Last Updated : 30 Apr, 2016 12:21 PM

 

Published : 30 Apr 2016 12:21 PM
Last Updated : 30 Apr 2016 12:21 PM

குப்பைகளின் கதை

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா? சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது அடைந்திருக்கும் சூழல் சீர்கேட்டின் அடையாளம்தான் இந்தக் குப்பைக் காடு. ‘எவ்வளவு மோசம் இந்த மாநகராட்சி! இப்படியா பள்ளிக்கரணையைக் குப்பைக்காடாக்கிச் சீரழிப்பது? இவ்வளவு குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார்களே’ என்றெல்லாம் அங்கலாய்க்க நமக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. நாம் போட்ட குப்பையும்தானே அங்கே வளர்ந்து காடாகியிருக்கிறது.

குப்பைக் காடு

முன்பெல்லாம் நாம் குப்பை மேடுகளைத்தான் பார்த்திருந்தோம். அவற்றின் அடுத்த கட்டப் பரிமாணம்தான் குப்பைக் காடுகள். ஒரு வகையில் காடுகளுக்கும் குப்பைக் காடுகளுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இடம்பெயரச் செய்து, திரித்தழிக்கப்பட்ட காடுகள்தானே குப்பைக்காடுகள். இந்த உணர்வுதான் ‘பொருட்களின் கதை’ நூலாசிரியரான ஆனி லியோனார்டுக்கும் ஏற்பட்டது. நியூயார்க்கில் சூழலியல் வகுப்புகளுக்காகச் செல்லும்போது தான் கண்டதை அவர் இப்படி எழுதுகிறார்:

“… அப்போது நியூயார்க் நகரத்தின் தெருக்களில் ஓரமாகக் குவிந்து காணப்படும் குப்பைக் குன்றுகளைப் பார்க்க வேண்டியிருந்தது. பத்து மணி நேரம் கழித்து என்னுடைய விடுதிக்கு நான் திரும்பி வருவேன். அப்போது அந்தக் குப்பைகள் அகற்றப்பட்ட காலியான பக்கவாட்டு நடைதளத்தின் வழியாக நடந்து வரவேண்டியிருந்தது. இந்த முடிவற்ற குப்பைத் திரட்சிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பொருட்கள் என்னவென்று கவனித்தபோது, அவை காகிதம் என்பதை அறிந்து வியந்தேன். காகிதம்! காணாமல் போனதாக நான் கருதிய காட்டுமரங்கள் எல்லாம் காகிதமாக முடிவடைந்திருந்தன நான் அறிந்த பசிபிக் வடமேற்குப் பகுதியிலுள்ள காடுகளிலிருந்து மன்ஹாட்டனின் மேல் தெற்குப் பகுதிக்கு வந்தடைந்த காகிதங்கள்… அடுத்துச் சென்றடையும் இடம் எதுவோ?”

யார் போட்ட குப்பை?

இதற்குப் பிறகு குப்பைகளைப் பின்தொடர்ந்து உலகெங்கும் பெரும் பயணத்தை ஆனி லியோனார்டு மேற்கொண்டார். கிரீன்பீஸ் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு இந்தப் பயணத்தைத் தொடர்கிறார். பயணத்தின் வழிதோறும் புதுப்புது தரிசனங்கள் அவருக்குக் கிடைக்கின்றன. குப்பைமேடுகள் என்பவை ஒரு செயல்முறையின் இறுதி இலக்குகள் என்றால், அவை தொடங்கும் இடங்கள் எவை? அது குறித்தும் ஆய்வுசெய்கிறார்.

அதேபோல் குப்பை உருவாக்கப்படும் இடமும், அது கொண்டுசென்று கொட்டப்படும் இடமும் ஒன்றல்ல என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்கள் உருவாக்கிய குப்பையெல்லாம் ஏழ்மையில் உழலும் மக்கள் வாழும் நகரங்களில், ஒதுக்குப்புறங்களில்தான் கொட்டப்படுகின்றன. அதுமட்டுமல்ல, செல்வந்த நாடுகளின் குப்பைத் தொட்டிகளாக மூன்றாம் உலக நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கும் ஏழ்மை, உடல் நிறம் (இனம்) போன்றவற்றால் மக்கள் குப்பைக்கு நெருக்கமாக வாழும்படி தள்ளப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் கூடுதலாக சாதியும் ஒரு காரணியாக இருக்கிறது.

தூக்கியெறிந்தால் லாபம

நாம் நுகரும் வேகத்துக்கும் ஆனி குப்பைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்கிறார் ஆனி. ‘பயன்படுத்து-தூக்கியெறி’ என்ற கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கிறார். உருவாக்கும்போதே திரும்பவும் பயன்படுத்த முடியாதபடிதான் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு பொருளைத் திரும்பவும் சரிசெய்து பயன்படுத்த முடியுமென்றாலோ, அவற்றின் பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றை வேறு வழிகளில் பயன்படுத்த முடியும் என்றாலோ சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம் குறைந்துவிடுமல்லவா! ஆகவே, பயன்படுத்தி-தூக்கியெறியும் பொருட்களை மட்டுமல்லாமல், அந்த மனப்பான்மையையும் மக்களிடையே வெற்றிகரமாக உற்பத்தி செய்துவிடுகிறார்கள்.

உறுத்தும் நிஜம்

நமது ஒரு கோப்பை காப்பிக்கு 36 கேலன் நீர் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஒரு டீஷர்ட்டை உருவாக்க 256 கேலன்கள் நீர் பயன்படுகிறது என்றும் ஒரு டன் காகிதத்தைத் தயாரிக்க 98 டன் எடையுள்ள இதர பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்தப் புத்தகம் சொல்லும் தகவல்கள் வெறுமனே ‘ஆச்சரியமூட்டும் தகவல்கள்’ என்று கடந்துவிடக் கூடிய தகவல்கள் இல்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் செய்திகளைப் பார்க்கிறோம். இந்திய ஏரிகள், அணைகள் தங்கள் வழக்கமான கொள்ளளவில் 22% மட்டுமே தற்போது நீரைக் கொண்டிருக்கின்றன என்ற தகவலையும் படிக்கிறோம். இவையும் நமக்கு ஆச்சரியமூட்டும் தகவல்களாகவே இருக்கின்றன. ஆனால், 2025-ல் உலகின் நான்கில் மூன்று பங்கு மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என்ற தகவல் நமக்கு கிலியைத்தானே ஏற்படுத்தும்!

மகிழ்ச்சியைக் காணோம்

புவிவெப்பமாதல், உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றுக்கிடையே மட்டும் தொடர்பு இல்லை, அவற்றோடு குப்பைகளுக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. இயற்கையில் எதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது அல்லவா! எல்லாம் ஒன்றுக்கொன்று நுட்பமாகத் தொடர்புகொண்டவையே. இவ்வளவு குப்பையை ஏன் உருவாக்குகிறோம்? ஏன் இவ்வளவு நுகர்கிறோம்? சந்தோஷமாக இருப்பதற்குத்தானே! ஆனால், உண்மையில் நாம் எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோமா?

இல்லை! 1950-ல் அமெரிக்க மக்கள் மிக உயர்ந்த அளவு (35 சதவீதம்) மகிழ்ச்சியைக் கொண்டிருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மடிக்கணினிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், ஃபேஸ்புக் போன்ற ஏதும் இல்லாத காலகட்டம் அது. ஆக, வரலாற்றில் மனிதர்கள் மிகவும் துக்ககரமாக இருக்கும் காலகட்டமாக நமது சமகாலம் ஆனதற்கும் நுகர்வுத் தேனீக்களாக நாம் மாற்றப்பட்டதற்கும் நேரடித் தொடர்பு உண்டு.

உலகெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ‘The Story of Stuff’ புத்தகம் தமிழில் ‘பொருட்களின் கதை’ என்று பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. சரளமான நடை, பாராட்டுக்குரிய முயற்சி. எனினும் செம்மையாக்கத்திலும் கலைச்சொற்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ‘முறைப்படுத்தம்’, ‘செயலிழக்கம்’ போன்ற பிரயோகங்கள் நெருடுகின்றன. வெப்ப மண்டலம், குளிர் மண்டலம் என்பதற்குப் பதில் வெப்ப மண்டிலம், குளிர் மண்டிலம் என்றெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘Virtual water’ என்பதை ‘மாயநீர்’ என்று சொல்வதும் பொருத்தமாக இல்லை. இதற்கு, ‘மறைநீர்’ என்ற பதம் சூழலியலாளர்களால் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சிறுசிறு குறைகளைத் தாண்டியும் இந்த நூலைத் தமிழுக்கு முக்கியமான ஒரு வரவாகக் கருத வேண்டும்.

வெளியீடு: அடையாளம், தொடர்புக்கு: 04332 273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x