Published : 17 Jul 2021 10:39 AM
Last Updated : 17 Jul 2021 10:39 AM

பசுமை சிந்தனைகள் 14: சூழலியலைச் சீரழிப்பது படுகொலை இல்லையா?

நாராயணி சுப்ரமணியன் 

வியட்நாம் போரின்போது லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளிலும் வயல்களிலும் மறைந்திருந்த எதிரிப் படைகளை வெளியில் கொண்டுவருவதற்கு என்று சொல்லி ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்கிற களைக்கொல்லியை மரங்களின் மீது விமானங்கள் மூலம் அமெரிக்கா தூவியது. கிட்டத்தட்ட 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காடுகள் இதனால் அழிந்தன. ஏஜென்ட் ஆரஞ்சின் அடிப்படை வேதிக்கூறுகளை ஆராய்ந்த ஆர்தர் கால்ஸ்டன் என்கிற அறிவியலாளர், வியட்நாமுக்குச் சென்று அலையாத்தி மரங்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வுசெய்தார். “ஏஜென்ட் ஆரஞ்ச் போன்ற வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவது சூழலியல் படுகொலை (Ecocide)”என்று 1970இல் அவர் அறிவித்தார்.

சூழலியல் படுகொலை பற்றிய இந்தக் கருத்தாக்கம், ‘சட்டவிரோதமாக, வேண்டுமென்றே இயற்கையை அழித்தல்’ என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டினால் சுற்றுச்சூழல் தீவிரமாகவும் பரந்துபட்டும் பாதிக்கப்படும் என்றால், அது சூழலியல் படுகொலையே. ஐ.நா. அவையில் 1972இல் பேசிய ஸ்வீடனின் அப்போதைய பிரதமர் ஓலாஃப் பால்மே, வியட்நாம் போரில் ஏஜென்ட் ஆரஞ்சை அமெரிக்கா பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது என்றும், இவ்வாறான சூழலியல் படுகொலைகள் சர்வதேச கவனத்துக்கு வர வேண்டும் என்றும் எச்சரித்தார்.

சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்த ரோம் சாசனத்தில் (Rome Statute) சூழலியல் படுகொலையைக் குற்றமாக அறிவிப்பது பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆனால், 1996இல் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகள், இதற்கான வரையறை தெளிவாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்ததால் சர்வதேசக் குற்றங்கள் பட்டியலிலிருந்து அது நீக்கப்பட்டுவிட்டது. குற்றங்கள் பட்டியலில் இருப்பவை: இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், மூர்க்கமான குற்றங்கள், போர்க் குற்றங்கள்.

இவற்றுள், போர்க்காலங்களின்போது சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைக் குற்றமாக அறிவிக்கும் உட்பிரிவு ஒன்று (ஐ.நா. 1978) உண்டு. ஆனால், அமைதியான காலகட்டங்களுக்கு அது பொருந்துவதில்லை. ஆகவே, தனிப்பட்ட சூழலியல் படுகொலை பற்றிய சட்டம் ஒன்று வேண்டும் என்று சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான், ஆர்மேனியா, உக்ரேன் உள்ளிட்ட பத்துநாடுகளின் தேசியச் சட்டங்கள், சூழலியல் படுகொலையைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கின்றன. இருப்பினும் சர்வதேச அளவில் இந்தக் குற்றத்துக்கான சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே சூழலியல் சீர்கேடுகள் குறையும் என்று அந்நாடுகள் வாதிடுகின்றன.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

வனுவாது, மாலத்தீவு ஆகிய நாடுகள் காலநிலை மாற்றத்தாலும் கடல்மட்டம் உயர்வதாலும் தங்கள் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் ‘தீவு சார்ந்த அறிக்கை’ ஒன்றை வெளியிட்டன. அதில் சூழலியல் படுகொலையைச் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் ஐந்தாவது குற்றமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டது. போப்ஃபிரான்சிஸ், காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உள்ளிட்டோரும் சர்வதேச அளவில் இதற்காகக் குரல் எழுப்பிவருகின்றனர்.

“வாழ்கின்ற சூழலை அழிப்பதன் மூலம், நாகரிகச் சமூகத்தின் அடிப்படையையே நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். இதன்மூலம் வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலமும் பணயம் வைக்கப்படுகிறது. போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலை போன்ற குற்றங்களுக்கும் நிகராக இது பேசப்பட வேண்டும்”என்று சூழலியல் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தால் வாழ்வதற்குத் தகுதியற்றுப்போன செர்னோபில், முறையற்ற சுரங்கச் செயல்பாடுகளால் உருக்குலைந்திருக்கிற வடக்கு கனடாவின் நிலப்பரப்பு, தொடர் எண்ணெய்க் கசிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மெக்சிகோ வளைகுடா, கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டப்படுவதால் தினமும் சுருங்கும் அமேசான் காடுகள் எனப் பல களங்களில் வரலாற்றின் பல்வேறு தருணங் களில் சூழலியல் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. பல நிகழ்வுகள் நடந்துகொண்டும் இருக்கின்றன.

சூழலியல் படுகொலைச் சட்டம்

சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை ஒரு குற்றமாக அறிவிப்பதன்மூலம், சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய நம் மரபுசார்ந்த பார்வை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒரு சர்வதேசக் குற்றமாக அறிவித்தால், நாடுகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கவனமாகச் செயல்படக்கூடும். “சட்டப்படி இது தவறு என்ற ஒரு அறிவிப்பு வந்துவிட்டால், அறம் சார்ந்த அம்சமாக அது மாற்றப்பட்டுவிடுகிறது”என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் ஜோஜோ மேத்தா. சுற்றுச்சூழல் படுகொலையைக் குற்றமாக அறிவிப்பதன்மூலம் சூழலியல் சீர்கேடு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

ஜூன் 2021இல், ஒரு சர்வதேசச் சட்டத்திருத்த வரைவு வெளியிடப்பட்டது. அதில், சூழலியல் படுகொலையை ஐந்தாவது சர்வதேசக் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சூழலியல் படுகொலை ஒரு குற்றமாகக் கருதப்படும். இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் சர்வதேச கிரிமினல் நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டவை அல்ல. சர்வதேச அரசியல் காரணிகளால் இந்த விதிகளுக்கு உட்பட அவை மறுத்திருக்கின்றன. ஆகவே, இந்த நாடுகளுக்கு சூழலியல் படுகொலைச் சட்டம் பொருந்தாது.

இந்தச் சட்டத்திலும் சில சிக்கல்கள் இருப்பதாகச் சட்டப் பேராசிரியரான டேவிட் வொயிட் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு குற்றத் துக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கும். சூழலியல் படுகொலையில் அந்த உள்நோக்கத்தை வரையறுப்பது நடைமுறையில் கடினமாக இருக்கும். காலநிலை மாற்றம் போன்ற சிக்கலான சூழலியல் பிரச்சினைகளில் குற்றவாளியை எப்படி அடையாளம் காண்பது?
இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, சூழலியல் வரலாற்றில் இந்தச் சட்டம் ஒரு மைல்கல். மனித இனத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஒரு முக்கியச் சட்டமாக அது அமையும். சுற்றுச்சூழலுக்கு எதிராக மனிதர்கள் நிகழ்த்தும் வன்முறைக்கு அது முற்றுப்புள்ளி வைக்குமா?

கட்டுரையாளர்,
கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x