Published : 18 Dec 2021 11:56 AM
Last Updated : 18 Dec 2021 11:56 AM
கட்டுரை, படங்கள்: ஜென்ஸி டேவிட்
ஊரடங்கிய ஓர் இரவில் முன்ன றைக்குச் சென்றபோது, சச்சர வென ஏதோ மெல்லிய சத்தம். முதலில் சிறிது பயமாக இருந்தாலும், அடர் காடுகளின் மர உச்சிகளில் கம்பளிப்பூச்சிகள் இரவில் இலைகளைச் சாப்பிடும் சத்தம் கேட்கும் என்று உயிரியல் நிபுணர் மெக் லோமென் எப்போதோ சொன்னது சம்பந்தமே இல்லாமல் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.
அப்போதுதான் தெர்மாகோல் அட்டை மேல் எறும்புகள் சாரி சாரியாக ஊர்ந்துகொண்டி ருப்பதைக் கவனித்தேன். எறும்புகள் ஊர்ந்ததால் வந்த சத்தம் அது! எறும்பு ஊர கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சத்தமும் எழும் என்பதை அன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன்.
மற்றொரு நாள் தரை யில் ஏதோ அசைவு தெரிய, கண நேரத்தில் சிறு பூரான் ஒன்று சுவரின் மூலையில் உள்ள மில்லிமீட்டர் இடைவெளியில் ஊர்ந்துசென்று மறைந்தது. அது அப்படி ஓடி ஒளிந்ததை இன்னொருவரும் கவனித்திருக்கிறார் என்பதை, சிறிது நேரத்தில் ஒரு பல்லி அந்தப் பூரானைப் பிடித்து விழுங்கியதைப் பார்த்தபோது தெரிந்தது.
யோசித்துப் பார்த்தபோது எங்கள் வீட்டில் மனிதர்கள் மட்டும் வசிக்கவில்லை, பலரும் சத்தமில்லாமல் குடியிருந்துவருவது புரிந்தது! குடியிருப்பது மட்டுமில்லை, சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களோடு போட்டியும் போடுவார்கள் என்றே தோன்றியது.
ஊர்ந்து செல்லும் உலகம்
சின்ன கறுப்பு எறும்பு – பிள்ளையார் எறும்பு என்றும் சிலர் சொல்வார்கள், கடிக்கும் சிவப்புச் சிற்றெறும்பு, கட்டெறும்பு மூன்றும் எங்கள் வீட்டில் குடியிருக்கின்றன. கட்டெறும்பு பத்துப் பத்தாகச் சாரிசாரியாக வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊர்ந்து கொண்டிருக்கும். உணவு தேடியா, வேறு எதற்குமா என்ன காரணம் எனத் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் பிள்ளையார் எறும்பு தனது குடியிருப்புக்கு ஆபத்து நேர்ந்தால் இடம்பெயர்வதைப் பார்த்திருக்கிறேன். இப்படி இடம்பெயரும்போது வெள்ளை நிறத்தில் அவை தூக்கிச் செல்வது முட்டையல்ல, எறும்பாக வெளிப்படுவதற்கு முந்தைய தோற்று வளரி.
அதைப் பார்த்தபோது என் வீட்டுக்குள் ஓர் உணவுச் சங்கிலி செயல்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சிந்திய உணவுத் துணுக்குகள் தவிர, பளபளப்பான ஈ, பூரான், கரப்பான் எனப் பலவும் அந்த எறும்புகளின் உணவுக் கிடங்குக்குள் சென்றன. சில வேளைகளில் அந்தப் பூச்சிகளுக்கு அரை உயிர் இருந்தபோதே, எறும்புகள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன.
இந்த மூன்று வகையிலும் சேராத ஒரு எறும்பு வகையைச் சமையலறையில் ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. மற்ற எறும்புகளைப் போல இல்லாமல் மிக மெதுவாக ஊர்கிறதே என்று பார்த்தால், தலைப்பக்கம் தேள் கொடுக்கு போல் நீண்டிருந்தது. இரைகொல்லி களிடமிருந்து தப்புவதற்குச் சுவர்க்கோழி (Cricket) போடும் ஒப்புப் போலித் தோற்றம் (mimicking) அது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.
எட்டுக்கால் வீரர்கள்
பொதுவாகச் சமைய லறையில் இருக்கும் பொருள் களைத் தேடி எறும்பு வரும், கரப்பான் வரும். எங்கள் வீட்டில் சமையல் மேடை மூலையில் பல நாள்களாக எட்டுக்கால் பூச்சிக்கும் (Cellar spider), சிவப்புச் சிலந்திக்கும் (Red house spider) வாழ்விட உரிமைப் போராட்டமே நடந்தது. கடைசியில் சிவப்பு சிலந்திதான் வென்றது. சிறுகரப்பானையும் (anded cockroach), சின்ன பூரானையும் வெகு சாதாரணமாக உணவாக்கிக்கொண்டிருந்த சிவப்புச் சிலந்திக்கு இதுவும் லகுவான விஷயம்தானே!
இவை தவிர பூசப்பட்ட சுவரிலிருந்த சிறு மேடு பள்ளங்களில் வலை பின்னும் சிலந்தி, குதிக்கும் சிலந்தி (Jumping spider) என்று சில வகை சிலந்திகள் என் வீட்டில் வசிக்கின்றன. ஒழுங்கற்ற கூடு கட்டுவதால் நம் வீடுகளில் ஒட்டடை உருவாகக் காரணமாக இருக்கும் எட்டுக்கால் பூச்சி, சில வேளைகளில் குதிக்கும் சிலந்தியைப் பிடித்து அதைச் சுற்றி இரண்டே கால்களினால் இறுக்கமாக வலை பின்னி ஒரு பொட்டலம்போல் தூக்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடிந்தது. அதேநேரம் குதிக்கும் சிலந்திக்கு ஜாம் சுவை பிடிக்கும் என்பது சிந்தியிருந்த ஜாமை அது சுவைத்துக் கொண்டிருந்தபோது தெரிந்தது. இப்படி இவையெல்லாம் வீட்டுக்குள்ளேயே குடியிருக்க, அவ்வப்போது வீட்டுக்கு விருந்தாளியாக வந்து குளவி, அந்திப்பூச்சி போன்றவை முட்டையிட்டுச் சென்றன.
பகிர்ந்துகொள்ளும் உயிரினங்கள்
சில இடத்துக்காக மட்டுமல்ல, உணவுக்கும் என்னோடு போட்டி போடும். சாப்பிடுவதற்காக மாம்பழத்தை வெட்டிக்கொண்டிருந்துவிட்டு இடையில் கைபேசி அழைப்பை எடுக்கப் போனால், திரும்பி வருவதற்குள் சிறுகரப்பானும் பல்லியும் மாம்பழத்தை ருசித்துக்கொண்டிருக்கும். இதனால், உணவுப் பொருள்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இவை தவிர புத்தக அலமாரியில் இருக்கும் வெள்ளிமீன்கள் (Silver fish), அவ்வப்போது முகம் காட்டும் கறையான்கள், இன்னும் பெயர் தெரியாத பல சிறு பூச்சிகள் என்று என் வீடே ஒரு நுண் உலகமாக இருக்கிறது. என்னைச் சட்டை செய்யாமல் என்னோடு குடியிருக்கும் இந்த உயிரினங்கள், பூச்சிகள் தங்கள் உணவுச் சங்கிலி சார்ந்த வேலையைச் செவ்வனே தொடர்கின்றன. கவனித்துப் பாருங்கள் உங்கள் வீட்டிலும் வாடகை கொடுக்காமல் பல சின்னஞ்சிறு உயிரினங்கள், உங்களைத் தொந்தரவு செய்யாமல் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்!
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்,
தொடர்புக்கு: jencysamuel@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT