Last Updated : 06 Feb, 2016 12:23 PM

 

Published : 06 Feb 2016 12:23 PM
Last Updated : 06 Feb 2016 12:23 PM

முன்னத்தி ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம்

அடுக்குமுறை சாகுபடி என்பது இன்றைய இயற்கை வேளாண்மையில் முன்னேறிய நுட்பம். இயற்கை வேளாண்மை விதிகளில் ஒன்று ‘அதிகபட்ச வெயில் அறுவடை'. அதாவது குறிப்பிட்ட ஓர் இடத்தில் எவ்வளவு அதிகமாகச் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி, அதன் ஆற்றலைப் பயிர்களின் பச்சையத்தின் வழியாகச் சர்க்கரையாக (குளுகோஸாக) மாற்றுகிறோமோ, அப்போதுதான் விளைச்சலின் பயன் கூடுதலாகக் கிடைக்கும்.

இதற்குக் குறிப்பிட்ட ஓர் இடத்தில், குறிப்பிட்ட ஒரு பயிர் மட்டும் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அப்படி ஒன்றை மட்டும் பயிர் செய்தால், அதற்கு ஓரினச் சாகுபடி (monoculture) என்று பெயர். ஓரினச் சாகுபடி செய்வது பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவரக் கூடியது. பூச்சி தாக்குதல் முதல் சந்தைத் தாக்கம்வரை பல நெருக்கடிகள் வரும். இதற்கு மாற்றாகப் பல்லுயிர் சாகுபடி (polyculture) என்பது வெயில் அறுவடையில் மிகச் சிறந்த முறை.

இயற்கையிடம் கற்றுக்கொள்ளுதல்

இயற்கை வேளாண்மையின் முக்கிய விதிகளில் ஒன்று ‘காடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல்'. எடுத்துக்காட்டாக, ஒரு காட்டில் மட்கு எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். முற்றிய இலைகள், கிளைகள் காட்டில் உதிர்கின்றன, பறவைகள், விலங்குகள் அவற்றின் மீது தங்களுடைய எச்சத்தை இட்டுச் செல்கின்றன. இந்த எச்சங்கள் இலைகளையும் தழைகளையும் மெல்ல மூடுகின்றன. பின்னர் அதன் மீது மழை பொழிகிறது அல்லது பனி பெய்கிறது. இப்படியாக ஒரு மூன்றடுக்குச் செயல்பாடு நடைபெறுகிறது.

அதாவது முதலடுக்கு, இலை/தழைகள், இரண்டாம் அடுக்கு விலங்குகளின் எச்சம், மூன்றாம் அடுக்கு நீர். மரங்களில் கவிகை மூலமாக இந்த மூன்றடுக்கின் மீது நிழல் விழுகிறது. இப்படியாக இயற்கை தனக்குரிய ஊட்டத்தை, தானே தயாரித்துக் கொள்கிறது. இந்த இயற்கையின் நிகழ்வைச் சற்று முறைப்படுத்தி ‘மட்கு எரு’ எனப்படும் கம்போஸ்ட் தயாரிக்கும் முறையைச் செய்கிறோம்.

நான்குக்குப் பத்து என்ற அளவிலான இடத்தைத் தேர்வு செய்து அதில் இலை/தழைகள், சாணம் ஆகியவற்றைப் போட்டு மட்கை உருவாக்குகிறோம். இது காட்டிடம் இருந்து கற்றுக்கொள்ளும் விதிகளில் ஒன்றாக உள்ளது. இப்படியே காட்டில் நடக்கும் செயல்பாடுகள் மூலம் புதிதாகப் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.

பிரிக்க முடியாத பிணைப்பு

ஒரு காடு எப்படிச் செடி வளர்க்கிறது என்று பார்ப்போம். வெயிலை அறுவடை செய்யும் மிகச் சிறந்த வல்லுநராகக் காடு விளங்குகிறது. மிகச் சிறிய அளவு இடத்தையும் வீணாக்காமல், அது செடிகளை உருவாக்குகிறது. எந்த இடத்தில் எந்த பயிரினம் இருக்க வேண்டும் என்று செம்மையாக உறுதி செய்கிறது. குறிப்பாக நிலத்துக்கு அடியில் பயன் தரும் கிழங்குகள், குமிழங்கள், மண்ணைப் போர்த்தி வைக்கும் மூடாக்கு பயிர்கள், சிறு செடிகள், குறு மரங்கள், பெருமரங்கள், நெடிதோங்கிய மரங்கள், மரங்களில் பற்றி படரும் கொடியினங்கள் என்று ஒரு துளி வெயில்கூட வீணாகாமல் அறுவடை செய்யும் அரிய அமைப்பு, நம்முடைய வெப்ப மண்டலக் காடுகளின் அமைப்பு.

மேற்கூறிய அடுக்கு என்பது ஒரு அமைவு (system), அமைப்பு (structure) அல்ல. இதில் இருந்து ஏதாவது ஓர் உயிரினத்தை நீக்கிவிட்டால், அந்தக் காடு பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். நுண்ணுயிர்கள் முதல் வானளாவிய மரங்கள்வரை அங்கு இருக்க வேண்டும். இதைப் பின்பற்றியே அடுக்குமுறை சாகுபடி செயல்படுகிறது. இதை அடிசில் சோலை (food forest) என்று அழைக்கிறோம். ஆஸ்திரேலியாவில் கானகத் தோட்டம் (forest gardening) என்ற பெயரில் இது பரவி வருகிறது.

‘அடிசில் சோலை' என்ற இந்தக் காடு, நமது பண்டைத் தமிழர் வழங்கிய கொடைகளில் ஒன்று. சங்க இலக்கியங்களில் இதை நம் முன்னோர் விளக்கியுள்ளனர். இதை இன்றைய அறிவியல் சொல்லாடல்களில் விளக்க முனைகிறோம். ஆனால், எல்லாம் ஒன்றுதான். வெயிலை வீணாக்காமல் எப்படி அறுவடை செய்வது என்பதுதான் இதன் உட்பொருள்.

சங்க இலக்கியக் காட்சி

சங்க இலக்கியமான கலித்தொகையில் (குறிஞ்சிக் கலி: 5)கபிலர் விளக்கும் காட்சியைப் பார்ப்போம்:

‘பெருமழை பொழிந்த கரியதொரு இராக் காலம், இடியின் முழக்கமோ பெரிதாக இருந்தது, மின்னல் கீற்றுகள் வானில் விளக்கு ஏற்றிப் பின் மறைந்தவண்ணம் இருந்தன, புன்செய் வயலில் விதைத்த பயிர்களை உண்ண விரும்பி தனது இணையுடன் ஓர் யானை விரைந்து வந்தவாறு இருந்தது. அதன் ஓசையைக் கேட்ட கானவன் மிக உயரமாக வளர்ந்திருக்கும் ஆசினிப் பலா மரத்தில் ஏற்கெனவே அமைத்திருந்த பரணில் ஏறினான்.

தனது வலுவான கவணில் கல்லை ஏற்றி யானையைத் துரத்த வீசினான். அவன் வீசிய கல்லானது மாபெரும் மலை வேங்கையின் ஒளிமிக்க பூக்களைச் சிதறி, அதன் பின்னர்ச் சற்றே கீழிறங்கி ஆசினிப் பலாவின் மென்மையான பழத்தைக் கொத்தாக உதிர்த்து, பின்னர் மேலும் இறங்கி அங்கிருந்த தேனடையில் துளையிட்டு, அடுத்து இன்னும் கீழே இறங்கிப் பருத்த அடிப்பாகத்தைக் கொண்ட மா மரத்தின் கொத்தான பூக்களை உலுக்கி, பின்னர்ச் சற்றுக் கீழிறங்கிக் குலை தள்ளிய வாழையின் மடல்களைக் கிழித்து, பின்னர் மேலும் கீழிறங்கி வேர்ப் பலாவின் பழத்தினுள் சென்று புகுந்துகொண்டது.

இப்படியாக வேங்கை, ஆசினிப் பலா, மா, வாழை கடைசியாக வேர்ப் பலா என்று ஐந்து அடுக்குகளைக் கபிலர் விளக்குகிறார். மனதைக் கவ்வும் இந்தச் சூழல் ஓவியம், அணிநிழற்காடான ஒரு சோலைக் காட்டின் பதிவாகும்.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x