Published : 01 Jan 2022 12:16 PM
Last Updated : 01 Jan 2022 12:16 PM

2021இன் சூழலியல்: அதிகரிக்கும் ஆபத்துகளும் சில நம்பிக்கைகளும்

மஞ்சப்பை இயக்கமும் ஞெகிழியும்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விழா எடுத்து அறிவித்த ‘மஞ்சப்பை இயக்கம்’, தேசிய அளவிலான முன்னோடி முயற்சி. மஞ்சப்பை தூக்குவதை அவமானமாகக் கருத வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டது ஆரோக்கியமான முன்னுதாரணம். அதேநேரம் 75 மைக்ரானுக்கு அதிகமான ஞெகிழிப் பைகள் 2021 செப்டம்பர் மாதத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளன. ஆனால், நடைமுறையில் அதற்குக் கீழான மைக்ரான் அளவுள்ள ஞெகிழிப் பைகளும் கிடைத்துக்கொண்டுதான் உள்ளன. எனவே, அறிவிப்புகள் நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதே உரிய பலனைத் தரும்.

உத்வேகம் தந்த போராட்டம்

வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2021இலிருந்து தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் தொடங்கியது. அதேநேரம் மத்திய அரசு 2020இல் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மன உறுதியுடன் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினர். நாடு விடுதலை பெற்ற பிறகு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டக் களத்திலேயே 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மடிந்தனர். நவம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். 2022இல் நடக்கவுள்ள 7 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டே இந்த அறிவிப்பு வெளியானதாக விமர்சிக்கப்பட்டது.

ஆபத்தான திருத்தம்

வனப் பாதுகாப்புச் சட்டம் (1980) திருத்த வரைவை ஒன்றிய அரசு அக்டோபர் மாதம் வெளியிட்டது. வனப் பாதுகாப்பு சார்ந்து ஏற்கெனவே உள்ள குறைந்தபட்ச பாதுகாப்புகளையும் இந்தத் திருத்த வரைவு நீர்த்துப்போகச் செய்வதாகச் சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

மூச்சுத்திணறும் இந்தியா

2021இல் உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக ‘ஐக்யூ ஏர்’ நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. பட்டியலில் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள காசியாபாத் இரண்டாவது இடத்தில் உள்ளது.

துவம்சம் செய்த ரயில்

கோவையில் ரயிலில் அடிபட்டு இரண்டு குட்டி யானைகளும், ஒரு கருவுற்ற யானையும் உயிரிழந்தன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரயில் மோதி 14 யானைகள் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலியாகியுள்ளன. நீலகிரி யானை வழித்தடத்தை ஊடறுத்துச் செல்லும் கஞ்சிக்கோடு-மதுக்கரை, வாளையாறு-எட்டிமடை ரயில் பாதைகளிலேயே இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

மீளும் சரணாலயங்கள்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட நாட்டின் பழமையான பறவை சரணாலயமான வேடந்தாங்கலின் சரணாலய எல்லைகளைச் சுருக்கும் முயற்சி கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது. அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன் மரக்காணம் அருகேயுள்ள கழுவேலி தமிழகத்தின் 16ஆவது பறவைகள் சரணாலயம் ஆக்கப்பட்டுள்ளது, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மேகமலை சரணாலயம் புலிகள் காப்பகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

மிரட்டிய மழை, வெள்ளம்

தீவிர வட கிழக்குப் பருவ மழையால் சென்னை மாநகரம், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருநூறு ஆண்டுகளில் நான்காவது முறையாகவும், 2015க்குப் பிறகும் நவம்பர் மாதத்தில் 1000 மி.மீ.க்கு மேல் மழை பதிவானது. நவம்பர் தொடக்கத்திலும் டிசம்பர் இறுதியிலும் ஒரே நாளில் பெருமழை பெய்ததால், சென்னை வெள்ளக்காடாகித் தவித்தது. இயற்கையைப் புரிந்துகொண்டு செயல்படாததும், தவறான கட்டுமானங்களுமே மோசமான வெள்ளத்துக்குக் காரணம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மாசுக் கட்டுப்படுமா?

கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் சேலம் ஆத்தூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நடத்திய சோதனையில் 11 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் ஆகியவை செப்டம்பர் மாதம் கைப்பற்றப்பட்டன. டிசம்பர் மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகளுக்குச் சாதகமாக இருக்கலாம். அதேநேரம், தொழிற்சாலைகளின் மாசுபாடுகள் எப்படிக் கண்காணிக்கப்படும், விதிமீறல்கள் எப்படிக் கட்டுப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வனத் துறையின் முன்னோடி முயற்சி

தேவையற்று க்ராலில் அடைக்கப்பட்டிருந்த காட்டு யானை ரிவால்டோ, தமிழக வனத்துறை யிலேயே முதன்முறையாகக் காட்டுக்கு வெற்றிகரமாகத் திரும்ப அனுப்பப்பட்டது. அதேபோல், நீலகிரி பகுதியில் நான்கு பேரின் இறப்புக்குக் காரணமாக இருந்த டி23 எனும் புலி சுட்டுக் கொல்லப்படுவதற்குப் பதிலாக, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சிகள் பாராட்டைப் பெற்றன.

காலநிலை மாற்றம் விடுக்கும் எச்சரிக்கைகள்

உலகின் மிகப் பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் ‘ஏ-76’ கடலில் மிதக்கத் தொடங்கியது

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தில் 70 ஆண்டுகளில் முதன்முறையாகப் பனிக்குப் பதிலாக மழை பொழிந்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசிக்கும் 70 வயது மூதாட்டி ‘காலநிலை மாற்ற’த்தால் உடல்நல பாதிப்புக்கு ஆளான முதல் நபர் என அறிவிக்கப்பட்டது.

ஐநா பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (ஐபிசிசி) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக - ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் ஆதாரங்கள்’ ஆகஸ்ட் 9 அன்று வெளியானது. மனிதக் குலத்தைப் பேராபத்து நெருங்கிவருவதை இந்த அறிக்கை மீண்டும் அழுத்திச் சொன்னது.

26ஆவது காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x