Published : 19 Feb 2022 11:08 AM
Last Updated : 19 Feb 2022 11:08 AM
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துத் தமிழகத்தில் பேசப்பட்டாலும், அது சார்ந்து வெளியாகும் காத்திரமான படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமூக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களும்கூட சமூக ஊடகப் போக்குக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றனவே அன்றி, தீவிரமான களச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இந்தப் பின்னணியில் இன்றைய சூழலியல் எழுத்து குறித்துப் பேசுகிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன். காட்டுயிர், சுற்றுச்சூழல் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் இவர், மக்கள் அறிவியல் திட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்துவருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு சார்ந்த செயல்பாடுகள் அறிவியல்பூர்வமாக அமைய வேண்டும் என்று வலியுறுத்துபவர். அவருடைய நேர்காணலிலிருந்து:
தமிழில் சூழலியல்-பசுமை எழுத்து வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் எழுத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்?
ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா எனச் சொல்ல முடியவில்லை. இன்னும் தரமான நூல்கள், உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் வரவேண்டும். களப்பணி முறைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்கு விக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கிப் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இயற்கை பாதுகாப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள், குறிப்பாகப் பெண்கள் தமிழில் எழுத முன்வர வேண்டும். சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ போல இன்னும் பல புதினங்களும், இயற்கை சார்ந்த புனைவிலக்கியங்களும் வரவேண்டும். அர. செல்வமணி, அவை நாயகன், ஆசை ஆகியோரின் படைப்புகளைத் தவிர இயற்கை சார்ந்த கவிதைகள் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை (பெருமாள் முருகனின் பறவை, இயற்கைக் கீர்த்தனைகள் தனி). Green Humor போன்ற சூழலியல் கேலிச்சித்திரங்களும் தமிழில் வரவேண்டும். இயற்கை சார்ந்த சிறார் இலக்கியம் தமிழில் அதிகம் வெளியாக வேண்டும்.
மூன்று நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்திப் பார்க்கவோ, படிக்கவோ தயாராக இல்லாத இன்றைய இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செய்திகளைப் பல வகைகளில், பல தளங்களில் (காணொளி, infographics) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சூழலியல் பிரச்சினைகள் அறிவியல்பூர்வ மாக முன்வைக்கவும், விவாதிக்கவும் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? குறிப்பாகத் தொலைக்காட்சி, சமூகஊடக விவாதங்களில் ஆரோக்கியமான போக்கு தென்படுகிறதா?
சமகாலப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் வகையில் எளிய முறையில் சொல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால், அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ குறித்து நிறையப் பேசப்பட்டது. ஆனால், ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன், எல்லாரும் ‘இயல்பு நிலைக்குத்’ திரும்பிவிட்டோம். இந்தியாவில் காடுகள் அதிகரித்துவிட்டதாக அண்மையில் ஒன்றிய அரசின் அறிக்கை வெளியானது. படித்துப் பார்த்தால் தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் காடுகள் என ‘கணக்கு’ காட்டியிருக்கிறார்கள். இது குறித்துப் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்தியக் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத் (1972) திருத்தம் குறித்து தமிழில் செய்திகள்கூட பரவலாக வந்ததாகத் தெரியவில்லை. எல்லா சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனப்படுத்தாமல், வசதிக்கேற்ப ‘செலக்டிவாக’ பிரச்சினைகளைக் கவனப்படுத்துவது ஆபத்து.
காலநிலை மாற்றம் பற்றித் தமிழகத்தில் குறைந்தபட்ச விழிப்புணர்வு இருக்கிறதா, அது சார்ந்து தமிழக சூழலியல் செயற்பாட் டாளர்களின் அணுகுமுறை எப்படியிருக்கிறது?
காலநிலை மாற்றம் குறித்துப் பலரும் அறிந்தே இருக்கிறார்கள். நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றின் விளைவுகளைப் பற்றி முழுமையாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்று கூற முடியவில்லை. இது குறித்துத்தான் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்வதற்கு மாற்றாகப் பசுமை ஆற்றல் முன்வைக்கப்பட்டாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும். ‘The Guardian’ தினசரியைப் போல. காலநிலை அவரசநிலை குறித்த புரிதலும், அக்கறையும் கொண்ட ஊடகங்கள், செய்தி யாளர்களை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். செய்தித்தாள்களில் இதற்கெனத் தனியாகப் பக்கம் ஒதுக்க வேண்டும்.
தமிழ்ச் சூழலியல் எழுத்து என்று வரும்போது காட்டுயிர்கள், இயற்கை குறித்துப் போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா? இல்லை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய ‘மேம்போக்கான கவனப்படுத்தல்’ ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?
வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தின் அளவு குறைக்கப்பட இருந்தபோது சென்னையைச் சேர்ந்த இளம் இயற்கை ஆர்வலர்கள் பலர் பங்குகொண்டார்கள். கொடைக்கானல் பாதரசக் கழிவினால் ஏற்படும் மாசு, எண்ணூர் கழிமுக மாசு குறித்துக் கலை வடிவிலும் (ராப், கர்னாடக இசைப் பாடல்) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டு வழிச்சாலையை எதிர்த்து மக்கள் வெகுண் டெழுந்ததைப் பார்த்தோம். கவுத்தி- வேடியப்பன் மலைப்பகுதிகள் மக்கள் போராட்டங்களாலேயே காப்பாற்றப்பட்டன. இப்போது சிப்காட் வருவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இவை அனைத்தும் ஒரே இடத்தில் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை அழித்தால் மனிதர்களுக்கும் மோசமான பாதிப்பு ஏற்படும் என்பதை ஆதாரப்பூர்வமாகப் புரியவைத்தால் பெரும்பாலோர் போராடுவார்கள். அந்தப் புரிதலை ஏற்படுத்துவது இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அது சார்ந்து படைப்புகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் கடமை.
சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் வாசித்த வற்றில் குறிப்பிடத்தக்கத் தமிழ் சூழலியல் புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா?
நாராயணி சுப்ரமணியன், சுபகுணம், மா, ரமேஸ்வரன் ஆகியோரது சூழலியல், இயற்கை யியல் சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பரிதியின் ‘பட்டினிப் புரட்சி’, நக்கீரனின் ‘நீர்எழுத்து’, வறீதையா கான்ஸ்தந்தினின் ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ஜா. செழியனின் ‘பறவைகளுக்கு ஊரடங்கு’, சு. பாரதிதாசனின் ‘பாறு கழுகுகளைத் தேடி’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்ச் சூழலியல் படைப்புகளின் மொழிநடை, எடிட்டிங் போன்றவை மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?
இன்னும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடு வைக்கின்றன, கூகை ஒரு வெளிநாட்டுப் பறவை, யானைகள் அட்டகாசம் செய்கின்றன, சிறுத்தைகள் ஊருக்குள் ஊடுருவின என்றே எழுதிக்கொண்டிருக்கிறோம். செஞ்சந்தனம் அல்லது சந்தன வேங்கை என்கிற மரபான சொற் பிரயோகங்கள் காணாமல் போய், செம்மரம் ஆகிவிட்டது. வைரசைத் தமிழில் நச்சுயிரி என்று காலங்காலமாகப் படித்துவருகிறோம். ஆனால், இப்போது அது தீநுண்மியாக திடீர் மாற்றம் அடைந்திருக்கிறது. இது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவோ, கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.
இயற்கைப் பாதுகாப்பு குறித்த சொல்லாடலில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. வார்த்தைகளைச் சரியாகக் கையாளுதல் (மனித-விலங்கு மோதல் அல்ல; மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்), சரியான பதங்களை, மரபுப் பெயர்களைப் பயன்படுத்துதல், வழக்கொழிந்த பெயர்களை மீட்டெடுத்தல், சரியான துறைச்சொற்களை உருவாக்குதல் என ஒவ்வொன்றும் நமக்கு அவசியம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
ஊர்ப்புற, வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு: பிப்ரவரி 18 – 21 25ஆம் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பும் (Great Backyard Bird Count – GBBC) , வளாகப் பறவைகள் கணக்கெடுப்பும் (Campus Bird Count) இந்த ஆண்டு 18-21 பிப்ரவரியில் நடக்கின்றன. நம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளைக் கணக்கெடுப்பதே ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு, ஒரு வளாகத்துக்குள் இருந்து பொதுப்பறவைகளைக் கணக்கெடுப்பது வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு. இந்த இயற்கைத் திருவிழாவில் உலகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் நீங்களும் இணைந்து பங்கேற்கலாம். இதற்காக நீங்கள் எங்கோ வெகு தூரம் செல்லத் தேவையில்லை. உங்கள் வீடுகளிலிருந்தோ, உங்களது பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற இயற்கை வளம் மிகுந்த இடங்களில் இருந்தோ பறவைகளைக் கவனித்து eBird-ல் பட்டியலிடலாம். கூடுதல் தகவல்களுக்கு: https://birdcount.in/events/ |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT