Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

பறவை பாடல்களால் நிறையும் உலகம்

ச.திவ்யப்ரியா

பறவைகளின் குரலொலி ஓர் இனத்திட மிருந்து மற்றொன்றுக்கு எவ்வாறு வேறுபடுகிறது என அறிவதற்காகவே பறவைகளை நோக்கத் தொடங்கினேன். கோவை ஆனைக்கட்டி மலைகளில் மூன்று விதமான சின்னான் (bulbuls) பறவைகளின் குரலொலி தனித்துவத்தைக் கேட்க ஆரம்பித்தபோது, பறவை நோக்குதல் சுவாரசியமாக மாறியது. பறவை இனங்களை அடையாளம் காண பறவை நோக்குதல் சிறந்த வழியாஅல்லது தனித்துவமான குரலொலிகளை அறிவதன் மூலமா அல்லது இரண்டுமேவா?

பறவைகள் மீது மனிதன் தன் கவனத்தைச் செலுத்தியதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வண்ணமயமான இறக்கைகளும், இனிமையான குரலோசையும்தாம். பறவை நோக்குதலில் சில வகைப் பறவைகளைப் பார்ப்பது கடினம். அவ்வேளையில் அவற்றின் குரலொலியை வைத்தே, அவற்றை அடையாளம் காண்போம். இரவாடிப் பறவைகளைப்(Nocturnal birds) பார்ப்பதைவிட, அவற்றின் குரலையே அதிகம் கேட்க முடியும். பறவை நோக்குதலில் மிகுந்த சவாலானது குரலொலிகளை வைத்து பறவைகளைக் கண்டறிவதே. எல்லாப் பறவை யினங்களும் குரலெழுப்பக் குறிப்பிட்ட சில காரணங்களே இருந்தாலும், குரலொலிகளின் அளவுகோலான அலைவரிசையும் (frequency), ஒலி வன்மையும் (loudness), இனத்துக்கு இனம் மாறுபடும். கைதேர்ந்த பறவை நோக்கும் வல்லுநர்கள், பறவை ஆர்வலர்கள் இனங்களைச் சுலபமாக வேறுபடுத்தி அறிவார்கள். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இது சவாலான காரியம்.

முதல் குரலொலிகள்

நான் பறவைக் குரலொலி ஆராய்ச்சியை ஆரம்பித்த நாட்களில் கோவை ஆனைக்கட்டி மலைகளில் 'சின்னான்' (Bulbuls) பறவைகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்துகொண்டிருந்த மாணவரோடு இணைந்து பறவை நோக்க ஆரம்பித்தேன். சின்னான் பறவைகளின் குரலொலி எனக்குப் பரிச்சயமான முதல் குரலொலி. அதிலும் வெண்புருவ சின்னான் (White-browed Bulbul) எழுப்பும் ஒலி தனித்தன்மை கொண்டது. சத்தமாகவும் எடுப்பாகவும் இருக்கும். ஒரு காலிப் பாத்திரத்தில் சிறு கற்கள் சிலவற்றைப் போட்டுக் குலுக்கினால் எவ்வாறு சத்தம் எழுமோ, அப்படித்தான் அவற்றின் குரலொலி இருக்கும். அந்தப் பறவைகளின் குரலொலிகளைக் கண்டறிவது எனக்குச் சுலபமாக இருந்தது. மற்ற இரண்டு இனங்களான சின்னான் (Red-vented Bulbul), செம்மீசை சின்னான்களின் (Red-whiskered Bulbul) குரலொலிகளைப் பயில சில நாட்கள் தேவைப்பட்டன. சிறிது சிறிதாகக் கருஞ்சிட்டு (Indian Robin), கருப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bushchat), தேன்சிட்டுகள் (sunbirds), கதிர்க்குருவிகள் (prinias) உள்ளிட்ட பல பறவைகள் எழுப்பும் ஒலிகள் பரிச்சயமாயின. ஆரம்ப நாட்களில் தன் புதுப்புது குரலொலிகளின் மூலம் என் கவனத்தை ஈர்த்த பறவை மாம்பழச்சிட்டு (Common Iora). பின்னாட்களில் இப்பறவை குறித்தே என் முனைவர் பட்ட ஆராய்ச்சி அமைந்தது.

