Published : 25 Dec 2021 11:39 AM
Last Updated : 25 Dec 2021 11:39 AM
சிறு வயதில், வார இதழில் வெளியாகும் ‘விந்தை உலகம்’ பகுதியில் பறக்கும் பாம்பு (Ornate Flying Snake - Chrysopelea ornate) குறித்துப் படித்திருந் தேன். அரிதாகக் காணப்படும் இவை அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன. மரங்களின் ஊடே பல மீட்டர் இடைவெளியை எளிதாகத் தாவிக் கடக்கக் கூடியவை என்பது போன்ற தகவல்கள் பிரமிப்பை உண்டாக்கின. ஆனால், எனக்கு எழுந்த சந்தேகங்களைக் கேட்டறியவோ, கூடுதலாகக் கற்றறியவோ அப்பொழுது வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ‘நம் நாட்டுப் பாம்புகள்’ புத்தகத்தைப் படித்தபொழுது குற்றாலத்தின் ‘பழத் தோட்டத்தில்’ (அரசு தோட்டக்கலைத் துறை) இப்பாம்பு காணப்படுவதை அறிய முடிந்தது.
ஆர்வம் தந்த பூங்கா
விரைவில் நண்பர்களோடு குற்றாலம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஐந்தருவி சென்றடைந் தோம். அருகில்தான் ‘பழத்தோட்டம்’ இருந்தது. நண்பர்கள் குளிக்கச் செல்ல, நானோ எப்படி யாவது பாம்பைப் பார்த்துவிட வேண்டும் என்கிற நம்பிக்கையுடன் அங்கே சென்றேன். ஆனால், தோட்டம் பூட்டியிருந்தது. அங்கிருந்த மரங்களில் பாம்பு ஏதும் தென்படுகிறதா எனப் பார்த்துக்கொண்டிருக்க, அங்கே வந்த ஒரு பெரியவர் என்ன தேடுகிறாய் எனக் கேட்டார். என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “பேருந்து நிலையத்திற்கு மேல்புறம் பாம்பு பூங்கா இருக்கு, அங்கே போனா பறக்குற பாம்பு என்ன, எல்லா விலங்குகளையும் பார்க்கலாம்” என்றார்.
1976இல் குற்றாலம் நகரியத்தால் தொடங்கப்பட்டு மான், மிளா, முதலை, உடும்பு, ஆமை, பாம்பு எனப் பல உயிரினங்கள் அங்கே பராமரிக்கப்பட்டுவந்தன. பூங்கா உள்ளே நுழைந்தபொழுதே பறக்கும் பாம்பு பற்றிய தகவல் வைக்கப்பட்டிருந்தது. அது அளப்பரிய மகிழ்ச்சியைத் தந்தது. அங்கே சிமெண்ட் தொட்டிகளில் பல வகை நன்னீர் பாம்புகள், சாரைப் பாம்புகளைப் பார்த்தேன். அடுத்துப் பல அறைகளில் பல இனப் பாம்புகள், குறிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பிரதானமானது மலைப்பாம்புதான். நல்ல பருமனுடன் இருந்தது. பறக்கும் பாம்பைத் தேடிய எனக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. பொழுது சாய நண்பர்களோடு ஊர் திரும்பினேன்.
தொடர்ந்த ஏமாற்றம்
பின் எப்பொழுது குற்றாலம் சென்றாலும் பூங்கா செல்லாமல் வந்ததில்லை. ஆனால், பறக்கும் பாம்பு என்னவோ கனவாகவே இருந்தது. அது சார்ந்து படித்தேன். பகலாடியான இது, மரவாழ் பாம்பு. இவற்றின் அடிவயிற்றுச் செதில்கள் பக்கவாட்டில் ‘ப’ வடிவில் மடிந்து மரங்களைப் பற்றி நகர உதவுகின்றன. இவை பறப்பதில்லை. இடம்பெயர, மரத்தின் உயரமான கிளையிலிருந்து தாழ்வான கிளையை நோக்கித் தாவுகின்றன. இந்நேரத்தில் தன் விலா எலும்புகளை நன்கு விரித்தும் அடிவயிற்றைத் தட்டையாக்கி உடலை வளைத்தபடி காற்றில் மிதந்துவந்து பாதுகாப்பாகக் கிளையைப் பற்றிக்கொள்கிறது.
மேற்கு, கிழக்கு மலைத் தொடர்கள், பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்குப் பகுதிகள் எனப் பரந்துபட்ட பகுதியில் இது வாழ்கிறது. அடர்ந்த, உயர்ந்த மரங்கள், புதர்களில் காணப்படும் இவை மரப்பொந்துகள் உள்ளிட்ட மறைவான பகுதிகளில் முட்டைகளை இடுகின்றன. இதன் உணவாக மரவாழ் உயிரினங்களான பல்லிகள், ஓணான்கள், சிறு பறவைகள், தவளைகள் இருக்கின்றன. மேல்தாடையின் கடைவாயில் நஞ்சுப் பல்லைப் பெற்று மிதநஞ்சுடைய பாம்பாக இருக்கின்றன. இதன் நஞ்சால் சிற்றுயிர்களைச் செயலிழக்கச் செய்ய முடியும். மனிதர்களுக்குப் பாதிப்பில்லை.
அரிய வாய்ப்பு
பல வருடங்கள் கழிந்த நிலையில் எங்கே ஏமாந்து போனேனோ, அதே குற்றாலத்தில் பறக்கும் பாம்பைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. சட்டென்று பார்க்க கொம்பேறி மூர்க்கனை ஒத்திருந்தது. சராசரியாக இரண்டரையடி நீளம். கைவிரல் தடிமனில் நீண்ட உடலமைப்போடும், வால் ஒல்லியாகப் பாம்பின் மொத்த நீளத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தது. தெளிவான தலையில் முகவாய் தட்டையாகவும், கரிய நிறக் கண்பாவையுடன் பெரிதாகவும் காணப்பட்டது. உடலின் மேல்புறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற குறுக்குப் பட்டைகள் தலையிலிருந்து வால்வரை காணப்படுகின்றன. இரண்டு பட்டை களுக்கு அடுத்து ஒரு இளஞ்சிவப்பு நிறப் புள்ளி நடு முதுகில் காணப்பட்டது. உடலின் அடிப்பகுதியில் தலையின் கீழ் மஞ்சளாகவும் வால் நோக்கிச் செல்ல வெளிறிய பச்சை நிறமாகவும் இருந்தது. வால் பகுதியில் கரும் புள்ளிகள் இருந்தன.
‘கொலுபிரிடே’ குடும்பத்தில் ‘ஃக்ரைசோ பிலியே’ பேரினத்தில் மொத்தம் மூன்று இனங்கள் அறியப்பட்டுள்ளன. அதில் ‘ஆர்னேட்டா’வை இயல்பாகப் பார்க்க முடிகிறது. மீதமுள்ள இரண்டில் ‘பேரடைஸி’ அந்தமான் தீவுகளில் மட்டும் வாழ்கிறது. ‘டேப்ரோஃபானிகா’ அண்மையில் பரவலாக அறியப்பட்டாலும், மேலதிக ஆராய்ச்சி அவசியமாகிறது. காலப்போக்கில் பாம்பு பூங்கா மூடப்பட இப்பொழுது அங்கே சிறுவர் பூங்கா இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்று போனாலும் பாம்பு பூங்காவின் மீதச் சுவடுகளைப் பார்க்க முடிகிறது. அங்கே பாம்புகள் இல்லை, ஆனால் அந்த இடம் பல நினைவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT