Published : 06 Nov 2021 03:22 AM
Last Updated : 06 Nov 2021 03:22 AM
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றதுT23 என்கிற புலி. சில மனிதர்களையும் கால்நடைகளையும் கொன்றதால் ஆட்கொல்லியாகிவிட்டதாகக் கருதப்படும் இப்புலியைப் பிடிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. 21 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இப்புலி உயிருடன் வனத்துறையால் பிடிக்கப்பட்டது.
புலி ஏன் ஆட்கொல்லியாகிறது?
புலி பாதுகாப்பு செயல்திட்டத்தின் முதல் இயக்குநரும் ‘இந்தியாவின் புலி மனிதன்’ என்று அழைக்கப்படுபவருமான கைலாஷ் சான்கலா, புலி ஆட்கொல்லியாக மாறுவதற் கான காரணங்களைக் கூறியுள்ளார். அதே சமயம் பிரபல வேட்டைக்காரராக இருந்து பாதுகாவலராக மாறிய ஜிம் கார்பெட் ஆட்கொல்லிப் புலிகளைப் பற்றிக் கூறிய சில தகவல்களை மறுக்கின்றார். ஒரு புலி ஆட்கொல்லியாக மாறுவதற்கு ஒரு காரணம் முதுமை. ஆனால், அனைத்துப் புலிகளும் முதுமையடையும்போது ஆட்கொல்லியாக மாறுவதில்லை. பற்கள் உடைந்தோ காயமடைந்தோ இருக்கும் புலியும் ஆட்கொல்லியாகிவிடும் எனப்படுகிறது. ஆனால், இது சாத்தியமற்றது. மேலும், ஏன் ஒரு புலி மனிதனைத் தேடி, நீண்ட தொலைவு பயணித்துவர வேண்டும்? புலி, ஒரு மனித வேட்டைக்கும் மற்றொரு மனித வேட்டைக்கும் இடையில் எதை உண்டு உயிர் வாழ்கிறது என்கிற கேள்வியும் எழுகிறது. இடைப்பட்ட நாட்களில் வேறு இரையை வேட்டையாடி உண்ண முடிகிறபட்சத்தில், மனிதர்களைத் தேடிப் பல அபாயங்களையும் தொலைவையும் கடந்து வர வேண்டிய அவசியம் என்ன?
ஒவ்வொரு புலியும் தனக்கென்று ஒரு வாழிடத்தைத் தேர்வுசெய்து, மற்ற புலிகளிட மிருந்து அதைக் காக்கும். வயது வந்த ஆண் புலிக்குச் சராசரியாக 10 - 15 சதுர கிலோ மீட்டர் (இரை அடர்த்தியைப் பொறுத்து) தேவைப்படும். இனச்சேர்க்கை காலத்தில் மட்டுமே, இந்த எல்லைக்குள் பெண் புலிகளை ஆண் புலிகள் அனுமதிக்கும். ஒரு புலிக்குட்டி 11 மாதங்களுக்குப் பிறகு தன் தாயைப் பிரிந்து புதிய நிலப்பரப்பைத் தேடிச் செல்கிறது. இது சில நேரம் மற்ற புலிகளுடன் மோதலில் முடிகிறது. இந்த மோதலில் வயதான புலி காயமடைந்து இறக்க நேரிடலாம் அல்லது வேறு பகுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இம்மாதிரி வெளியேற்றப்படும் புலி காட்டைவிட்டோ அல்லது காட்டின் எல்லைக்கோ செல்லும். இப்படிக் காயமடைந்த, வயதான புலியால் அதன் இரையான மானையோ காட்டுப் பன்றியையோ வேட்டையாட இயலாமல் போகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை இலகுவாகக் கொன்று உண்கிறது. இப்படி ஆடு மாடுகளைத் தேடி கிராம எல்லைக்கு வரும்போது மனிதனை எதிர்கொள்ளவும் சாத்தியம் ஏற்படுகிறது.
செய்தியாகிவிட்ட T23
இந்த வகையில் வெளியேறியதுதான் T23 புலி. இந்த ஆண் புலி, மனிதர் வாழிடங்களை நெருங்கிக் கால்நடைகளைக் கொல்ல ஆரம்பித்து, பிறகு மனிதர்களையும் தாக்கிக் கொன்றது. 20 நாட்களில் நான்கு மனித உயிர்களும், பல கால்நடைகளும் பலியாகின. புலி அழிந்துவரும் இனமாக இருந்தாலும், அது மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்த பிறகு அதைக் காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் பலியானவர்களின் குடும்பத்தினருக்கோ கால்நடைகளை இழந்தவருக்கோ வரப்போவ தில்லை. இந்தப் புலி உலவியதாகக் கூறப்படும் மசினகுடி, கூடலூர், சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஊடகங்கள் அச்செய்தியைப் பெரிதாக்கின, வனத்துறை உடனடியாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்தப் புலியோ யார் கண்ணிலும் படாமல் தப்பித்துக்கொண்டே இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாட்டைக் கொன்று சென்றது. அந்தப் பிராந்தியம் அதற்கு நன்கு பரிச்சயமானதாக இருப்பது, அதற்குச் சாதகமானது.
தர்மசங்கட நிலை
இந்தப் புலியைக் கொல்வதா உயிருடன் பிடிப்பதா என்கிற கேள்வி முக்கியமானது.
1. இந்தப் புலியைச் சுட்டுக் கொல்வதால் அப்பகுதிவாழ் மக்கள் அமைதியடை வார்கள். ஆனால், அருகிவரும் ஒரு விலங்கு கொல்லப்படும். இது ஒரு தவறான முன்னுதாரணமாவதற்கான சாத்தியமும் அதிகம். ஆட்கொல்லியாகக் கருதப்பட்டவை பல காலமாக வேட்டையாடப்பட்டன. இவற்றை உயிருடன் பிடித்து வேறொரு காட்டுப் பகுதியில் விடுவிப்பதும் கடினம்.
2. அப்படி வேறொரு பகுதியில் விடுவித் தால், அது அப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களையோ கால்நடைகளையோ கொல்லக் கூடும். அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்துவரும் வேறொரு புலியினால் அது தாக்கப்படலாம்.
3. இந்தப் புலியை விலங்குக் காட்சியகத்தில் காட்சிப் பொருளாக ஆக்குவதையும் சில விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். அரசனைப்போல் சுதந்திரமாக வாழ்ந்துவந்த ஒரு விலங்கைச் சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்து, மனிதர்களைச் சார்ந்து வாழவைப்பது சோகமானது என்பது அவர்கள் கருத்து.
உயிருடன் பிடிக்க முடிவு
இந்தப் புலியை உயிருடன் பிடிக்க வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத்துறையும் அதே முடிவிலிருந்ததால், மயக்கமருந்து செலுத்தி புலியைப் பிடிக்க வன அதிகாரிகள், உயிரியலாளர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுக்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மாவட்ட வன அலுவலர், முதன்மை வனவிலங்கு வார்டன், கள இயக்குநர் ஆகியோர் களத்தில் நடவடிக்கைகளைக் கவனித்துவந்தனர். ஆயினும், புலி தென்படாமல் இருந்தது. இது சர்ச்சையை உருவாக்கியது.
ஒரு விலங்கு சில மீட்டர் தொலைவிலிருந் தாலும், அதை மயக்கமருந்து செலுத்திப் பிடிப்பது ஆபத்தானது. ஏனெனில், மயக்க மருந்து செலுத்திய பிறகு அது மயக்கம் அடைய சில நிமிடங்கள் எடுக்கும். இந்த நேரத்தில் கோபத்திலும் பதற்றத்திலும் அருகிலுள்ள வர்களைப் புலி தாக்கிக் காயப்படுத்தலாம் அல்லது கொல்லலாம். புலிக்கு மயக்க மருந்து செலுத்துவதற்கு அதன் அருகில் சென்றாக வேண்டும். அப்போதும்கூடப் புலியின் அடர்த்தியான ரோமத்தைத் தாண்டி மயக்க ஊசி உடலில் தைப்பது கடினம்.
வனங்களுக்குச் சென்று பரிச்சயமானவர் களுக்கும் வன விலங்கு நடத்தை பற்றி அறிந்தவர்களுக்கும் வனத்தில் புலியையோ வேறொரு விலங்கையோ மனிதர்கள் காண்பதற்கு முன், அந்த விலங்கு மனிதனைக் கண்டுவிடும் என்பது தெரியும். அவை உருமறைந்து செயல்படுவதில் தேர்ச்சியுடையவை. யானை போன்ற பெரிய விலங்கே மரங்களுக்கு மத்தியில் அசையாமல் நின்றால், கண்டறிவது கடினம்.
பிரச்சினைகளும் தீர்வுகளும்
ஒரு புலி ஆட்கொல்லி என்று நிரூபிக்கப் பட்டால், அருகில் வசிக்கும் கிராம மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுகிறது. வேலைக்குச் செல்ல முடியாமல் பயத்துடனும் வருத்தத்துடனும் மக்கள் நாட்களைக் கழிப்பர். ஆனால் நகரத்தில் உள்ளவர்களும் ஊடகங் களும் இந்த யதார்த்தத்தை அறியாமல், தங்கள் உணர்வுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குகிறார்கள். வனவுயிர் பாதுகாப்பு முயற்சிகளில் பழங்குடியினர், கிராம மக்கள் பங்கேற்பை உறுதிசெய்வது மிகவும் அவசியம். அவர்களின் பங்கேற்பு இல்லாமல் வனத்தையும் வனவுயிர்களையும் பாதுகாக்க இயலாது.
தேடும் வேட்டையில் வனத்துறையினர் இப்புலியைப் பல முறை கண்டும், அதை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதால் சுடுவதைத் தவிர்த்து வந்தனர். இதே பகுதியில் சில மாதங்களுக்கு ஒரு பெண்ணை புலி கொன்றது. (அது T23ஆக இருப்பதற்கான சாத்தியமே அதிகம்). பாதிக்கப்பட்ட மக்கள் இறந்த மாட்டின் உடலில் நஞ்சைத் தடவி வைத்ததில், அப்பகுதியில் வாழ்ந்துவந்த மற்றொரு பெண் புலி, அதை உண்டு இறந்தது. இதனால், அதன் இரண்டு குட்டிகளும் ஆதரவற்றுப் போயின. இது போன்ற நிகழ்வுகள் வனவுயிர் பாதுகாப்புக்கு எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்.
ஒரு புலி தன் கட்டுப்பாட்டில் ஒரு பகுதியை வைத்திருப்பதற்கு முக்கியக் காரணம் அப்பகுதியில் உள்ள இரையின் பரவல், அடர்த்தி. தொடர்ச்சியான வனப்பகுதிகளை மனிதர்கள் துண்டாக்கிவிட்டார்கள். இதனால், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ வேண்டிய கட்டாயத்துக்குப் புலிகளைத் தள்ளியிருக்கிறோம். அருகில் உள்ள பந்திப்பூர் வயநாடு வனங்களுக்குச் செல்வதை T23 தவிர்த்திருக்கிறது. அங்கே இருக்கும் ஆண் புலிகளுடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கவே மசினகுடி, கூடலூர் போன்ற மக்கள் வாழும் பகுதிகளுக்கு அது வந்தி ருக்கிறது. வனங்கள் துண்டாக்கப்பட்டதால் ஏற்படும் நிலை இது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தொடர்ச்சியாக இருந்தால் புலிகளுக்குப் பரந்த வாழிடம் கிடைக்கும்.
மேலும் T23 தன் வாழிடத்தை விட்டு வெளியேறியதற்கான காரணம் அங்கே ஒரு இளம் புலி குடியேறியதால் இருக்கலாம். இது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான அறிகுறி. ஆகையால், புலிகள் பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் வாழ்விடங் களை, முதுமலை போன்ற சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு தொடர்ச்சியான வனங்களை உருவாக்குவது அவசியம். இது மனித - விலங்கு எதிர்கொள்ளலைத் தவிர்க்கும். இப்படிப் பல்வேறு வகைகளில் T23 நமக்குப் படிப்பினைகளைத் தந்திருக்கின்றது.
2018இல் இரண்டு குட்டிகளைப் பராமரித்துவந்த அவ்னி (T1) என்னும் பெண் புலி மகாராஷ்டிரத்தில் சுட்டுக் கொல்லப் பட்டதுபோல், T23 கொல்லப்படாமல் உயிருடன் பிடிக்கப்பட்டது நல்ல விஷயம். ஆயினும், அதைக் கூண்டில் அடைக்காமல் திறந்தவெளியில் இயற்கை வாழிடத்தை ஒத்த மரங்கள், தாவரங்கள், குளம் அடங்கிய பகுதியில் பாதுகாத்தால் மிச்சமிருக்கும் நாட்களை அது நிம்மதியாகக் கழிக்கும்.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT