Last Updated : 05 Mar, 2016 10:53 AM

 

Published : 05 Mar 2016 10:53 AM
Last Updated : 05 Mar 2016 10:53 AM

மதுரை மரங்களைத் தேடும் பயணம்

அந்தக் காலத்தில் கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தன. அந்த மரங்களைப் பற்றி அந்தந்தப் பகுதியினருக்குத் தெரிந்திருந்தது, அத்துடன் அவர்களை அக்கறையாக அவற்றைப் பாதுகாத்துப் பராமரித்தார்கள். இன்றைக்கு நம்மூர் மரங்களைப் பற்றிகூடப் பலருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில் மதுரையைச் சுற்றியுள்ள மரங்களைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காக மதுரை கிரீன் அமைப்பு சார்பில் மாதந்தோறும் 'மரங்களை அறியும் நடைபயணம்' மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்வத் தூண்டுதல்

“சாலையில் செல்லும் வெவ்வேறுபட்ட கார்களின் பெயர்களைக்கூடச் சரியாகக் கூறும் நம்மில் பலருக்கு, நம் அருகிலேயே ஆண்டுக்கணக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் மரங்களின் பயன்பாடு மட்டுமில்லாமல், பெயர்கள்கூடத் தெரிவதில்லை. அதனால்தான் மரங்களின் பெயர், அவற்றின் தாயகம், அந்த மரங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்கிறோம். இப்படிப் பல்வேறு இடங்களில் உள்ள வித்தியாசமான மரங்களை ஒருவர் பார்க்கும்போது, நாமும் ஏன் மரங்களை வளர்க்கக் கூடாது என்ற ஆர்வம் ஏற்படும்.

மதுரை அழகர்கோயிலில் உள்ள பழமுதிர் சோலையில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணத்தை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மரங்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். கல்லூரிகள், மருத்துவமனை, நீதிமன்றம், 10 கோயில் காடுகள் என இதுவரை 44 இடங்களுக்குச் சென்று வந்துவிட்டோம். இந்தப் பயணங்களில் இதுவரை சுமார் 2,500 பேர் கலந்துகொண்டுள்ளனர்” என்கிறார் மதுரை கிரீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம்.

44 பயணங்கள்

ஒவ்வொரு மாதமும் மதுரை மாவட்ட வன அலுவலகம் முன் மதுரை கிரீன் ஆர்வலர்கள் கூடுகின்றனர். அங்கிருந்து மரங்கள் நிறைந்துள்ள ஏதாவது ஒரு பகுதிக்குச் செல்கின்றனர். இந்தப் பயணம் 'மரங்களை அறியும் நடைபயணம்' எனப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மருத்துவக் கல்லூரி, பல்வேறு கோயில் காடுகளுக்கு இந்தக் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் அங்குள்ள மரங்களின் பட்டியல் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஒவ்வொரு மரத்தின் பெயர்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் விளக்கமளிக்கிறார். நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் பேராசிரியர் கூறுவதை ஆர்வமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

பாதுகாப்பார்கள்

“இப்போது பாதுகாக்கப்பட்ட காடுகளில்தான் பெரிய அளவிலான மரங்கள் உள்ளன. கோயில் காடுகளிலும் சில பெரிய மரங்கள் உள்ளன. மரங்களைப் பற்றி அறியச் செல்லும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று, அங்குள்ள மரங்களைப் பற்றி முதல் நாளே தெரிந்துகொள்வேன். அடுத்த நாள் நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு மரங்களைப் பற்றி விளக்கத்தைத் தருகிறோம். தொடர்ச்சியாக வருபவர்களுக்குக் குறைந்தது 25 மரங்களைப் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரிந்துவிடும். ஒரு மரத்தின் முக்கியத்துவம் புரிந்துவிட்டால், எங்காவது மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போது எதிர்த்துக் கேட்கத் தயாராகிவிடுவார்கள்” என்கிறார் இந்தப் பயணங்களில் வழிகாட்டும் பேராசிரியர் ஸ்டீபன்.

சிதம்பரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x