Last Updated : 20 Sep, 2021 07:13 PM

 

Published : 20 Sep 2021 07:13 PM
Last Updated : 20 Sep 2021 07:13 PM

கடலைப் பாதுகாக்கப் பயணிக்கும் ஆமை மிதவை

உலகத் தூய்மை தினம் உலகெங்கும் கடந்த சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்பட்டது. உலகத் தூய்மை தினம் என்பது கடலில் மிதக்கும் குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகளின் பிரச்சினையை எதிர்த்து உலகளவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு செயல்திட்டமாகும்.

அந்த நாளை நினைவுகூரும் விதமாக, சென்னையிலிருக்கும் அமெரிக்கத் துணை தூதரகம், ’ட்ரீ பவுண்டேஷன்’, ’யுனைடெட் வே சென்னை’ ஆகியவற்றுடன் இணைந்து, நடமாடும் ஆமை மிதவையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கிவைத்தது. சென்னையிலிருக்கும் அமெரிக்கத் துணை தூதரான கேத்ரின் ஃப்ளாஸ்பார்ட், இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நடமாகும் ஆமை மிதவை, நீலாங்கரையில் உள்ள ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு அலுவலகத்திலிருந்து தொடங்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்து மாமல்லபுரம் வரை சென்றது. அதனுடன் ட்ரீ அறக்கட்டளையின் தன்னார்வலர்களும் மாணவர்களும் சாலைகளில் மிதிவண்டிகளில் பயணம் செய்தனர்.

“கடலுக்கும் அரணாக விளங்கும் பவளப்பாறை உள்ளிட்ட கடலின் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கடல் ஆமைகள் பராமரிக்கின்றன. மேலும், தேவையான ஊட்டச்சத்துக்களைக் கடலிலிருந்து கடற்கரைகளுக்கும் கடலோரக் குன்றுகளுக்கும் அவை கடத்துகின்றன. பத்து கோடி ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் கடல் ஆமையின் இந்தச் செயல்பாடுகளே கடல்களைப் பாதுகாத்து வருகின்றன. கடல் ஆமைகளைப் பாதுகாப்பதும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் பெருங்கடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்று ஃப்ளாஸ்பார்ட் கூறினார்.

"பருவநிலை மாற்றத்துக்கும் பெருங்கடல் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. சுருக்குமடி வலைகளின் பயன்பாடு, கடலில் மிதக்கும் நிராகரிக்கப்பட்ட வலைகள், கடலில் மிதக்கும் ஞெகிழி போன்றவை காலப்போக்கில் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம். சூழலை அணுகும் முறையில் ஏற்படும் மாற்றம், நாங்கள் பணிபுரியும் சமூகங்களின் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறும்" என்று ட்ரீ ஃபவுண்டேஷன் நிறுவனர் சுப்ரஜா தாரிணி கூறினார். அந்த நிறுவனத்தின் கடல் ஆமை பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், ஆண்டுதோறும் கடலோரத் தூய்மை உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர்.ஆமை மிதவை"கடலுடன் இணைவோம்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக்கொண்ட இந்த ஆமை மிதவை, கடல் பல்லுயிரியத்தைச் சித்தரிக்கும் ஒரு கண்காட்சியாகத் திகழ்கிறது. கடலின் அதிசயங்களையும் அச்சுறுத்தல்களையும் பற்றிய தகவல்களை விவரிக்கும் பதாகைகள், கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆகியவை இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக உள்ளன. சுருக்குமடி வலைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மாதிரிகள் இந்த மிதவையின் ஒரு பகுதியாக உள்ளன.

நவம்பர் 2021இல் இந்தப் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதுவரை, இந்த மிதவை பொதுமக்களின் பார்வைக்காக இயங்கும். அப்போது அது மீனவ கிராமங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலம், மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும். கடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x