Published : 17 Jun 2014 12:00 AM
Last Updated : 17 Jun 2014 12:00 AM
ஆசியாவிலேயே, மிகப் பெரிய உப்பு நீர் ஏரி இந்தியாவில்தான் உள்ளது. கிழக்குக் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஒடிஷா மாநிலத்தில் உள்ள அந்த ஏரியின் பெயர். சிலிகா. பல நாடுகளில் இருந்து வலசைப் பறவைகளும், வேகமாக அழிந்து வரக்கூடிய பாலூட்டியான ஐராவதி டால்ஃபின்களும் இங்கு உள்ளன.
நாம் வாழும் பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். சில இடங்கள் மனிதர்களுக்கு நேரடி பலன்களைத் தரும். உதாரணத்துக்குக் காடுகள். இன்னும் சில இடங்கள் மறைமுகப் பலன்களைத் தரும். நேரடியாக மனிதர்களுக்குப் பயனளிக்காவிட்டாலும்கூட, நம்முடைய சுற்றுச்சூழலில் முக்கியமான பங்களிப்பைச் செய்துவரும். உதாரணத்துக்கு, சதுப்பு நிலங்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களில் ஒன்றுதான் ஆங்கிலத்தில் ‘லகூன்' என்று அழைக்கப்படும் ‘உப்பங்கழிகள்' அல்லது ‘உப்புநீர் ஏரிகள்'. அப்படிப்பட்ட சதுப்புநிலம்தான் சிலிகா.
1970 முதல் 2000-ம் ஆண்டுவரைக்கும், இந்த ஏரி கவனிப்பாரற்றுக் கிடந்தது. அதன் காரணமாக, அந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள் பரவிப் பாழாய்ப்போனது. இந்த ஏரியைக் காப்பாற்ற ஒடிஷா அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதைச் சொல்கிறது ‘சிலிகா - ஒடிஷாவின் ஆபரணம்' எனும் ஆவணப்படம்.
காட்டுயிர் இயக்குநர்
பிரபலக் காட்டுயிர் ஆவணப்பட இயக்குநர் சேகர் தத்தாத்ரியின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது இந்தப் படம். சென்னையைச் சேர்ந்த சேகர் தத்தாத்ரி, தன்னுடைய படைப்புகளுக்காகப் பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர். சோலைக்காடுகள், புலிகள், முதலைகள் போன்றவை குறித்து பல முக்கிய ஆவணப்படங்களை எடுத்திருக்கும் இவர், சமீபத்தில் இயக்கியுள்ள படம் ‘சிலிகா'.
எளிதாகப் புரியும் வகையில் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தைப் பார்க்கும்போது, நாமே சிலிகா ஏரிக்குச் சென்றுவந்த பூரிப்பு ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த ஏரியில் கொஞ்சம் கொஞ்சமாக வண்டல் மண் சேர ஆரம்பித்தது. அதனால் கடல் நீர் உள்ளே வரும் வழி அடைபட்டுவிட்டது. இதனால், உவர் நீர் தன்மை கொண்ட ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த ஏரி, நன்னீர் ஏரியாக மாறிவிட்டது. ஏற்கெனவே 1.5 மீட்டர் ஆழமே உள்ள இந்த ஏரி வண்டல் மண் அதிகரித்ததாலும், ஆகாயத் தாமரை போன்ற களைகள் பெருகியதாலும், மேலும் ஆழம் குறைந்துபோனது.
மீட்புப் பணி
இதன் காரணமாக அந்த ஏரியைச் சார்ந்திருந்த மீன்கள், ஓங்கில்கள் (டால்ஃபின்) உள்ளிட்ட உயிரினங்களும், வலசை வரும் பறவைகளின் வரத்தும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. இந்த ஏரியைப் பாதுகாக்க ‘சிலிகா மேம்பாட்டு ஆணைய'த்தை ஒடிஷா அரசு உருவாக்கியது. அந்த ஆணையத்தின் முயற்சியால் ஏரிக்குக் கடல் நீர் உள்ளே வரும் வழி மீண்டும் உருவாக்கப்பட்டது. இதனால் மீண்டும் அந்த ஏரி உவர் நீர் தன்மை கொண்டதாக மாறியது. களைகளும் அகற்றப்பட்டன. வண்டல் மண் குறைந்து, ஏரியின் ஆழம் பழைய நிலைக்குத் திரும்பியது.
இந்த ஏரிக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, சைபீரியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வலசைப் பறவைகள் வருகின்றன. மேலும், மிக வேகமாக அழிந்து வரும் இனமான ‘ஐராவதி ஓங்கில்கள்' இந்த ஏரியில் 150 இருக்கின்றன.
ஆங்கிலத்தில் Wetland என்று அழைக்கப்படும் ‘ஈரநிலங்கள்' பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் கருதி சர்வதேச அளவில் 1971-ம் ஆண்டு ‘ராம்சர் உடன்படிக்கை' ஏற்படுத்தப்பட்டது. அந்த உடன் படிக்கையின் அடிப்படையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் முதல் ஈரநிலமாக அங்கீகரிக்கப்பட்ட ஏரி சிலிகா.
சுற்றுலாத் தலம்
இன்று அந்த ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே ஓங்கில்கள் உள்ளன என்று கூறி மீனவர்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள். உண்மையில், மற்ற ஓங்கில்களைப் போல ஐராவதி ஓங்கில்கள் நீருக்கு மேல் வந்து குட்டிக்கரணம் அடிப்பதில்லை. அவை, மிகுந்த கூச்சச் சுபாவம் கொண்டவை. பெரும்பாலான நேரம் ஓங்கில்களின் முதுகையோ அல்லது செதில்களையோதான் நம்மால் பார்க்க முடியும். இங்கு இயக்கப்படும் மோட்டார் படகுகளில் அடிபட்டுப் பல ஓங்கில்கள் காயமடைகின்றன.
மேலும், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் மீன் பிடிப்பதால், உணவு கிடைக்காமல் ஓங்கில்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஏரியைப் பாதுகாக்க விஞ்ஞானிகளால் மட்டுமே முடியாது. உள்ளூர் சமூகமும் கைகொடுத்தால்தான் அதைக் காப்பாற்ற முடியும் என்பதால், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறது ‘சிலிகாவை நிர்வகித்தல்' எனும் 15 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம்.
மொத்தத்தில், ஒடிஷாவின் ஆபரணம் சிலிகா ஏரிதான் என்பதை நம் மனதில் பதிய வைத்துச் செல்கின்றன இந்த இரண்டு ஆவணப்படங்களும்!
சேகர் தத்தாத்ரி
தன் 13வது வயதில் ‘சென்னை பாம்புப் பண்ணை'யில் மாணவத் தன்னார்வலராகச் சேர்ந்தார். அப்போது அவர் கற்றுக்கொண்ட விஷயங்களால் காட்டுயிர் ஆவணப்பட இயக்குநராக மாற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 1987-ம் ஆண்டு அவருடைய முதல் ஆவணப்படமான ‘எ கோஆபரேட்டிவ் ஃபார் ஸ்நேக் கேட்சர்ஸ்' சிறந்த அறிவியல் படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசிய விருதைப் பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தேசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.
பி.பி.சி., டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரஃபிக் போன்ற சர்வதேசத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்த படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஆவணப்படங்கள் இயக்குதல், தயாரித்தல், ஒளிப்பதிவு செய்தல் தவிரப் பல்வேறு இதழ்களில் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவர் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், ஓவியரும்கூட.
இவருடைய சமீபத்திய ஆவணப்படமான ‘சிலிகா... ஒடிஷாவின் ஆபரணம்' எனும் படம் வாதாவரன் காட்டுயிர், சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2014-ல் ‘பல்லுயிரிய' பிரிவில் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT