Published : 07 Aug 2021 06:21 PM
Last Updated : 07 Aug 2021 06:21 PM
தென் கொரியாவைச் சேர்ந்த அறிவியல் தொழில்நுட்ப மாணவர்கள் ‘ஆர்மடில்லோ T’ எனும் காரை தயாரித்திருக்கிறார்கள். தேவைக்கேற்ப காரின் உயரத்தை அதிகரித்தோ குறைத்தோ வைக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறர்கள். ஸ்மார்ட் போன் மூலம் இயக்கக்கூடிய, 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய, இந்த கார் சுமார் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் சிறப்பாக, சிறிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்மடில்லோ என்னும் பெயருக்கான காரணம் என்ன? காண்டாமிருகம் போன்ற கடினமான மேற்தோலுடன் இருக்கும், தென் அமெரிக்காவின் அமேசான் காட்டில் வாழும் சிறிய உயிரினம் ஆர்மடில்லோ. ஆபத்தின்போது இது உடலை ஒரு பந்துபோல சுருக்கிக்கொள்ளும் இயல்புடையது.
இறுமலெலி
நமது வறண்ட நிலப்பரப்பில் வசிக்கும் அலுங்குகூட இப்படித்தான், தலையை உள்ளே இழுத்து உடலை சுருட்டிக்கொள்ளும் தன்மைகொண்டது. தனது உடல் பாகங்களை சுருக்கிகொண்டு பந்துபோல மாறிவிடக்கூடிய மற்றுமொரு விலங்கு முள்ளெலிகள். ஆசியாவில் இந்தியாவிலும், தென் சீனாவின் மிதவெப்பப் பகுதியில் உயரமான சில காடுகளில் முள்ளெலிகள் வசிக்கின்றன. ஹைனன் தீவில் முள்ளெலியின் புதைப்படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலும் முள்ளெலிகள் வாழ்கின்றன. வறண்ட பாலைவனம் முள்ளெலிகளுக்கு சிறந்த வாழிடம். சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளெலியின் மூதாதையர்கள் பூமியில் வாழ்ந்ததாக சமீபத்திய மூலக்கூறு ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. இதிலிருந்து முள்ளெலிகள் மிக பழைய, பரிணாம சங்கிலியில் முக்கியமான இனம் ஆகும்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காணப்படும் சிறிய உயிரினம் அது. பார்ப்பதற்கு ஒரு சிறிய தேங்காய் அளவே உள்ள இதை முள்ளெலி என்கிறோம். முள்ளம்பன்றிகளும் இவையும் வேறுபட்டவை. முள்ளெலிகள் உடல் அளவில் சிறியவை. தென்னிந்திய காட்டை ஒட்டிய பொட்டல் - பனை நிறைந்த தரிசு
நிலத்தில் உள்ள புதர்களுக்குள் தென்படும் சிறிய உயிரினம் முள்ளெலி. அறிவியல் பெயர்: Paraechinus nudiventris. தென் தமிழகத்தில் இதை ‘இறுமலெலி’ என்றே அழைக்கிறார்கள். சுருண்டுகொள்ளும்போது ஒரு முள்பந்துபோல மாறும் இவற்றின் உடலின் மேற்பகுதியில் உள்ள முட்கள், இவற்றுக்கு பாதுகாப்பு அரணாக அமைகின்றன. யாராவது அதைத் தொட்டால், சட்டென்று வளைந்து உடலைச் சுருட்டி பந்து போன்ற வடிவத்துக்கு மாறும் சுவாரசியத்தைக் காணலாம். முழுமையாக வளையும் முதுகெலும்பு, மண்டை ஓடு, இலகுவான இடுப்பு, நரம்புகள் போன்றவையே இதற்குக் காரணம்.
இந்தியாவில் கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய பாலூட்டிகளில் முள்ளெலியும் ஒன்று. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (ஐ.யூ.சி.என்.) இதை கவனிக்கப்பட வேண்டிய உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில்…
முள்ளெலிகள் பற்றி, இதன் வாழிடம் பற்றி கடந்த சில வருடங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இந்த விலங்கு வசித்துவருவது தெரிகிறது. இதற்காக நேரடி களஆய்வுகள், நேரடி களப்பணி, வாழிடங்களுக்கு அருகில் உள்ள மக்களிடம் உரையாடல், நேர்காணல், உணவிற்காக அவை பிடிக்கப்பட்ட நிலை, உள்ளூர் செய்தித்தாள் பதிவுகள், அருங்காட்சியக மாதிரிகள் எனப் பல விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தமிழகத்தின் 103 இடங்களில் குறிப்பாகப் புல்வெளி சூழ்ந்த, நகர்ப்புற நிலப்பகுதிகளைச் சுற்றியுள்ள புதர்கள், சிறு மணல்குன்றுகள், பனைமரம் நிறைந்த தருவை நிலப்பகுதிகள் என கடல் மட்டத்திலிருந்து உயரம் குறைந்த பகுதிகளில் முள்ளெலிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வறண்ட பகுதிகளில் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பான தகவமைப்பை இவை கொண்டுள்ளன. அதிக வெயில், தண்ணீர் எளிதில் கிடைக்காத பொட்டல் காட்டில் வாழ்வதற்கு ஏற்ற அசாதாரண உடல் தகவமைப்பை இவை பெற்றுள்ளன.
தமிழகத்தின் ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொட்டல் காடுகள், சிறிய மலைப்பாங்கான இடங்களில் இவை வாழ்வதற்குப் பொருத்தமான சூழலியல் நிலவுவதைக் கண்டறிந்தோம். குறைவான ஆண்டு மழைப்பொழிவு, சிறிய தாவரங்கள் நிறைந்த தென் தமிழக கிராமப்புற பகுதி, கேரளத்தின் ஒட்டப்பாலம் ஆகிய பகுதிகளில்
முள்ளெலிகள் வாழ்வதற்கு ஏற்ற சாத்தியக்கூறு இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
கவனத்துக்குரிய அம்சங்கள்
* இவை பொதுவாக அதிகாலை,அந்தி சாயும் மாலை-இரவு நேரத்தில் சாலையில் அடிபட்டு இறப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக நாங்குநேரி, திசையன்விளை, ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சாலை எனப் பட்டியல் நீள்கிறது. சாலையில் செல்லும்போது ஏதோ தேங்காய் நகர்வதை போன்று தென்பட்டால், அவை முள்ளெலிகளாய் இருக்கலாம். வண்டியை நிறுத்தி, அவை கடந்த பிறகு செல்லலாம்.
* புல்வெளி நிறைந்த பகுதிகள் பலவும் அழிக்கப்பட்டு காகிதம் தயாரிக்கப் பயன்படும் சில மரங்களை நட்டு வளர்ப்பதால், இயற்கையான புல்வெளி பகுதிகள் பலவும் முள்ளெலிகள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிட்டது.
* வேட்டையும், மழை வரத்து சரியாக இல்லாததும் முள்ளெலிகளின் அழிவை துரிதப்படுத்துகிறது
என்ன செய்ய வேண்டும்?
சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர், பாளையங்கோட்டை, சங்ககிரி போன்ற நகர்புறத்தில் வசிக்கும் முள்ளெலிகள் வாழிட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம், உள்ளூர் வேட்டைக்காரர்கள் மூலமாக குறைந்துவருவது கவலை தரும் செய்தி. இன்னும் 10 வருடங்களில் தமிழகத்தில் முள்ளெலிகள் எண்ணிக்கை மேலும் குறையலாம்.
ஆய்வு மேற்கொண்டபோது முள்ளெலிகள் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக பலரும் வருத்தத்துடன் பதிவுசெய்தார்கள். குறிப்பாக அவற்றின் வாழிடங்கள் துண்டாடப்பட்டது, மக்கள்நெருக்கம் அதிகரிப்பு, பொருத்தமான வாழிடத்தை இழப்பது, காலநிலை மாற்றம் ஆகியவை முள்ளெலிகள் அழிவுக்கு அடிப்படைக் காரணம். மேய்ச்சல் நிலங்களில் இருந்த தாவரங்கள் பெருமளவு குறைந்துபோனதும், மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததும், பருவமழை சரியாக பெய்யாததும்கூட முள்ளெலிகள் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.
புதிய மேம்பாட்டு திட்டங்களைத் தொடங்கும்போது, சூழலியல் மேலாண்மை தொடர்பான தெளிவான அணுகுமுறை தேவை. காற்றாலை மின்னுற்பத்தி போன்றவற்றை
நடைமுறைப்படுத்தும்போது, அதனால் குறிப்பிட்ட சூழலியல், உயிரினங்கள் மேல் ஏற்படும் பாதிப்புகளை கவனமாக ஆராய வேண்டும். முள்ளெலிகள் மீது பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராமப்புறங்களில் முள்ளெலிகள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. எனவே, அவற்றைப் பாதுகாக்கும், ஆராயும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளது. வெளிநாடுகளில் முள்ளெலிகள் பாதுகாப்பிற்காக தோட்டம் அமைக்கிறார்கள், வாழிட இணைப்புப் பாலங்களை கட்டுகிறார்கள். முள்ளெலி பாதுகாப்பிற்காக தேசிய நாட்களை அறிவித்து விழிப்புணர்வை பரவலாக முன்னெடுக்கிறார்கள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT