Last Updated : 30 Apr, 2016 12:25 PM

 

Published : 30 Apr 2016 12:25 PM
Last Updated : 30 Apr 2016 12:25 PM

நின்று கொல்லும் செர்னோபில்

l உலகில் மிக மோசமான அணுஉலை விபத்துகளுக்கு அடையாளமாகக் கூறப்படும் செர்னோபில் அணுஉலை விபத்து நடைபெற்று 30 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.

l அணுஉலை விபத்துகளிலேயே மிகவும் மோசமான விபத்துகள், நிலை 7 என்று வகைப்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு விபத்துகளில் முதலாவது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை விபத்து. மற்றொன்று 2011-ல் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமாவில் நடைபெற்ற அணுஉலை விபத்து.

l செர்னோபில்லில் அமைந்திருந்த நான்கு அணுஉலைகளில் திடீரென மின்சாரம் தடைபட்டுவிட்டால் சமாளிப்பது எப்படி என்று பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது 4-வது அணுஉலை வெடித்தே இந்த விபத்து நேரிட்டது. அவசரகால ஒத்திகையின்போதே தாக்குப்பிடிக்காத அளவுக்கு மோசமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்த அணுஉலை. நான்காவது அணுஉலையில் இருந்த கிராஃபைட் மாடரேட்டர், உறுதியான பொருளால் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்குக் காரணம். இது மிக மோசமான வடிவமைப்புக் கோளாறு.

l இதன் காரணமாகப் பெலாரஸ், ரஷ்யா, உக்ரைன் பகுதிகளில் கதிரியக்க மாசு பரவியது. அதிகாலை 1.23 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் 31 பேர் மட்டுமே உடனடியாகப் பலியாகினர். பெலாரஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்கள்.

l சுற்றுவட்டாரத்தில் இருந்த 6 லட்சம் பேர் கதிரியக்க மாசால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் செர்னோபில் அணுஉலையும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன.

l செர்னோபில் அணுஉலை விபத்தால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000 ஆக இருக்கலாம் என்று ஐ.நா. சபையின் 2005 அறிக்கை தெரிவிக்கிறது.

l இன்றைக்கும் இந்த அணுஉலையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தச் சார்கோபாகஸால் செய்யப்பட்ட கூரை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x