பறவைகளின் பாடல்கள்

ஒவ்வொரு மொழியிலும் எழுத்துக்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் இருப்பதுபோல, பறவைகளின் மொழிகளிலும் எழுத்துக்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் இருப்பதைக் காணலாம். உதாரணமாக, மாம்பழச்சிட்டின் பாட்டின் (குரலொலியின்) கால அளவை குறு, சிறு, நீண்ட அளவுகளில் வகைப்படுத்தலாம். குறுகிய ஒலி அளவை 'elements' என்றும், சிறு ஒலி அளவை - இரண்டு, மூன்று எழுத்துக்களால் ஆன சொற்களைப் போன்றவற்றை 'syllable' எனவும், பல syllable-களின் இணைவு,பல சொற்கள் சேர்வது 'song' அல்லது 'phrase' என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்தச் சிறு, குறு சொற்றொடர்களின் வரிசை மாற்றங்கள் இனிமையான பாடல்களாகின்றன. இந்தப் பறவையின் பாடலை அல்லது குரலொலியைப் பதிவுசெய்து, மென்பொருட்களின் உதவியுடன் அந்தக் குரலின் ஒலிவரியைக்(sonogram) கணினித் திரையில் கண்டால் இது தெளிவாகப் புரியும்.

காகம் கரையும்போது சுலபமாக அந்த இனத்தின் இருப்பை அறிந்துகொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும், ஒலி வன்மையும் வித்தியாசமானவை. காகத்தின் கரைதலுக்கு நம் காதுகள் பழக்கப்பட்டு இருப்பதால், சுலபமாக அவற்றை அறிய முடிகிறது. இவற்றில் ஏற்படும் நுண்ணிய வித்தியாசங்களை அறிய சில குரலொலி மென்பொருட்கள் உள்ளன. மனிதனின் இதயத் துடிப்பை இசிஜி துணையுடன் இருபரிமாண வடிவில் பார்க்க முடிவதுபோல், பறவைகளின் குரலொலியையும் காண முடியும். அதன் மூலம் கால அளவு, ஒலித்தன்மை, அலைவரிசை போன்றவற்றைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.

சரி, பறவை நோக்குதலின்போது இவையெல் லாம் பயன்படுமா? பறவை இனங்களைக் குரலொலி மூலம் கண்டறிய நம் காதுகளைப் பழக்கப்படுத்த வேண்டும். எப்படிக் காகத்தின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே இனம் கண்டுகொள்கிறோமோ, அப்படியே மற்ற பறவைகளின் குரலையும் இனங்காணப் பழக வேண்டும். நேரடியாக ஓரிரு நாட்களிலேயே கற்றுக்கொள்ளலாம். அல்லது பறவைகளின் குரலொலிகளை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

காடுகளில் பறவை நோக்குதலின்போது பறவைகள் சுலபமாகக் கண்ணில் படாது. உயர்ந்த மரங்களில், அடர்ந்த கிளைகளில், வெகுதொலைவில் அல்லது வெகு உயரத்திலிருந்து குரலெழுப்பும். இந்த நிலையில் பறவை இனங்களைக் கண்டறிய குரலொலிகளே உதவும். எனவேதான், பறவை கணக் கெடுத்தலின்போது, பறவை குரலொலிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பறவைகளின் குரலொலிகள் பல நேரங்களில் குழப்பம் விளைவிப்பதாக இருக்கலாம். உதாரணமாக, மற்ற பறவைகளின் குரலொலி களைப்போல் ஒப்புப்போலி (mimicking) செய்யக்கூடிய பறவைகளும் உண்டு. ஒரு முறை பறவை கணக்கெடுப்புக்காக, கேரளத்திலுள்ள ஆரளம் காட்டுயிர் காப்பிடத்திற்குச் சென்றி ருந்தோம். காலையில் பார்க்கத் தவறிய தீக்காக்கையின் (Malabar Trogon) ஒலியைக் கேட்டு, வெளியே சென்று பார்க்கையில், அங்கே ஒரு துடுப்பு வால் கரிச்சான் (Greater Racket-tailed Drongo) தீக்காக்கைபோல் ஒலிகளை எழுப்பி எங்களை ஆச்சரியப்படுத்தியது.

துடுப்பு வால் கரிச்சான், மலை நாகணவாய் (Southern Hill Myna), கரிச்சான் (Black Drongo), வெண் வயிற்றுக் கரிச்சான் (White-bellied Drongo), பச்சை சிட்டு (Golden-fronted Leafbird) போன்றவை சிறப்பாக ஒப்புப்போலிக் குரலொலி கொடுக்கக்கூடிய பறவைகள். வறண்ட நிலப்பகுதிகளில் வாழும் சைக்ஸ் வானம்பாடி (Sykes’s Lark) எனும் பறவை, 34 மாறுபட்ட பறவையினங்களைப்போல் ஒப்புப்போலி செய்ய வல்லது என்று 2017-ல் வெளிவந்த ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. பலமுறை இதுபோன்ற ஒப்புப்போலிக் குரலொலிகளைக் கேட்டுப் பழகினாலன்றி, அசல் பறவைகளைக் கண்டறிவது கடினம். பலமுறை கேட்டுப் பழகினால், அசலுக்கும் போலிக்கும் இடையே மிகச்சிறிய வித்தியாசம் இருப்பதைக் கண்டறிய லாம். பொதுவாகக் கரிச்சான்களும் (drongos) பச்சை சிட்டுகளும் (leafbirds), பிற பறவைகளைப் போல் ஒப்புப்போலி ஒலிகளை எழுப்பக்கூடியவை. தேர்ந்த பறவை நோக்குபவர்கள் அசலுக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பெரும்பாலும் கண்டறிந்துவிடுவார்கள். எனினும் அவர்களும் ஏமாறும் நேரங்களும் உண்டு!

பறவைக் குரலொலிகளை https://www.xeno-canto.org, http://avocet.zoology.msu.edu, https://www.macaulaylibrary.org/ போன்ற இணைய தளங்களிலிருந்து கேட்கலாம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குரலொலிகளைப் பதிவுசெய்ய ஆராய்ச்சியாளர்களும், பறவை நோக்கும் வல்லுநர்களும், பிரத்தியேகமான பதிவு சாதனங்கள் மூலம் பதிவுசெய்கிறார்கள். கைபேசியில் Lexis Audio Editor, Rec Forge II போன்ற செயலிகளின் மூலமும் பதிவுசெய்யலாம். பறவைகளின் குரலொலிகளை ஒழுங்கமைக்கவும், ஒலியளவைப் பெருக்கவும், தொகுக்கவும், பின்னணி இரைச்சலை நீக்கவும் இந்தச் செயலிகளில் சாத்தியம் உண்டு. காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களைப் போல் குரலொலிகளை மட்டும் பதிவுசெய்யும் காட்டுயிர் குரலொலி நிபுணர்கள், மேற்சொன்ன இணையதளங்களில் குரலொலிகளைப் பதிவேற்றுகிறார்கள்.

இவற்றை உபயோகிக்கக் கட்டுப்பாடு தேவை. இனப்பெருக்கக் காலத்தில் பறவைகள் எழுப்பும் குரலொலிகளை, மற்ற காலங்களில் உபயோகிப்பது பறவைகளுக்கு இடையூறாக இருக்கும். பொறுப்புமிகுந்த பறவை நோக்கும் வல்லுநர்கள் இவற்றைத் தவிர்ப்பார்கள். ஆராய்ச்சிக்காக மட்டுமே பதிவுசெய்யப்பட்ட குரலொலிகளை விஞ்ஞானிகள் உபயோகிக்கிறார்கள்.

கட்டுரையாளர், பறவை குரலொலி ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: cdp08india@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x