேண்டும்?
எப்பொழுதும் எங்கு வேண்டுமானாலும் பாம்பு களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, கழற்றி வைக்கப்பட்டிருக்கும் ஷூக்களைச் சரியாகப் பார்க்காமல் அப்படியே காலை நுழைப்பது, தோட்ட வேலை செய்யும்பொழுது, விறகை எடுக்கும் நேரம், இருட்டில் புறவாசலில் கொடியில் கிடக்கும் துணியை எடுக்கச் செல்லும்பொழுது, கைவிளக்கில்லாமல் இரவில் உலாவுவது உள்ளிட்ட செயல்பாடுகளின்போதே பாம்புகள் பெரும்பாலும் எதிர்ப்படுகின்றன. நாம் வாழுமிடம்தானே என முன்னெச்சரிக்கையற்று அலட்சியமாகச் செயல்படும்போது, பெரும் ஆபத்தில் முடிகிறது.
பாம்புகள் எவ்வகைச் சூழலில் வாழ்ந்து வருகின்றன, எப்பொழுது வெளியே வரும், எங்கெல்லாம் அவை இருக்க வாய்ப்பு உண்டு, பாம்புகளை எதிர்கொள்ளும் சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பது போன்ற அடிப்படைத் தகவல்கள் பாம்புக் கடியிலிருந்து நம்மை விலக்கிவைக்கும். இரவில் வெளியே செல்லும்பொழுது விளக்கைப் பயன்படுத்த வேண்டும், கையில் தடியை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை வழியில் பாம்புகள் இருந்தாலும் தரையில் தடியைத் தட்டும்பொழுது ஏற்படும் அதிர்வில் அங்கிருந்து அவை நகர்ந்து விடும். இதுபோல நாம் செய்யும் ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நம்மைக் காப்பாற்றும்.
நம்மைச் சுற்றிப் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளை அடையாளம் கண்டுகொள்ளத் தயாராக வேண்டும். அத்துடன் அவற்றின் இயல்பை அறிந்திருப்பது பாம்பின் மீதான பயத்தைக் குறைப்பதோடு, நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பாம்புகளைச் சந்திக்கும்பொழுது பயம் கொள்ளாமல், அந்தச் சூழலை எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். பாம்புகளை மீட்பவர்களைப் பற்றி அறிந்திருப்பதும் அவசியம். பெரும்பாலான வீடுகள் பாம்பு வந்த பின்னே சுத்தம் அடைந்திருக்கின்றன. அவற்றைக் குறித்த அறிவைப் பெறாது, இன்னமும் பூண்டையும் இஞ்சியையும் அரைத்து தெளித்துக்கொண்டிருப்பது காசைத்தான் விரயமாக்கும். வேதிப்பொருள்களைத் தூவுவதோ நமக்கே ஆபத்து.
கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT