Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM
பூவுலகில் தோன்றிய எந்த உயிரினமும் அது வாழும் வீட்டை அழிப்பதில்லை; அழிக்க முனைவதுமில்லை. புவியின் பரிணாம வளர்ச்சியில் கடைசியாகத் தோன்றிய மனிதர்களான நாம், புவியை முழுமையாகக் கட்டுப்படுத்த அல்லது புவியை நம்முடைய தேவைக்கானதாக மட்டும் மாற்றுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறோம். இது எங்கே போய் முடியப்போகிறது?
மனித இனத்தை மையப்படுத்திய சிந்தனை (Anthropocentrism) என்பது, புவியிலுள்ள மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் மனித இனம் மட்டுமே உயர்ந்தது என்கிற கருத்தாக்கத்திலிருந்து பிறந்தது. 1860-களின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் இந்தக் கருத்தாக்கம் முழுமைபெற்றது எனலாம். மனிதனையும் இயற்கை யையும் எதிரிடையாக நிறுத்துவது (Man Vs Nature), அல்லது எல்லா உயிரினங்களையும் படிநிலையில் அடுக்கி அதன் உச்சியில் மனித இனத்தை வைப்பது என்று இந்தப் பார்வைக்கு இரண்டு வடிவங்கள் உண்டு.
ஆதிக்க உணர்வு
மனித இனம் படைக்கப்பட்ட விதம் பற்றிய நம்பிக்கைகளும், மனித இனத்துக்கே உரிய தனிப்பட்ட குணங்கள் குறித்த அதீத பெருமித உணர்வுமே இந்தக் கருத்தாக்கத்திற்கு வித்திட்டன. "மற்ற உயிரினங்களுடன் தன்னை ஒப்பிட்டுப்பார்த்த மனித இனம் மொழி, தர்க்கம், அறம் பற்றிய புரிதல், நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்பம், தன்னுணர்வு போன்றவை தனக்கு மட்டுமே இருக்கின்றன; அதனால், மனித இனமே எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தது" என்கிறார் சூழலியல் அறம் பற்றி ஆராய்ந்துவரும் எய்லீன் கிறிஸ்ட். இவற்றில் பல அம்சங்கள் மற்ற உயிரினங்களிடமும் உண்டு என்பதைப் பின்னாளில் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின. ஆனாலும், மனித இனத்தின் பெருமித உணர்வு அவ்வளவாக மட்டுப்பட்டுவிடவில்லை.
“மனித இனத்திற்கு மட்டுமே உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) என்பது உண்டு. இயற்கையின் மற்ற அங்கங்கள் மனிதனுடன் உள்ள தொடர்பினாலேயே மதிப்பைப் பெறுகின்றன” என்பது இந்தக் கருத்தாக்கத்தின் நீட்சி. உதாரணமாக, “ஒரு மரம் ஆண்டுக்கு இத்தனை லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது” என்கிற கூற்றில் மனிதனை மையப்படுத்திய சிந்தனையே ஆதிக்கம் செலுத்து கிறது.
தேனீக்களுக்குத் தனிப்பட்ட சூழலியல் மதிப்புகள் இருக்கலாம். ஆனால், மேற்கண்ட கருத்தாக்கத்தின் படி, மனிதர்களுக்குத் தேவையான பழ மரங்கள், பூச்செடிகளுக்கு மகரந்த சேர்க்கை செய்ய உதவுவதால் மட்டுமே தேனீக்களுக்கு மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு இருண்ட பக்கமாக, மனிதனுக்கு உதவாத எல்லா உயிரினங்களும் மதிப்பற்றவையாகக் கருதப்படுகின்றன. அவற்றை அழித்தொழிப்பதும் நியாயப்படுத்தப் படுகிறது.
தவறான பார்வை
இயற்கையின் எல்லா அங்கங்களும் மனித இனத்தின் தேவைகளுக்காக மட்டுமே இருக்கின்றன; இந்தப் புவி மனித இனத்துக்கு மட்டுமானது என்பதும் இந்தக் கருத்தாக்கத்தின் மற்றொரு கோணம். வாழ்வாதாரத்துக்காக மட்டுமின்றி, அதிக பணம் ஈட்டவோ, பொழுதுபோக்குக்காகவோ, அதிகாரத்தை நிலைநிறுத்தவோ இயற்கையை அழிப்பதையும் இந்தப் பார்வை அனுமதிக்கிறது.
இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறோம் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால், சூழலியல் தொடர்பான முக்கிய முடிவுகளில் மனிதர்களை மையப்படுத்திய இந்தக் கருத்தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சூழலியல் சார்ந்த பல தொடக்கக்கால சட்டங்களுக்கும் இந்தச் சிந்தனைதான் அடிப்படை. சூழலியல் சார்ந்த மக்கள் இயக்கங்களின் தாக்கம் சமூகத்தில் ஏற்பட்ட பிறகு, அடுத்தடுத்த சட்டத் திருத்தங்களில் இந்தச் சிந்தனையின் வீச்சு குறைந்திருப்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
கைவிடப்படும் இயற்கை
மேலை நாட்டு நம்பிக்கைகளின் நீட்சியாக இந்த எண்ணம் உருவானது என்கிறபோதிலும், இதன் சுவடுகள் எல்லா நாடுகளின் சூழலியல் திட்டவரைவுகளிலும் காணப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படாத பகுதிகளில் நிகழும் பல சூழலியல் சீர்கேடுகள் இந்த எண்ணத்தால் விளைந்தவையே. இரண்டாம் உலகப் போரின்போது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் பல இடங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. அவை இன்றும் பல இடங்களில் கடல் பாலூட்டிகளின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்றன. மனித இனத்துக்கு இதனால் அதிக பாதிப்பில்லை என்பதால், இந்தப் பிரச்சினை பேசுபொருளாவதில்லை.
உணவு, உடை, கட்டுமானத் தொழில், ஆற்றல், போக்குவரத்து என்று மனித இருப்புக்கு அடிப்படையாக விளங்கும் எல்லாத் துறைகளும் சூழலியல் சீர்கேட்டுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன. தேவைகள் அதிகரிக்கும்போதும் தொழில்கள் விரிவடையும்போதும் மனிதனை மையப்படுத்திய சிந்தனையின் அடிப்படையிலேயே இயற்கை கைவிடப்படுகிறது.
இயற்கை எவ்வளவு நுணுக்கமான தொடர்புகளைக் கொண்டதோ, மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பும் அதே அளவுக்கு நுணுக்க மானது. அதை ஒற்றைத்தன்மையுடன் அணுகிவிட முடியாது. மாறாக, இயற்கை யிலிருந்து மனிதன் தன்னையே துண்டித்துக் கொண்டு பார்க்கும் போக்கு ஆபத்தானது.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT