Published : 22 Jan 2022 11:28 AM
Last Updated : 22 Jan 2022 11:28 AM
புதிய துறைமுகத்தையும் தூத்துக்குடியையும் இணைக் கும் சாலையின் ஊடே ஆழமும், அலையும் அற்ற கழிமுகம் உள்ளது. இந்த உவர் நீருடன் ஜீவநதியான தாமிரபரணியும் கொண்டுவரும் வளமான வண்டல் மண்ணும் சேர அலையாத்திக் காடுகள் வளர்ந்து உயிர்ச்சூழல் செழித்துள்ளது. உமரிக்கீரை மட்டுமல்லாமல் வேர் பரப்பி நின்ற வெண் கண்டல் தாவரங்களும் மாறாப் பசுமையுடன் காட்சியளிக்கின்றன. இந்நிலம் நண்டு, இறால் உள்படப் பல வகையான கடல் வாழ் மெல்லுடலிகளுக்கும் மீன்களுக்கும் இனப்பெருக்க மையமாக இருக்கிறது. பறவைகள், சிறு பாலூட்டிகள், ஊர்வன என எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இருக்கிறது.
ஒரு முறை அங்கே வலையில் சிக்கியும், தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் சில பாம்புகளைப் பார்க்க முடிந்தது. அவை இரண்டரையடி நீளம் இருந்தன. அவ்வகை பாம்பை அதற்கு முன் பார்த்ததில்லை. அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டபொழுது, முந்தைய நாள் இரவில் இறாலுக்காக விரித்த வலையில் சிக்கியிருக்கலாம். இது கழிமுகத்தில் வாழக்கூடிய பாம்பு எனப் பதில் கிடைத்தது. இதற்கான தமிழ்ப் பெயர் தெரியாத நிலை யில் ஆங்கிலப் பெயரின் (Dog-faced water snake - Cerberus rynchops) மொழிபெயர்ப்பாக உவர்நீர் நாய்த்தலையன் என்கின்றனர். ‘ஹோமலாப்சிடே’ குடும்பத்தில் இப்பாம்பையும் சேர்த்துக் காணப்படும் ஒன்பதுபாம்பினங்களும் தனித்தனிப் பேரினத்தைக் கொண்டுள்ளன.
இறாலைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வலைகள், அவற்றைக் கடக்கும் உயிரினங்களுக்கு எளிதில் புலப்படாமல் சிக்கவைக்கின்றன. இரவாடியான இவை நீரில் வாழ்ந்தாலும் சுவாசிக்க அவ்வப்பொழுது நீரின் மேற்பரப்புக்கு வந்தாக வேண்டும். இப்படி வலையில் சிக்கும் வேளைகளில் மூச்சுத் திணறி இறந்துவிடுகின்றன. மேலும் வலையில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க உயிருடன் சிக்கிய பாம்புகளைக் கொன்றுவிடுகின்றனர். வன உயிரின (பாதுகாப்புச்) சட்டம் 1972-ன்படி இப்பாம்பினம் பாதுகாக்கப்பட்ட பட்டியல் இரண்டில் உள்ளதால், இச்செயல் கடுமையான தண்டனைக்குரியது.
மேல்நோக்கிய நாசித்துவாரம்
இப்பாம்பைப் பின்பு பல முறை அங்கே பார்த்திருக்கிறேன். நன்கு மேடுடைய செதில்களைப் பெற்று மூன்றடி நீளத்தில், ஐவிரல் தடிமனில் காணப் படுகிறது. இதன் வால், கடல் பாம்புகள்போல நீந்துவதற்கு ஏதுவாகத் தட்டையாக இல்லாமல் கூர்மையாக இருக்கிறது. பெரிய தலையில் சதைப்பற்றுடைய தாடையுடன் சேர்த்துப் பார்க்கும்பொழுது பேரிக்காயின் வடிவத்தை ஒத்திருக்கிறது. பழுப்பு நிற வட்ட வடிவக் கண்களில் கருநிறச் செங்குத்தான கண் பாவையைக் கொண்டுள்ளது. புடைத்துக்கொண்டிருக்கும் விழிகளும் நாசித்துவாரமும் மேல் நோக்கி அமைந்துள்ளது இப்பாம்பின் சிறப்பம்சம்.
மேலுடல் ஒரே நிறமாக நீலச் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்திலும் அதன் மேலே சற்று அடர்த்தியாக அதே நிற குறுக்குப் பட்டைகளும் காணப்படுகின்றன. பட்டைகள் இளம் பாம்புகளில் தெளிவாகவும் வளர்ந்த நிலையில் மங்கியும் காணப்படுகின்றன. அடிவயிற்றில் வெள்ளை நிறத்துடன் தெளிவான கரிய பட்டைகள் முன்னும்பின்னுமாக மாறிமாறி அமைந்துள்ளன,
தாவரங்களின் வேர்களில், அடர்ந்த கிளைகளின் ஊடே ஓய்வெடுக்கும் இவை, அங்கே காணப்படும் நண்டின் வளைகள், பிற மறைவான பகுதிகளை இருப்பிடமாக்கிக்கொள்கின்றன. அந்நிலப்பரப்பில் காணப்படும் சிறு உயிரினங்களான மீன், இறால், நண்டுகளை உணவாக்கிக் கொள்கின்றன.
நன்னீர் வீணாகிறதா?
குறைவான நஞ்சுடைய இப்பாம்பு, மேல்தாடையின் கடைவாயில் நச்சுப்பல்லைப் பெற்றிருக்கிறது. இதன் கடியால் வலி அல்லது வீக்கம் ஏற்படலாம், உயிரிழப்பு ஏற்படுவதில்லை. 2006ஆம் வருடம் இந்நிலப்பரப்பில் கடல் பாம்புகள் சார்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இப்பாம்பினம் இங்கே காணப்படுவதில்லை எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்கே மிக இயல்பாக இப்பாம்பினத்தைப் பார்க்க முடிகிறது.
இந்தியா முழுமைக்கும் கடற்கரையோரங்கள், தீவுகளில் அலையாத்திக் காடுகள் காணப்பட்டாலும், பரப்பளவில் குறைவுதான். ஆழிப் பேரலையின் தாக்கத்துக்குப் பிறகே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. இன்று நாடு முழுவதும் அலையாத்திக் காடுகள் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டிருந்தாலும் இணைப்புச் சாலைகள், போக்குவரத்து, உப்பளம், துறைமுகம், தொழிற்சாலைகள், குடியிருப்புகளின் திட - திரவக் கழிவுகள், குப்பை கொட்டுதல் - தீயிட்டு எரித்தல், இயல் தாவரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல், அயல் தாவரங்களின் முற்றுகை, சுற்றுலாத்தலம், பூங்கா எனப் பல வகைகளில் பல பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டுள்ளன.
மழைநீரைக் குடிநீராகவும் விவசாயத் தேவைக்கானதாகவும்தான் பார்க்கிறோம். உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் நம் புரிதல். இந்த நன்னீர் கடலில் கலக்கவில்லை என்றால் கழிமுகமும் இல்லை! அலையாத்திக் காடுகளும் இல்லை! இந்தப் புடைவிழியனும் இல்லை.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT