Published : 04 Sep 2021 03:30 AM
Last Updated : 04 Sep 2021 03:30 AM
பழம்பெருமை மிக்க அறுபடாத ஒரு நெடிய மரபு கொண்ட தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான தாவரங்களில் ஒன்று பனைமரம். தமிழர்களின் இயற்கை அடையாளங் களுள் ஒன்றாகப் போற்றப்படும் பனைமரத்தைத் ‘தமிழர்களின் தாவரம்’ என்றே அழைக்கலாம்! ஏனென்றால், இது தமிழ்நாட்டின் மாநில மரமும்கூட.
பனை, புல்லினத்தைச் சேர்ந்த [Palmyra palm] ஒரு தாவரப் பேரினம்! பனையின் அறிவியல் பெயர் [Borassus flabellifer]. கற்பக விருட்சத்தின் அடியில் நின்று எதைக் கேட்டாலும்கிடைக்கும் என்பது நம்பிக்கை. பனைமரத்தின் பயன்பாடுகளை விளக்கும் வகையி லேயே அது கற்பகத் தரு என்று அழைக் கப்பட்டிருக்கிறது. வேர் முதல் உச்சிவரை பனையின் ஒவ்வொரு உறுப்பும் மனிதக் குலத்துக்குப் பயன்படும் பொருளே.
காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் எழுத பயன்படும் பொருளாகப் பனை ஓலைகளே பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளன. ஓலைகளில் எழுதும் முறை இல்லையெனில் இன்றைக்கு நம் தமிழ் இலக்கண, இலக்கியப் புதையல்கள் இருந்திருக் காது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. வீடு வீடாகச் சென்று, கெஞ்சிக் கூத்தாடி சேகரித்த பனை ஓலைச் சுவடிகளே கரையான் அரிப்புக்கும் நெருப் பின் நாவுகளுக்கும் இரையானவை போக எஞ்சிய இன்றைய தமிழ்ப் புதையல்கள்!
பனையின் இயல்புகள்
பனங்கொட்டைகளைச் சேகரித்துப் பதப்படுத்தி, ஊன்றி வளர்ப்பதில் தொடங்குகிறது ஒரு பனை மரத்தின் வாழ்வு. முதல் நான்கு மாதங்களில் கொட்டையில் உள்ள ‘தவண்’ என்கிற பகுதியை உணவாகக்கொண்டு பனை வளரத் தொடங்குகிறது. அடுத்து கிழங்கு முளைக்கத் தொடங்குகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு மேல் குருத்து போன்ற பனை ஓலைகள் தோன்றுகின்றன. இதைப் ‘பீலி’ என்கின்றனர். பீலிப்பருவப் பனை, வடலிக்கன்று என்றும் பனைக்குட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் வரை பனை உயரமாக வளர்கிறது. வடலிக் கன்று பருவத்தைக் கடந்த பனைக்கு, வடலிப்பனை என்று பெயர். பிறகு உட்பகுதியில் வலுவடையத் தொடங்கும். இதுதான் வைரம் பாய்தல். அதற்குப் பிறகுதான் பனை, வலுவான மரம் என்கிற தகுதியைப் பெறுகிறது. இப்படியாகச் சராசரியாக 90 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டது பனை. ஆயுள் முழுவதும் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கும் மரம் என்பதே பனையின் தனிச்சிறப்பு.
மனிதர்களைப் போன்றே பனையிலும் ஆண் பனை, பெண் பனை என்கிற பாகுபாடு உண்டு. அலகுப் பனை, கட்டுப்பனை போன்ற பெயர்களும் ஆண் பனைக்கு உண்டு. விடலிப் பருவத்தில் மட்டும் ஆண், பெண் பாகுபாடு கிடையாது.
பனை மரத்தின் தனித்துவமான சிறப்பாக அமைந்தது, அதன் பாளைகளிலிருந்து கிடைக்கும் இனிப்பும் புளிப்பும் கலந்த சாறு. இவை கள், பதநீர் எனப்படுகிறது. இரண்டுமே பனையிலிருந்து நேரடியாகக் கிடைப்பதில்லை. சில கருவிகளின் துணைகொண்டு பாளையை நசுக்கிப் பெறப்படுகிறது. பாளையிலிருந்து வடியும் இனிப்புச் சுவை மிகுந்த சாறு, கள் என்கிற பெயரில் மதுவாக மாறுவதைத் தடுத்து உருவாக்கப்படுவதே பதநீர். பனைமரக் கள் தமிழர்களின் பாரம்பரியமான மது. ‘தீம்பிழி’ என்னும் சொல்லால் சங்க இலக்கியங்கள் இந்த மதுவைக் குறிக்கின்றன.
புதிய பனைமரங்களை விளைவிக்கத் தேவையான பனங்கொட்டைகளுக்காகவும் பனங்கிழங்குகளை உருவாக்கவும் பனை நுங்கை வெட்டாமல் விட்டுவிடு வார்கள். அதன் வளர்ச்சி நிலையே பனம்பழமாக உருவாகிறது.
கம்பீரப் பனை
சில ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களைத் தாக்கி பெரும் தாவர அழிவை ஏற்படுத்திய கஜா புயலின்போது ஒரு காட்சியை எல்லோரும் வியந்து பார்த்தனர். அப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்த பல தென்னந்தோப்புகள் சாய்ந்திருந்தன. பெரிய பெரிய வலுவான மரங்கள் வீழ்ந்துகிடந்தன. ஆனால், புயலின் உக்கிரத் தாண்டவத்துக்கு அசைந்து கொடுக்காமல் கம்பீரமாக நின்றவை பனை மரங்கள் மட்டுமே!
கற்பக விருட்சம் என்னும் பெயருக் கேற்ப பனைமரத்தின் ஒவ்வொரு அங்கமும் பயன்படு பொருளாகவே உள்ளது. பனை தரும் உணவில் முக்கியமானது பதநீர். கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனை மிட்டாய், பனங்கள், பனங்கூழ் ஆகியவை பதநீரிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள். இவற்றில் சில மருந்தாகவும் பயன்படுகின்றன.
பனை மரங்களின் ஆணிவேர், சல்லி வேர் போன்றவை மண் அரிப்பைத் தடுக்கும் காவலர்களாகவும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் கருவியாகவும் விளங்குகின்றன. யானை போன்ற பெரிய விலங்குகள்கூட நுழைய முடியாத உயிர்வேலிகளாக, வனம் சார்ந்த நிலப்பரப்புகளில் ஒரு காலத்தில் பனைப்படை அணி இருந்திருக்கிறது.
பனை மரங்களின் பயன் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். அதற்கு இணையாக வேறொரு தாவர இனம் இல்லை. நெருப்பில் எரித்துப் போட்டாலும் விதைக்கும் அதிசய விதை பனை மட்டுமே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றில் இடம்பெற்று வானளாவிய கம்பீரத்துடன் தமிழர்களின் தாவரமாக வீற்றிருந்த பனை மரங்களின் இன்றைய இன அழிப்பு, கவலை அளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது.
வைரம் பாய்ந்த பனைகள் என்றழைக்கப்பட்ட முற்றிய பனை மரங்களே, முன்பு தச்சு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டன. இன்று செங்கல் சூளைக்கு அடுப்பெரிக்கும் விறகாகவும் கட்டிடம் கட்டும் பணி களுக்காகவும் சாயப்பட்டறையில் எரியூட்டவும் பனை மரங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றன. தனியார் இடங்கள், பொது இடங்கள் என்று எந்தப் பாகுபாடுமின்றி பலி ஆடுகளைப் போல், பனை மரங்கள் பூமியில் வெட்டுப்பட்டு விழும் காட்சி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அபாயம் நேரப்போவதன் அறிகுறி என்பதை இப்போதாவது மக்கள் உணர வேண்டும்.
பனை வகைகள்
கூந்தப்பனை, தாழிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, நிலப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, சனம்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பனை வகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில வகைகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
விழிப்போம், பாதுகாப்போம்!
ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில், சாலையோர புளிய மரங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மரங்களுக்கு எண்கள் இடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதுபோல், எஞ்சியிருக்கும் பனை மரங்களைக் கணக்கெடுத்து எண்கள் இட வேண்டும். பனை விதை நடுவதை இயக்கமாக மாற்றும் விழிப்புணர்வை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். பனைமரங்களைப் பொதுப்பணித் துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். பொது இடங்கள், தனியார் இடங்கள் என எங்கிருப்பினும், பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க பனை பாதுகாப்புக்கெனத் தனிச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
இந்தியாவிலிருந்த மொத்த பனை மரங்களின் தொகை 9 கோடியில் சுமார் 5.5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டிலிருந்ததாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் குறிப்பொன்று தெரிவிக்கிறது. அவற்றில் இன்று எஞ்சியிருப்பவை 2.5 கோடி மரங்கள் மட்டுமே. இந்த எண்ணிக்கையும் வேகமாகச் சரிந்துகொண்டே வருகிறது என அச்சம் தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும்.
பனை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும், பனை விதை நடும் பணியிலும், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பல சிறு அமைப்புகள் ஈடுபட்டிருப்பது நல்ல முன்னெடுப்பு! மணல் கொள்ளையால் பாதிக்கப்படும் நதிகளைப் போல், செங்கல் சூளையில் எரிக்கப்படும் விறகுக்காக அனுமதியின்றிக் கொள்ளையடிக்கப்படும் பனை மரங்கள் இயற்கையின் கொடை. நம் இனத்தின் பெருமைமிகு அடையாளம். அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்!
கட்டுரையாளர் எழுத்தாளர், இயக்குநர்.
தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT