Last Updated : 12 Dec, 2015 02:45 PM

 

Published : 12 Dec 2015 02:45 PM
Last Updated : 12 Dec 2015 02:45 PM

முன்னத்தி ஏர் 12: சத்தியமங்கலத்தில் ஒரு ஃபுகோகா பண்ணை

சூழலியல்கோட்பாடுகளில், உயிரியல் பன்மயம் (Biological diversity) என்றொரு கோட்பாடு உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை அல்லது உயிரினங்களை வளர்ப்பது அல்லது வளரவிடுவதே இதன் அடிப்படை. வெவ்வேறு வகையான உயிரினங்கள் ஓரிடத்தில் எவ்வளவு அதிகமாக உள்ளனவோ, அந்த இடத்தை உயிர்பன்மயம் (Biodiversity) மிக்க இடம் என்று குறிப்பிடலாம். இவ்வாறு உயிரினங்களைப் பெருக வைக்கும் செயல்பாட்டைப் பல்லுயிர் பெருக்கம் (Multi lifeform breeding) என்று கூறலாம்.

பன்மயமிக்க ஒரு பண்ணை நாளும் ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம், பல்லாண்டு கழித்து மொத்தமாக ஒரு வருமானம் என்று நீடித்த வருமானத்தைத் தரவல்லதாக இருக்கும். இப்படிப்பட்ட பண்ணை ஒன்றை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள உப்புப்பள்ளத்தைச் சேர்ந்த ரவி உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரசாயன வேளாண்மையில் ஈடுபட்டுப் பெரும் கடன்களைச் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்து வருந்தியவர்.

பன்மய சாகுபடி

பின்னர் இயற்கைவழி வேளாண்மைக்குள் வந்தபோதும் பன்மயப் பண்ணையை உருவாக்குவதற்கு முன்பு, இயற்கை முறையில் கரும்பு மட்டும் சாகுபடி செய்து வந்தார். மிக உச்சகட்ட விளைச்சலையும் எடுத்தார், ஆனாலும் இவருடைய உழைப்பு முற்றிலும் கரும்பாலைக்குப் பயன்பட்டதுடன் வங்கிக் கடன் கட்ட மட்டுமே பயன்பட்டது. இவருக்கு எந்த வருமானமும் வரவில்லை.

தனது பண்ணையைப் பன்மயப் பண்ணையாக மாற்றிய பின்னர், இன்றைக்குப் புகழ்பெற்ற பண்ணையாளராக இவர் மாறிவிட்டார். தன்னுடைய நான்கு ஏக்கர் பண்ணையில் பல்வேறு வகையான பயிரினங்களை வளர்த்துள்ளார். இவருடைய தோட்டத்தில் கால்நடைத் தீவனம் முதல் கட்டை தரும் தேக்கு மரம்வரை உள்ளன. இவர் எட்டு அடி இடைவெளியில் வாழைக் கன்றுகளை நட்டுள்ளார். நாற்பது அடி இடைவெளியில் தென்னை நடவு செய்துள்ளார். இதற்கிடையில் மாதுளை, சப்போட்டா, நெல்லி என்று பழ மரங்களை நட்டுள்ளார். இடையிடையே தீவனப் பயிர்களையும் வைத்துள்ளார். எல்லாமே இப்போது பயன்தரத் தொடங்கிவிட்டன. கால்நடைகளாகத் தலைச்சேரி ஆடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றை வளர்க்கிறார். இவற்றின் கழிவு பண்ணையில் உரமாக மாற்றப்படுகிறது.

தற்சார்புப் பண்ணை

இவருடைய பண்ணை, உழவு செய்யாத பண்ணை. ஏராளமான பண்ணைக் கழிவு மூடாக்காக இடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூடாக்கு செய்துள்ளதால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரித்துள்ளது. மண்ணின் வளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பாசனத்துக்குச் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றுகிறார். இதனால் மிகவும் சிக்கனமான முறையில் தண்ணீர் செலவாகிறது. வேலை ஆட்களின் தேவையும் குறைந்துவிட்டது. இப்படிப் படிப்படியாக, முழுமையும் தற்சார்பு கொண்டதாகப் பண்ணை மாறிவிட்டது. வெளியிலிருந்து எவ்வித வெளியிடு பொருட்களும் தேவைப்படாத பண்ணையாக இது மாறியுள்ளது.

வேறுபட்ட வருமானம்

இப்படி உருவாக்கப்பட்டுள்ள இவருடைய பண்ணையிலிருந்து வாழைப்பழத் தார்களின் மூலம் மாதத்துக்கு ரூ. 2,000; தேங்காயில் மாதத்துக்கு ரூ. 2,000; தேவைக்கேற்ப ஆடுகளை விற்பதன் மூலம் மாதத்துக்கு சராசரியாக ரூ.2,000; எருமை மாடுகள் மூலம் மாதத்துக்கு ரூ. 2,000 வரை கிடைக்கிறது. சப்போட்டாவும் நெல்லியும் இப்போது காய்ப்பு நிலைக்கு வந்துவிட்டன. இவை விரைவில் பயன்கொடுக்கும். இவை தவிரக் குமிழ், தேக்கு, பதிமுகம் என்று பலவகையான மரங்களும் பண்ணையில் வளர்ந்துவருகின்றன.

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்கள், இவருடைய பண்ணையிலேயே கிடைக்கின்றன. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் விளைவித்துக்கொள்கிறார். உணவுக்காக நாட்டுக் கோழிகள் வளர்கின்றன. சில நேரம் இவையும் பணம் தருகின்றன. தன்னுடைய பண்ணையில் கிடைக்கும் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்து நேரடியாக விற்பனை செய்கிறார்.

இவருடைய பண்ணையில் பூச்சித் தாக்குதல் இல்லை. ஏனென்றால், நன்மை செய்யும் பூச்சிகள் நிறையவே உள்ளன. கதம்ப வண்டுகள் எனப்படும் குளவி இனம் மிகப் பெரிய கூட்டைக் கட்டியுள்ளது. இது இவருடைய பண்ணையின் காவலாளியாகவும் செயல்படுகிறது. இவ்வளவுக்கும் இவர் வளர்ச்சி ஊக்கிகளைக்கூடப் பயன்படுத்துவது கிடையாது.

(அடுத்த வாரம்: மண்புழுவே உண்மையான உழவன்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

உப்புப்பள்ளம் ரவி தொடர்புக்கு: 9443724779

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x