Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM
நாவல் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் 2020-ல் உலகெங்கும் ஊரடங்கு அமலில் இருந்தபோது ‘மனிதர்கள்தான் கிருமிகள், இயற்கை தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு இது’ என்பது போன்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
மனித நடமாட்டம் குறைந்ததால் அச்சமின்றித் தெருக்களில் உலவும் காட்டுயிர்கள், வாகனப் புகை இல்லாததால் பெருநகரங்களில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் அதிகரித்தது போன்றவை அதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சுட்டப்பட்டன. மனிதர்களே இல்லாத புவியில் இயற்கை தன் இயல்பு குலையாமல் இருக்கும் என்று சில கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அதிகரித்துவரும் சூழலியல் பாசிசத்தின் (Ecofascism) வெளிப்பாடு இது என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்த மனித இனமும் இயற்கையை அழிக்கும் கிருமியாக இருக்கிறது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமானால் சில மனிதர்களை அழித்தால் தவறில்லை என்பதே. ‘மனித இனம் இயற்கையை அழிக்கும் புற்றுநோய்’ என்பது போன்ற கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்படும்போது, சூழலியல் பாசிச மனப்பான்மையின் மையக்கருத்து பரவலாக அனைவர் மனத்திலும் பதிந்துவிடுகிறது.
அதீத தீர்வுகள்
1970-களில் நவீனச் சூழலியல் பாதுகாப்பு இயக்கங்கள் உருவான போது இந்தக் கருத்தாக்கம் உச்சத்தில் இருந்தது எனலாம். “புவியைப் பாதுகாப்பதற்காகச் சில இனக்குழுக்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்பதே சூழலியல் பாசிசத்தின் எதிர்பார்ப்பு” என்கிறார் எழுத்தாளர் மைக்கேல் ஸிம்மர்மேன். மனிதர்களில் ஒரு சில உயர்ந்த இனங்களால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் உருவான கருத்தாக்கம் இது.
அவர்களைத் தவிர மற்ற அனைவரும் சூழலியலைச் சீர்குலைக்கிறார்கள் என்பதால், அப்படி அடையாளப்படுத்தப்படு பவர்களை அடக்கி ஒடுக்க சூழலியல் பாசிசம் அனுமதிக்கிறது. கறுப்பின மக்கள், புலம்பெயர்ந்த வெளிநாட்டவர், லத்தீன் அமெரிக்கர்கள், அகதிகள், பால்புதுமையினர் (Queer), பெண்கள், ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சூழலியல் குற்றவாளிகளாகக் கருதுகிறது சூழலியல் பாசிசம்.
இந்தக் கருத்தாக்கம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இனவாத அடிப்படையிலான தீர்வை முன்வைக்கிறது. “வளர்ந்துவரும், மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சூழலியலைச் சீர்கெடுக்கிறார்கள்” என்று மேலை நாடுகள் கருதுவதும் சூழலியல் பாசிசத்தின் நீட்சியே. மக்கள்தொகைப் பெருக்கமே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணம் என்று நிறுவி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமானால் சில இனக்குழுக்களின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்வதில் தவறில்லை என்கிறது இந்தக் கருத்தாக்கம்.
குழப்பக் கருத்துகள்
1988 முதல் உமிழப்பட்ட மொத்தப் பசுங்குடில் வாயுக்களில் 71 சதவீதத்துக்கு நூறு பெரு நிறுவனங்கள்தாம் காரணம் என்கிறது ஒரு தரவு. ஆனால், சூழலியல் பாசிசமோ, மக்களில் ஒரு பிரிவினர் பொறுப்பற்று நடந்துகொள்வதாலேயே சூழலியல் சீர்கெடுகிறது என்று கண்மூடித்தனமாக நம்புகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தினால் அல்லது ஒழித்துவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதே இவர்கள் வலியுறுத்துவது.
பால் எர்லிஷ், காரட் ஹார்டின் உள்ளிட்ட பிரபல சூழலியல் பாசிஸ்டுகள், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காகச் சிறிது காலத்துக்கு ஜனநாயக நடைமுறைகளை ஒத்திப்போட்டு விட்டு அனைவரையும் ‘திருத்தலாம்’ என்கிறார்கள். குறைவான வளங்களுடன் மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது, அதைப் பங்கிட வருபவர்களைத் தாக்குவது தவறில்லை என்கிறார் பின்லாந்தைச் சேர்ந்த பென்ட்டி லின்கோலா.
சூழலியல் பாதுகாப்பு என்பதை ஆயுதமாகப் பயன்படுத்தி, தொல்குடியினரைத் துன்புறுத்துவது, காடுகளைப் பாதுகாக்கும் போர்வையில் பூர்வகுடிகளை வெளியேற்று வது ஆகியவையும் சூழலியல் பாசிச நடவடிக்கைகளே. இது சூழலியல் சர்வாதி காரம் (Eco authoritarianism) எனப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளிலும் இந்த மனநிலை அதிகமாகத் தென்படுவதாக விமர்சிக்கிறார் அறிவியலாளர் நவோமி க்ளெய்ன்.
பாதை எது?
சமூகத்திலும் சுற்றுச்சூழலிலும் ஒரு சில இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே தூய்மையானதாகவும் மேன்மையானதாகவும் இருக்கும் என்பது சூழலியல் பாசிஸ்டுகளின் வாதம். குறிப்பிட்ட இனக்குழுக்களை மட்டும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்துவதோ, அவர்களை வெளியேற்றுவதும் கட்டுப்படுத்து வதும் சூழலியல் பாதுகாப்புக்கான தீர்வில் முக்கிய அங்கமாக இருந்தாலோ அங்கே சூழலியல் பாசிசம் பின்பற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தொடர்ச்சியான சூழலியல் சீர்கேடுகளால் காயப்பட்டிருக்கும் இயற்கையைக் குணப்படுத்த வேண்டுமானால், இயற்கை குறித்த நம் பார்வை மாற வேண்டும். சுரண்டப்பட வேண்டிய ஒரு வளமாக, தனிப்பட்ட மதிப்புகள் ஏதுமற்ற ஒரு ஜடப்பொருளாக இயற்கையை நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும். தற்போதைய இயற்கைச் சீர்குலைவுக்கு மனித குலத்தின் முந்தைய தவறான போக்கு காரணம். அதேநேரம் அதைத் தடுத்து நிறுத்துவதும், இயற்கைக்குச் சாதகமான பாதைக்குத் திரும்பு வதும் மனிதர்களுடைய கைகளில் இருக்கிறது. அதை யாரோ சில தனித்த குழுக்கள் செய்துவிட முடியாது. ஒட்டுமொத்த உலகமும் அந்தத் திசையில் பயணித்தாக வேண்டும்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT