Published : 26 Dec 2015 12:34 PM
Last Updated : 26 Dec 2015 12:34 PM
சென்னையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு பிரமிக்கிறோம். ஆனால், அதற்கு நாம் கொடுத்த விலை என்ன என்பதை எப்போது உணரப் போகிறோம்?
சென்னை பெருநகருக்குள் இயற்கையாக ஓடும் அடையாறு, கூவம் ஆகிய இரண்டு ஆறுகள், செயற்கையாக வெட்டப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயுடன் கலக்கும் சிறிய, பெரிய வாய்க்கால்களால் மட்டுமே வெள்ளநீரைச் சுமந்து செல்ல முடியும். இந்த வெள்ளநீர் கூவம், அடையாறு முகத்துவாரங்கள், கோவளம், எண்ணூர் சிறுகுடாக்கள் வழியாகக் கடலில் சேர்கின்றன.
சென்னையில் உள்ள ஆறுகளும் வெள்ளநீர் வடிகால்களும் இன்றைக்கு ஆற்றி வரும் முக்கியப் பணிகள்:
1. மழைக் காலத்தில் வெள்ளநீர், உபரிநீரை வெளியேற்றுதல்
2. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கடலில் சேர்ப்பது
3. திடக் குப்பைகளின் தொட்டியாக இருப்பது
4. கரையோர ஆக்கிரமிப்புகளுக்கான இடமாக இருப்பது
கால்வாயைக் காணோம்
ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் அடையாறின் அதிகப்படி வெள்ளத்தைச் சுமந்து செல்வதுடன், கொடுங்கையூர் கால்வாய், காட்டன் கால்வாய், ஓட்டேரி கால்வாய், மற்றச் சிறு கால்வாய்களின் இணைப்புப் புள்ளியாகச் செயற்கையாக வெட்டப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் திகழ்கிறது. இதன்காரணமாக இது மிகப் பெரிய வெள்ளநீர் வடிகாலாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊருக்குள் கடல்நீர் புகாத வகையில் தடையாகவும் அது செயல்படுகிறது.
ஆனால் இன்றைக்குத் திடக்கழிவு, பாசி, ஆகாயத்தாமரை போன்ற செயற்கைத் தடைகளால் அது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பெருநகர் பகுதியில், அதன் நிஜ அகலத்தில் 25 சதவீதம் பறக்கும் ரயில் பாதைகள், ரயில் நிலையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன, பல இடங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவாக அந்தக் கால்வாய் குறுகியும் உள்ளது.
அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாயின் முகத்துவாரங்கள் மணல் திட்டுகளால் தடைபட்டுள்ளன. திடக்கழிவு மற்றும் ஆக்கிரமிப்புகளால் ஆறுகள், கால்வாயின் அகலமும் பெருமளவு குறைந்துவிட்டது.
ஆபத்தான பகுதிகள் எவை?
இயற்கையாக வெள்ளநீர் வடிந்து செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும் ஆறுகளில் போதுமான அகலம் இல்லாததால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள்: நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு போன்றவை.
சமீபகாலத்தில் மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையான ராஜீவ் காந்தி சாலையில், மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் முறைப்படி இல்லை.
தாம்பரம் முதல் செங்குன்றம் வரையிலான வெள்ளநீர் வடிகாலைச் சென்னை புறவழிச் சாலை ஊடறுத்துச் செல்வதால் அண்ணாநகர், போரூர், வானகரம், மதுரவாயல், முகப்பேர், அம்பத்தூர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளன.
இப்படியாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களிலேயே பெருநகரில் எங்கெங்கு வெள்ளம் வர சாத்தியம் உள்ளது என்பதைப் பற்றிய தகவல்கள், பொறியாளர் டி. காந்திமதிநாதன் சமர்ப்பித்த அறிக்கையில் கிடைக்கின்றன. இந்த அறிக்கையில் கிடைக்கும் மேலும் சில தகவல்கள்
முகத்துவார அளவு
சென்னையின் வெள்ளநீர் வெளியேறு வதற்கு ஆறுகளின் முகத்துவாரம் (கடலுடன் கலக்குமிடம்) இருக்க வேண்டிய அகலம்:
கொசஸ்தலையாறு - எண்ணூர் முகத்துவாரத்தில் 120 மீட்டர், கூவம் 150 மீட்டர், அடையாறு 300 மீட்டர், முட்டுக்காடு 100 மீட்டர்.
இந்த முகத்துவாரங்கள் ஆண்டின் பெரும்பாலான காலம் மணல் திட்டால் மூடப்பட்டிருக்கின்றன. மழைக்காலங்களில் மட்டுமே இந்த முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுத் திறக்கப்படுகின்றன.
என்ன கற்றோம்?
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறையும் பெருமழை, வெள்ளத்தில் சிக்கிச் சென்னை சேதமடைந்து வருகிறது: 1976, 1985, 1996, 2005, மற்றும் 2015. இதில் ஒரு சுழற்சியைப் பார்க்க முடியும். எனவே, வெள்ளம் என்பது சென்னைக்குப் புதிதல்ல. திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதுதான் அவசியம்.
இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது, வெள்ளம் வருவதற்கான சாத்தியம் குறித்து இத்தனை அரசு ஆவணங்களும், சிறந்த பொறியாளர்களும் இருந்தும்கூட, எதிர்காலத்தில் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள பேரிடரை முன்னெச்சரிக்கையுடன் களைய, இத்தனை ஆண்டுகளாக எந்த அரசு முன்வந்தது? அரசு ஆவணங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறிந்து செயல்படுத்தத் தூண்ட மக்களும்கூட முனையவில்லை என்பது வேதனைக்குரியது.
வெள்ளம் வருவதற்கான சாத்தியம், நீர்நிலைகள் பாதுகாப்பு, நகரக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடந்த காலத்தில் பல முறை சுட்டிக்காட்டியும் எச்சரித்தும்கூட அரசோ, மக்களோ கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறார்கள் என்று போலியாகக் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டது.
எதிர்காலத்தில் வாரச் சாத்தியமுள்ள பேரிடர்களில் இருந்து, இப்போதாவது பாதுகாத்துக் கொள்வோமா?
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: hkinneri@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT