Last Updated : 20 Feb, 2016 12:33 PM

 

Published : 20 Feb 2016 12:33 PM
Last Updated : 20 Feb 2016 12:33 PM

நெருக்கடியில் தத்தளிக்கும் மாயாறு நீர்நாய்கள்

சென்னையிலுள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றவர்கள், ஒரு பெரிய குழிப் பகுதியின் நடுவிலிருக்கும் கண்ணாடித் தொட்டியின் உள்ளே நீந்துவது, சட்டெனத் தலையைத் தூக்கி எட்டி பார்ப்பது, இரை போடப்பட்டால் துள்ளிக் குதித்து வருவது என்றிருக்கும் ஓர் உயிரினத்தைப் பார்த்திருக்கலாம். விளையாட்டுத்தனம் நிரம்பிய உயிரினங்களில் ஒன்றான நீர்நாய்தான் அது.

அழிவின் விளிம்பில்

இந்த நீர்நாய் வகை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வாழ்பவை. ஆனால், இன்றைக்கு அவற்றின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுற்றுச்சூழல் சீரழிவு, கடத்தலுக்காக வேட்டை, வாழிட அழிப்பு, உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளால் அவை அழிந்து வருகின்றன.

உலகம் முழுவதுமே நீர்நிலைகள் மாசுபடுவதால் முதலில் பலியாகும் உயிரினங்கள் நீர்நாய்களே. சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் ஆகிய நாடுகளில் நீர்நாய்கள் அழிந்துவிட்டன. மற்ற நாடுகளிலும் அருகிவரும் உயிரினமாக உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் தொடங்கி, பவானிசாகர் அணையை வந்தடையும் மாயாறு ஆற்றின் கரையில் நீர்நாய்கள் வசிக்கின்றன.

மாயாற்றில் ஆய்வு

“கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் இயல்பாகவே இயற்கையின்மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நீர்நாய்கள் பற்றி சிறிய படக்காட்சி யூ-டியூப்பில் ஒருமுறை பார்த்தேன். அது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீர்நாய்களை அழிவிலிருந்து மீட்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில்தான், ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தேன். நீர்நாய்களைக் காப்பதற்கான முதல்கட்ட முயற்சியே எங்களுடைய ஆய்வு…” என்கிறார் கே. நரசிம்மராஜன்.

திருவாரூர் மாவட்டம் வீரவாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். தனது நண்பர்கள் எஸ். பழனிவேல், எஸ். விக்னேஷ்வரன், அபிஷேக் கோபால் ஆகியோருடன் இணைந்து மாயாறு ஆற்று நீர்நாய்களின் வாழிடம் பற்றிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பேராசிரியர் மனோதாமஸ் மத்தாய் ஆய்வு முயற்சிக்குப் பெரிய தூண்டுதலாக இருந்திருக்கிறார். ஆய்வைச் சிறப்பாக மேற்கொள் வதற்கு, கடந்த ஆண்டு கனடாவின் கால்கரி நகரில் நடைபெற்ற ‘இளம் ஆய்வாளர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும் பயிலரங்கு’ நரசிம்மராஜனுக்கு சிறந்த முறையில் வழிகாட்டியுள்ளது.

கேமரா பதிவு

மாயாற்றின் கரையோரப் பகுதிகளில் இரண்டு வகை நீர்நாய்கள் காணப்படுகின்றன. உருவத்தில் பெரிதானவை ஆற்று நீர்நாய் (smooth-coated otter), சிறியவை காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter) என்று அழைக்கப்படுகின்றன. நீர்நாய்கள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவை. மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்துகொள்ளக் கூடியவை.

நேரடியாக இவற்றைப் பற்றிய ஆய்வு செய்வது கடினமானது என்பதால், அவை அதிகம் நடமாடும் இடங்களில் கேமராவை வைத்துப் பதிவுசெய்ய ஏற்பாடுகளைச் செய்தோம். தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், இவற்றைப் பிரித்து அடையாளப்படுத்துவது கடினம்.

தப்பிப் பிழைக்குமா?

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த நீர்நாய்கள் ஒரே நேரத்தில் 2 முதல் 6 குட்டிகள்வரை ஈனும், 16 ஆண்டுகள்வரை உயிர் வாழும். நீரிலும் நிலத்திலும் வாழும் தகவமைப்பை கொண்டவை. இறால், நண்டு, நத்தை போன்றவற்றை உட்கொள்ளும்.

“உணவுப் பற்றாக்குறையும் வேட்டையாடுதலுமே நீர்நாய்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதற்கான முக்கியக் காரணம். நீர்நாய்கள், நீர்நிலைகளின் முதன்மை உயிரினங்கள். அவற்றை அழிவதைத் காப்பதற்கு, சீரழிந்துவரும் நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் முதல் படி” என்கிறார் நரசிம்மராஜன். கீரிப்பிள்ளை போலிருக்கும் இந்த நீர்நாய்களின் எதிர்காலம் தப்பிப் பிழைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



ஆற்று நீர்நாய்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x