Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM
நண்பர் செயப்பிரகாசத்தின் அழைப்பை ஏற்று அன்னூர் மேட்டுப்பாளையம் சாலை வழியாகக் கடந்த மாதம் சென்று கொண்டிருந்தேன். அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பறவை ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டேன். அது பனங்காடைபோல் தோற்றமளித்தாலும் இருகண்ணோக்கி மூலம் உற்றுநோக்கியபோது ஐரோப்பியப் பனங்காடை European Roller (Coracias garrulus) எனத் தெரியவந்தது.
அந்த ஐரோப்பியப் பனங்காடை சற்று உயரமான வேப்ப மரம், செடிகளின் மீது அமர்ந்து நோட்டமிட்டபடி நீண்ட நேரம் காத்திருந்தது. திடீரென பறந்து நிலக்கடலை செடியின் மேல் பறக்கும் வண்டினை லாவகமாகத் தன் அலகால் பற்றியெடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரக்கிளை மேல் அமர்ந்தது. பிறகு உணவைத் தேடியவண்ணம் இருந்தது. வண்ணத்துப்பூச்சிகள் பல அருகில் பறந்தாலும் அவற்றைப் பிடிக்கவில்லை. பெரும்பாலும் வண்டுகளைத்தான் பிடித்தது. வெட்டுக்கிளி, பூச்சிகள் போன்றவற்றையும் உண்டது. சில படங்கள் எடுத்த நிலையில், அப்பறவை பறந்து சென்றுவிட்டது.
இது ஓர் அரிய வலசைப் பறவை. இவை பெரும்பாலும் தமிழகத்துக்கு வலசை வருவதில்லை. நெடுந்தூர வலசை செல்லும்பொழுது இளைப்பாறவோ வழிதவறியோ இங்கே வந்திருக்கலாம். ஆனால், சூலூர் அருகே கடந்த ஆண்டு இந்த வகைப் பறவையைப் பார்த்ததாக நண்பர் கூறுவதை வைத்துப்பார்த்தால், இது அப்பறவையின் வலசைப் பாதை என்றே தோன்றுகிறது. சென்னை அருகே பழவேற்காட்டுக்கு இப்பறவை அண்மையில் வந்ததும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது பிற பறவைகளைப் போன்று குளிர்கால வலசைப் பறவை அல்ல. மத்திய ஆசியாவிலிருந்து அரபிக்கடல் வழியாக ஆப்பிரிக்காவுக்கு இந்தியா வழியாகச் செல்கிறது எனக் கருதலாம். ஐரோப்பியப் பனங்காடை ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வடமேற்கு / துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான், மத்திய ஆசியா, ஐரோப்பாவிலிருந்து வலசை செல்கிறது.
நீல வண்ண மேனி
இந்தியாவில் காணப்படும் பனங்காடையை விட ஐரோப்பியப் பனங்காடை உருவில் சற்று சிறியது. அதன் பின்புறம் ஆரஞ்சு பழுப்பு நிறத்தில் உள்ளது. உடலின் மீதமுள்ள பகுதிகள் வெளிர் நீலம் முதல் கருநீல இறகுகளுடன் மாறுபட்டுக் காணப்படும். பனங்காடைக்குத் தலை வரை பழுப்பு நிறத்திலிருக்கும். ஆனால், ஐரோப்பியப் பனங்காடைக்குத் தலை வரை நீல வண்ணந்தான் இருந்தது.
வெட்டுக்கிளிகள், வண்டுகள், அந்திப்பூச்சிகள், பூரான், மரவட்டை, சில்வண்டு, சிறிய பல்லிகள், சிறிய கொறிப்பன, தவளைகள் போன்றவை இதன் முக்கிய உணவு. பெரும்பாலும் கத்துவதில்லை. கத்தினால் காகத்தின் ஒலியைப் போன்றுள்ளது. தரையிலிருந்து 16–33 அடிக்கு மேல் மரப் பொந்துகளில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
இவற்றின் வலசைப் பாதை நவீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக அறிய முடிந்துள்ளது. சில ஐரோப்பியப் பனங்காடைகள் இந்தியா வழியாக ஆப்பிரிக்காவுக்கு வலசை சென்றுள்ளன. அரபிக்கடலின் மீது செல்லும்பொழுது விமானத்தின் மீது இவை மோதியதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் சஹாராவின் தெற்கே இரண்டு தனித்துவமான பகுதிகளில் செனகல் கிழக்கிலிருந்து கேமரூன் - எத்தியோப்பியாவிலிருந்து மேற்கில் (டெகுவா டெம்பியன் மலைப்பகுதிகளில்) காங்கோ, தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தில் வலசை வருவதாக அறியமுடிகிறது.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: arunthavaselvan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT